ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள சியா விதைகள் ஒரு சூப்பர் உணவாகக் கருதப்பட்டு ஸ்மூத்தி, யோகர்ட் மற்றும் சாலட் போன்ற உணவுகளோடு சேர்த்து பலராலும் உண்ணப்பட்டு வருகிறது. சத்துக்கள் நிறைந்த இந்த சியா விதைகளோடு சில வகை உணவுகளை சேர்த்து உண்ணும்போது அவை எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணவும், சியா விதைகளில் உள்ள ஊட்டச் சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சப்படுவதில் இடையூறு உண்டாக்கவும் கூடும். சியா விதைகளோடு சேர்த்து உண்ணத் தவிர்க்க வேண்டிய 9 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்த்ப் பதிவில் பார்க்கலாம்.
1. நார்ச்சத்து மிக்க உணவுகள்: முப்பது கிராம் சியா விதைகளில் சுமார் 11 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனுடன் மேலும் அதிகளவு நார்ச்சத்து கொண்ட முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் ப்ரான் (Bran) போன்ற உணவுகளை உட்கொள்ளும்போது குடலுக்குள் நார்ச்சத்தின் அளவு மிக அதிகமாகி அழுத்தம் உண்டாகும். அதனால் வயிறு வீக்கம், வாய்வு உற்பத்தி போன்ற ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். நார்ச்சத்தின் அளவை சமநிலையில் வைக்க இவ்வாறான உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
2. பால் பொருட்கள்: லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் சியா விதைகளை யோகர்ட் அல்லது பாலுடன் சேர்த்து உண்பதைத் தவிர்ப்பது நலம். ஏனெனில், இதனால் இரைப்பை - குடல் ஆரோக்கியம் பாதிப்படையக் கூடும். சியா விதைகள் நீரில் ஊறும்போது ஜெல் போன்றதொரு பொருள் உற்பத்தியாகும். லாக்டோஸ் அதிகமுள்ள பொருளுடன் இது இணையும்போது வயிற்றில் வலி உண்டாகும்.
3. க்ரூஸிஃபெரஸ் வெஜிடபிள்ஸ்: புரோக்கோலி, காலி ஃபிளவர், பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்றவை சத்தான காய்களாய் இருந்தாலும் சிலருக்கு அவை வயிறு வீக்கம், வாய்வு உற்பத்தி போன்ற கோளாறுகளை உண்டுபண்ணக்கூடும். இதனுடன் சியா விதைகள் சேரும்போது அதிலுள்ள நார்ச்சத்துக்கள் பிரச்னையை இரண்டு மடங்காக்கி வயிற்றில் வலியை உண்டுபண்ணும்.
4. இனிப்பான பானங்கள்: சோடா அல்லது இனிப்பு நிறைந்த ஐஸ் டீயுடன் சியா விதைகளை சேர்த்து உண்ணும்போது சியாவில் உள்ள ஆரோக்கிய நன்மைகளில் சில அழிக்கப்படவும், சக்தியின் அளவு சீராக வெளிப்படாமல் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரவும் வாய்ப்பு உண்டாகும். எனவே, சியா விதைகளை தண்ணீர், மூலிகை டீ அல்லது இனிப்பு சேர்க்காத பானங்களுடன் சேர்த்து உண்பது நலம் தரும்.
5. இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்: பசலைக் கீரை, பருப்பு வகை உணவுகள், ரெட் மீட் போன்ற இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சியா விதைகளோடு சேர்த்து உட்கொண்டால் சியா விதைகளில் உள்ள ஃபைட்டிக் (Phytic) ஆசிட், அந்த உணவுகளில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சி கொள்ள முடியாமல் முட்டுக்கட்டை போட்டு விடும். அதனால் மேலே கூறிய உணவுகளை உண்ணும் போது சியா விதைகளைத் தவிர்ப்பது நலம்.
6. பதப்படுத்தப்பட்ட மாமிசம்: அதிகளவு சோடியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட மாமிசத்துடன் சியா விதைகளை சேர்த்து உட்கொண்டால் சியா விதைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் செயலற்றுப் போய் உடலின் வீக்கங்களைக் குறையச் செய்யும் சக்தியை இழந்து விடும். சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.
7. பொரித்த உணவுகள்: பிரஞ்ச் ஃபிரை போன்ற பொரித்த உணவில் உள்ள ட்ரான்ஸ் ஃபேட் சியா விதைகளில் உள்ள நல்ல கொழுப்புகளை செயல் இழக்கச் செய்து உடலில் வீக்கம் உண்டாகவும் காரணமாகும்.
8. அதிகளவு சோடியம்: சியா விதைகள் இயற்கையாக இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது. இதனுடன் சோடியம் நிறைய சேர்த்த ஊறுகாய், சிப்ஸ், நட்ஸ் போன்ற இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை உண்பது ஒருவரை ஆபத்தான இரத்த அழுத்த வகையை சார்ந்தவராக்கிவிடக் கூடும்.
9. காஃபின் சேர்ந்த உணவு: அதிகளவு நீரை உறிஞ்சிகொள்ளக்கூடிய சியா விதைகளை காஃபின் சேர்ந்த காபி அல்லது எனர்ஜி ட்ரிங்க்ஸுடன் சேர்த்து உண்பது நீரிழப்பை உண்டுபண்ணி செரிமானக் கோளாறுகளுக்கு வழி வகுக்கும்.