வெயில் காலத்தில் உடலை நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீர்ச்சத்து குறைபாட்டால் சருமம் வறட்சியாகும், சோர்வு ஏற்படும், செரிமானக் கோளாறுகள் உருவாகும். இதனை தவிர்க்க வெயில் காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய 9 பழங்கள் பற்றி இப்பதிவில் காண்போம் .
1. வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காயில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதோடு 96% நீர்ச்சத்தைக் கொண்டிருப்பதால் உடலில் நீர்ச்சத்தை பாதுகாத்து சருமத்துக்கு பளபளப்பை வழங்குகிறது. வெள்ளரிக்காயை உண்ணுவது மட்டும் அல்லாது, சாலட், பச்சடி, கூட்டு போன்ற விதவிதமான முறைகளில் செய்தும் சமையலில் சேர்த்தும் பயன்படுத்தலாம். மேலும், வெள்ளரிக்காயில் உள்ள சத்துகள் சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றன.
2. தர்பூசணி :
உடலுக்கு சத்துகளையும், ஹைட்ரேஷனையும் ஒரே நேரத்தில் வழங்கக்கூடிய சிறந்த பழமாக இருப்பதோடு , தண்ணீரின் ஒட்டுமொத்த உறைவிடமாக விளங்கும் தர்பூசணி, 92% நீரை கொண்டுள்ளது. இதில் லைகோபீன் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்துக்கும் பயனளிக்கும். மேலும், தர்பூசணியில் உள்ள அமினோ ஆசிட்கள் உடல் தசைகளை மேம்படுத்த உதவுகின்றன.
3. தக்காளி :
உடலில் நீர்ச்சத்து அளவை சீராக வைத்திருக்க உதவும் தக்காளி 94% நீரைக் கொண்டுள்ளது. தக்காளியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு சருமத்தை பளபளப்பாகி அழகைக் கூட்டுகிறது. தக்காளியை பச்சையாக உண்ணலாம், சாலட்களில் சேர்க்கலாம், அல்லது ஜூஸாக பருகலாம்.
4. ஸ்ட்ராபெரி :
குறைந்த கலோரியுள்ள ஸ்ட்ராபெரி 91% நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருப்பதால், உடல் எடையைக் குறைத்து, மூட்டுக்களை பாதுகாக்கின்றன. இதனை ஸ்மூத்தி, சாலட், அல்லது டெசர்ட் வகைகளில் சேர்த்து உண்ணலாம்.
5. பீச் பழம்:
ஊட்டத்துக்கள் அதிகமுள்ள பீச் பழம் 90 % நீர்ச்சத்தைக் கொண்டுள்ளதோடு , வைட்டமின் ஏ, சி,பி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்த உதவுகிறது.
6. கேரட் :
கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவான கேரட் 88% நீரை கொண்டிருக்கிறது. இதில் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளதால், சரும பொலிவு மற்றும் எடைக் குறைப்பு நன்மைகளும் கிடைக்கின்றன. கேரட் சாறானது தசைகளின் செயலை மேம்படுத்த உதவுகிறது.
7. பப்பாளி :
பப்பாளியில் 88% நீர் இருப்பதால் பசியை தணித்து நீர்ச்சத்து அளவை சரியாக பராமரிக்கிறது. உணவு செரிமானத்தை விரைவுபடுத்தும் தன்மை கொண்டது. இதில் உள்ள வைட்டமின் ஏ சரும ஆரோக்கியத்திற்கும் பயன் அளிக்கிறது.
8. ஆரஞ்சு :
ஆரஞ்சு பழம் 86% நீரைக் கொண்டிருக்கிறது. இதில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால், உடலில் உள்ள நச்சுச்சத்துகளை நீக்கி, புத்துணர்ச்சி அளித்து , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைட்டமின் சி அளவை அதிகரிக்கிறது. மேலும், ஆரஞ்சில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் அளிக்க உதவுகிறது.
9. கொய்யாப்பழம் :
கொய்யாப்பழம் 80% நீரைக் கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.
மேற்கூறிய 9 பழங்களும் நீர்ச்சத்து நிறைந்தவையாக இருப்பதால் வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றவையாக கருதப்படுகின்றன.