
நம்முடைய உடல் நலத்தை ஆரோக்கியமாக பேணிக் காக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக நாம் தினமும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது உள்ள காலக்கட்டத்தில் நம்முடைய உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்களை அதிகமாக நம்மை அறியாமலேயே பின்பற்றி வருகிறோம். அதில் 5 பழக்கங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகம் உள்ளனர். இப்படி குடிப்பதால் அஜீரண பிரச்னை, வயிற்று கோளாறு, குடல் சம்மந்தமான பிரச்னை ஏற்படும். எனவே, காலையில் எழுந்ததும் டீ அல்லது காபிக்கு பதில் வெந்நீர், தேங்காய்ப் பால் குடிப்பது சிறந்தது.
2. தற்போது ஐ.டி துறையில் வேலைப் பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளதால், எந்நேரமும் லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அதிக நேரம் போன் அல்லது லேப்டாப்பை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால், மூளையின் செயல்பாடு குறையும். இதனால் தூக்கம் பாதிக்கும், மனஅழுத்தம் அதிகரிக்கும். எனவே, 45 நிமிடத்திற்கு ஒருமுறையாவது ஸ்கிரீனில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்வது நல்லது.
3. அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி, ரத்த ஓட்டத்தில் கோளாறு, குடல் சம்மந்தமான பிரச்னை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே, ஒவ்வொரு ஒருமணி நேரத்திற்கும் ஐந்து நிமிடம் எழுந்து நடக்க வேண்டியது மிக அவசியமாகும்.
4. நம் உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்வாறு தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சருமம் உலர்ந்துவிடும், மூளையின் செயல்பாடு மந்தமாகிவிடும். எனவே, தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
5. இரவு உணவை சீக்கிரமே எடுத்துக்கொள்வது நல்லது என்று சொல்லப்படுகிறது. இரவு தூங்குவதற்கு முன் சாப்பிடும் பழக்கம் தற்போது நிறைய பேருக்கு உள்ளது. இதனால் உடல் கொழுப்பு அதிகரிக்கும், செரிமானம் மெதுவாக நடக்கும், இரவு தூக்கம் பாதிக்கப்படும். ஆகவே, சரியான நேரத்தில் இரவு உணவை எடுத்துக் கொள்வதே நல்லது.
இந்த 5 பழக்கங்களையும் மாற்றிப் பாருங்கள். ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.