ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள். அது உண்மையும் கூட. காரணம், அந்தளவு ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த மருத்துவ உட்பொருட்கள் அடங்கியுள்ளன.
ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற தீவிரமான நோய்கள் வராமல் தடுக்க மற்றும் கட்டுப்படுத்த ஆப்பிள் ஒரு சிறந்த மருந்து. ஒரு ஆப்பிள் பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. சாப்பாட்டிற்கு முன்பாக ஒரு ஆப்பிளை சாப்பிட அது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஆஸ்துமா என்பது சுவாசப்பாதைகள் சுருங்கி வீங்கி கூடுதல் சளியை உண்டாக்கும் நிலை. இது சுவாசத்தை கடினமாக்குகிறது. இருமல், சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல், விசில் சத்தம் இதன் அறிகுறிகள். சிலருக்கு பனிக்காலத்தில், குளிர்ந்த காற்று ஆஸ்துமாவின் தீவிரத்தை அதிகரிக்கும்.
15ம் நூற்றாண்டில் வாழ்ந்த வால்ஹெல்மாண்ட் என்ற மருத்துவர்தான் ஆஸ்துமா என்பது சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் என்று முதன்முதலாகத் தெரிவித்தார். அதன் பிறகு 1698ம் ஆண்டு புளோரோ என்ற ஆங்கில மருத்துவர் மூச்சு குழாயின் சுருக்கமும், தடிப்பும்தான் ஆஸ்துமாவுக்குக் காரணம் என்று எடுத்துரைத்தார்.
அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை இது. 100 கிராம் ஆப்பிளில் கிடைக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் 1500 மில்லி கிராம் வைட்டமின் சி யில் கிடைக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் எனும் நோய் எதிர்ப்பு சக்தி திறனுக்கு இணையானது.
ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வாளர்கள் ஆப்பிளையும் ஆஸ்துமா நோயை பற்றியும் ஆராய்ந்ததில், எல்லா பழங்கள் மற்றும் காய்கறிகளையும் ஆய்வு செய்ததில் ஆப்பிள் சாப்பிடுவது ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கும் தன்மையை கொண்டது என்பது தெரிய வந்தது.
வாரத்தில் இரண்டு ஆப்பிள் பழமாவது சாப்பிட்டால் ஆஸ்துமா வரும் சூழலை பெருமளவு அது குறைக்கும் என்கிறார்கள். கர்ப்ப காலத்தில் ஆப்பிள் அதிகம் சாப்பிட்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு 5 வயதாகும் வரை ஆஸ்துமா தொந்தரவு ஏற்படாது என்கிறது அமெரிக்கன் ஜர்னல் ஆப் ரெஸ்பிரேட்டரி கிரிட்டிகல் கேர் ஆய்வு. 100 கிராம் சாப்பிட அதே அளவு ஆரஞ்சு பழத்தில் இருந்து கிடைப்பதை விட 8 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்குக் கிடைக்கிறது என்கிறார்கள்.
ஆப்பிள்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் புற்றுநோய் உருவாவதைத் தடுக்க உதவும். 41 ஆய்வுகளின் முடிவுகளை மதிப்பாய்வு செய்ததில், அதிக அளவு ஆப்பிள்களை உட்கொள்வது நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்தை குறைப்பதாக தெரியவந்தது.
ஆப்பிளில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், ஆப்பிளில் குர்செடின் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுவாசப் பாதையில் அலர்ஜிகளால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து ஆஸ்துமா தீவிரத்தை குறைக்க உதவுகிறது என்கிறார்கள்.
குளிர் காலத்தில் சைனஸ் பிரச்னை ஏற்பட்டு தொடர்ச்சியாக தலைவலியா? ஆப்பிளை 4 துண்டுகளாக நறுக்கி உப்பில் தொட்டு சாப்பிடவும். ஒரு வாரத்திற்கு அதிகாலையில் இந்த முறையில் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் போதும் எல்லா விதமான தலைவலிகளும் சரியாகும். இதில் உள்ள மாலிக் அமிலம் சைனஸ் பிரச்னைகள் தவிர்க்க உதவுகிறது என்கிறார்கள்.
குளிர்ந்த காலநிலையில் மூச்சுத்திணறல், வழக்கத்தை விட அதிக சளி அல்லது சளி உருவாகும் நிலை இந்த அறிகுறிகள் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) இருப்பதை உறுதி செய்கிறது. இதன் தீவிரத்தை குறைக்க மருத்துவர்கள் வாரத்தில் 4 அல்லது 5 ஆப்பிள் சாப்பிட சிபாரிசு செய்கிறார்கள்.