கொசு ரூபத்தில் வரும் கொடூர அரக்கன்! காத்திருக்க வேண்டாம் மக்களே!

Aedes mosquito
Aedes mosquito
Published on

தமிழகம் முழுவதும் புயல் காரணமாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் சீதோசன நிலை நன்றாக இருந்தாலும், டெங்கு என்னும் கொடூர அரக்கன் மெல்ல தலை தூக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான்  வளரும் தன்மையுடையவை. அதாவது தேங்கி இருக்கும் மழை தண்ணீரில் ஏடிஸ் வகை கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை உடையவை.

அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தால் நம் வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கி காணப்படும். அந்த மழை நீரில் வளரும் ஏடிஸ் வகை கொசுக்கள், பகல் நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து நம்மை கடிக்கும். அப்போது நம் உடலில் போதிய எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் டெங்கு பாதிப்புக்கு நாம் ஆளாக நேரிடும். இவை பகலில் மட்டுமே கடிக்கும் கொசு வகை ஆகும்.

இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு, மாநில முழுவதும் பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்கி இருக்காத வண்ணம் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களில் அடிக்கடி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

டெங்கு காய்ச்சலானது ஒருவருக்கு வந்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவர். அங்கு ஒரு வார அல்லது பத்து நாட்களில் அவர்களுக்கு நிலைமை சரியாகிவிடும். அதை பார்த்ததும் நம்மில் பலர் உடனே வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என துடிப்போம். அதுதான் நாம் செய்யும் இமாலயத் தவறு.

ஏனெனில் டெங்கு காய்ச்சலை பொருத்தமட்டில் அனைத்தும் சரியாகிவிடும். அதன் பின்னர் மீண்டும் ஒரு தாக்கம் உடலில் ஏற்படும். அப்போது நாம் கண்டிப்பாக மருத்துவர்கள் கண்காணிப்பில் தான் இருந்தாக வேண்டும். அதனாலேயே அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சரியான பின்னரும் ஒரு வாரத்திற்கு பின்னர் தான் அந்த நபரை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஆனால் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பலர் அங்குள்ள டாக்டர்களையும் நர்சுகளையும் கெஞ்சி, கதறி வீடு வந்து சேர்கின்றனர். அவர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டாலும், நம்மவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. வீட்டுக்குச் சென்றே ஆக வேண்டும் என நாம் ஒற்றை காலில் நிற்கிறோம்.

இதையும் படியுங்கள்:
முதியோரை பாதிக்கும் மறதி நோய்... ஜாக்கிரதை! 
Aedes mosquito

இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் நாம் நம் வீட்டைச் சுற்றி தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டின் மாடியில் போடப்பட்டுள்ள தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பிரிட்ஜில் பின்புறம்  வாரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

தமிழகத்துக்கு டெங்கு வந்த புதிதில், வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தோட்டத்தில் கிடந்த காலி மது பாட்டில் உள்ளே பார்த்தபோது அதில் டெங்கு கொசு புழுக்கள் காணப்பட்டுள்ளன. அதனால் அதிர்ந்து போன அவர்கள் பொது இடங்களில் கிடக்கும் மது பாட்டில்களையும் சோதனை செய்ய தொடங்கினர்.

இப்படியாக நல்ல நீர் எங்கிருந்தாலும் அதில் தன் இனத்தைப் பெருக்க வல்லது இந்த வகை கொசுக்கள். அதனால் இப்போது டெங்கு அதிக அளவில் பரவி வரும் நிலையில், நாமே மற்றவர்களுக்கு முன் உதாரணமாக நம் வீட்டையும் வீட்டு சுற்று புறத்தையும் தூய்மையாக வைக்கும் பணியில் ஈடுபடுவோம். இதற்காக உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்வோம் டெங்குவிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.                                                 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com