meta property="og:ttl" content="2419200" />
நம் அனைவருக்கும் தோற்றப் பொலிவில் அக்கறை காட்டவே ஆர்வம் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை. நடுத்தர வயதை எட்டும்போதே முதுமைத் தோற்றம் எட்டிப் பார்ப்பதை எவரும் விரும்ப மாட்டார்கள். இதைத் தடுக்கக்கூடிய சூட்சுமம் நம் கையில்தான் உள்ளது. அதற்கான 8 வழி முறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்
ஹார்மோன்கள் சம நிலையில் சுரக்கவும், மன அழுத்தம் குறையவும் உதவுவது ஆழ்ந்த அமைதியான தூக்கம். போதுமான அளவு தூக்கமின்றி, தூக்கத்தில் குறையேற்படும்போது வயதாகும் செயல் நார்மலாக இல்லாமல் போகும். உடல் வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் சுரப்பை வெளியிடுவதிலும் எதிர்மறை விளைவு உண்டாகும்.
உடலிலுள்ள ட்ரில்லியன் கணக்கான செல்களையும் சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடியது டீஹைட்ரேஷன். தேவையான அளவு நீர் குடித்து சருமத்தை ஈரத்தன்மையுடன் பராமரிப்பது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.
நம் வயது கூடும்போது நம் தசைகளின் கெட்டித் தன்மை குறையும். இதனால் சருமம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பாதிப்பு உண்டாகும். எனவே, சக்தியை அதிகரித்து தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க ஸ்கிப்பிங் போன்ற அடிப்படை உடற்பயிற்சியின் மூலம் மூட்டுக்களின் அசைவுகளை ஸ்திரப்படுத்திக்கொள்வது அவசியம்.
அதிகளவு சர்க்கரை உண்பதால், சக்தியின் பயன்பாடு, உடற் கட்டமைப்பு, ஹார்மோன் சமநிலை மற்றும் கிளைக்கேஷன் (Glycation) செயல்களில் எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணும். அதன் தொடர்ச்சியாக கொலாஜன் செல்கள் புத்துருவு பெறுவதில் குறைபாடு ஏற்படும். இதனால் சருமத்தில் தொய்வு மற்றும் சுருக்கங்கள் உண்டாகும்.
மன அழுத்தம் நம் தோற்றத்தில் வேகமான மாற்றத்தை உண்டுபண்ணக் கூடியது. மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதால் உடலின் கார்ட்டிசோல் அளவை சமநிலைப்படுத்தி உடல் தோற்றத்தை பொலிவுறச் செய்யலாம்.
அதிகமான ஆல்கஹால் உட்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களின் உள்ளுறுப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளும் பாதிப்படைந்து சருமத்தில் வயதான தோற்றம் உண்டாவதற்கு வழி வகுக்கும்.
பாஸ்ட் ஃபுட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களின் உடல் எடை கூடும்; கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்; நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டாகும்; மெட்டபாலிச ரேட் குறையும். இவை யாவும் மொத்த உடல் ஆரோக்கியம் கெடவும் முதுமைத் தோற்றம் பெறவும் வழிவகுக்கும்.
சூரிய ஒளி அதிக அளவில் உடலில் படும்போது சருமப் புற்றுநோய் வரும் அபாயம் உண்டாகும். சருமத்தில் சுருக்கம் உண்டாகி வயதான தோற்றம் பெறுவதையும் தடுக்க இயலாது போகும்.
மேற்கூறிய கருத்துக்களில் பின்பற்ற வேண்டியவற்றைப் பின்பற்றியும் தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்தும் வாழ்தல் வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டாக்கும்.