ஃபிரீசரில் வைத்தாலும் ஊட்டச்சத்து குறையாத 9 வகை உணவுகள்!

Foods that don't lose nutrients even when stored in the freezer
Foods that don't lose nutrients even when stored in the freezer
Published on

நாம் பால், பழங்கள், காய்கறிகள், தோசை மாவு போன்ற பலவகை உணவுகளை கெட்டுப்போகாமல் பாதுகாத்து சில நாட்கள் வரை உபயோகிக்க அவற்றை ஃபிரிஜில் வைப்பதுண்டு. அவற்றை அதிக நாட்கள் ஃபிரிஜில் வைத்திருந்தால் அவற்றின் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புண்டு. இதுபோன்ற சில வகை உணவுகளை ஃபிரீசரில் வைக்கும்போது அவை நீண்ட நாட்கள் வரை கெடாமலும் ஊட்டச்சத்துக்களில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் ஃபிரஷ்ஷாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட 9 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மக்காச் சோளம்: ஃபிரீசரில் இருந்தாலும் மக்காச்சோள விதைகளில் உள்ள ஒரு வகை இயற்கையான என்சைமானது உயிர்ப்புடன் செயல்புரிந்து சோளத்தின் நிறம், சத்துக்கள், சுவை மற்றும் டெக்ச்சரில் எவ்வித மாற்றமும் குறைபாடும் உண்டாகாமல் பாதுகாக்கிறது. ஃபுரோசன் கார்னில் வைட்டமின் C சத்து அதிகரித்திருப்பதாகவே ஆய்வுகள் கூறுகின்றன.

2. க்ரீன் பீன்ஸ்: ஃபிரீஸ் பண்ணுவதால் பீன்ஸில் உள்ள நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துக்களில் எவ்வித குறைபாடும் உண்டாவதில்லை. ஆனால், அவற்றை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால் சில கனிமச் சத்துக்கள் அழிந்து விட வாய்ப்புண்டு.

3. புரோக்கோலி: புரோக்கோலியை பறித்தவுடன் ஃபிரீஸ் பண்ணிவிட்டால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஃபிரீஸ் ஆகும் செயல்பாட்டின்போது அதன் ஆரோக்கியம் நிறைந்த ரிபோஃபிளவின் என்ற சத்துக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து நன்கு பூட்டப்படுகிறது. இதுவே அதன் ஃபிரஷ்னஸ் குறைந்தபின் ஃபிரீஸ் செய்யப்பட்டால் அதன் இயற்கைத் தன்மை குறைந்து விடும்.

4. கேரட்: கேரட்டை தோல் நீக்கி, தேவையான சைஸ்ஸில் துண்டுகளாக நறுக்கி, பின் அந்தத் துண்டுகளை கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டெடுத்து உடனடியாக ஐஸ் வாட்டரில் முக்கி குளிரச் செய்து, நன்றாக துடைத்து ஃபிரீஸ் செய்ய வேண்டும். இம்முறைக்கு ப்ளான்ச்சிங் (Blanching) என்று பெயர். இம்முறையைப் பின்பற்றி கேரட்டை ஃபிரீஸ் செய்தால் அதன் நிறம், சத்துக்கள், சுவை மற்றும் டெக்ச்சரில் எவ்வித குறைபாடும் உண்டாகாது.

5. பட்டாணி (Peas): பட்டாணி விதைகளை ஃபிரஷ்ஷாக ஃபிரீஸ் செய்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் A, C, K ஆகியவை பட்டாணியை மீண்டும் உபயோகிக்கும்போது குறைவின்றி பலன் அளிக்கும். சீசன் இல்லாத காலத்திலும் ஃபிரீஸரிலிருந்து எடுத்து உபயோகித்து பலன் பெறலாம்.

6. பசலை: பசலைக் கீரை இலைகளை ப்ளான்ச்சிங் முறையைப் பின்பற்றி ஃபிரீஸ் பண்ணி உபயோகித்தால் இதிலுள்ள இரும்புச் சத்து, வைட்டமின் C, கால்சியம் போன்றவற்றின் அளவு நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாகவும், பீட்டா கரோட்டீன் சத்து குறைவின்றி பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

7. பெல் பெப்பர்: பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடை மிளகாய்களை ஃபிரீஸ் பண்ணும்போது அவற்றில்  உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C சத்துக்களின் அளவு ஃபிரஷ் மிளகாய்களில் உள்ளதை விட அதிகம் ஆகிறது. வைட்டமின் C ஆக்ஸிடைஸ் ஆவதற்கு முன்னமே ஃபிரீஸ் செய்யப்பட்டு விடுவதால் இது சாத்தியப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குழாய்களில் படிந்துள்ள உப்பு போன்ற கரை மற்றும் துருக்களை எவ்வாறு தடுக்கலாம்?
Foods that don't lose nutrients even when stored in the freezer

8. சுச்சினி (Zucchini): இக்காயை ஃபிரீஸ் செய்வதால் இதிலுள்ள புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துக்களில் எவ்வித குறைபாடும் உண்டாவதில்லை. சிறப்பான செரிமானத்துக்கும், எடைப் பராமரிப்பிற்கும் எப்பவும் போல் உதவும். சூப், சாஸ், ஸ்மூத்தி மற்றும் கேஸரோல்களின் தயாரிப்பில் இதை சுலபமாக உபயோகிக்கலாம்.

9. காலிஃபிளவர்: ப்ளான்ச்சிங் முறையில் காலிஃபிளவரை ஃபிரீஸ் செய்வது சிறந்த பலன் அளிக்கும். அப்போது அதில் உள்ள புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் A, C உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், சுவை மற்றும் டெக்ச்சரில் எவ்வித குறைபாடும் உண்டாகாது. மேலும், காலிஃபிளவரில் உள்ள பாக்டீரியாக்களும் அழிந்துவிடும்.

நாமும் மேலே கூறிய உணவு வகைகளை ஃபிரீஸரில் வைத்துப் பாதுகாத்து தேவைப்படும்போது எடுத்து உபயோகித்து பலன் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com