

மணாளனைப் பிரிந்து நெருப்பிலிட்ட புழுவாய் துடித்த சீதைக்கு அசோக மரங்களே தைரியத்தை அளித்தன. அப்பேர்ப்பட்ட அசோக மரம் (Ashoka tree) ராமர், சீதாதேவி பார்வைப் பட்டு அவர்களின் மனக்குறையைப் போக்கிய தேவ மருந்தாகத் திகழ்கிறது.
ஒரு பெண் தாய்மை அடைந்தால் மட்டுமே முழுமையாக கருதப்படுகிறாள். பிள்ளைப் பேறில்லாதவர்களை சமூகம் எள்ளி நகையாடுகிறது. அவர்களுக்கு பேரமுதமாக இறைவன் அளித்த மூலிகை அசோக மரமாகும்.
அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம், இரண்டையும் அனைத்துத் தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை இரண்டு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் இட்டு பாதியாகச் வற்றச் செய்து காலை, மாலை உட்கொள்ள கருப்பை பலவீனம், கருப்பை கட்டி, கருப்பையில் சதை வளர்ச்சி நீர்க்கட்டி அனைத்து பிரச்னையும் நீங்கி பிள்ளைப் பேறு உண்டாகும்.
மாத விலக்கு கோளாறுகள் நீங்க
ஒரு பெண்ணுக்கு மாதாந்திர சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வந்தால் நல்லது. அப்படி வராமல் போனால் இந்த அசோக பட்டை கை கொடுக்கும். அசோகப் பட்டை, மாவிலங்குப் பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றைத் தூள் செய்து இதில் தினமும் மூன்று கிராம் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.
மாதவிடாய் போது ஏற்படும் வலி நீங்க
100 கிராம் அசோக பட்டையுடன் 25 கிராம் பெருங்காயத்தை தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது வெண்ணெயை கலந்து சாப்பிட மாதவிடாய் வலி நீங்கும். அசோக பட்டைபொடி 6 கிராம் எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலில் சுண்டக் காய்ச்சி சீனி சேர்த்து சாப்பிட மாதவிடாய் போது வரும் வலி குணமாகும்.
நான்கு பங்கு அசோக பட்டை பொடியுடன் ஒரு பங்கு பொடி செய்த வால் மிளகு சேர்த்து சாப்பிட வலி குறையும். அசோக மட்டையை நசுக்கி பேஸ்டாக்கி முட்டியில் தடவ முட்டி வலி நீங்கும். அசோக பட்டை பொடியை நீரில் குழைத்து புண்கள், காயங்கள் மீது தடவ அவை குணமாகும்.
அசோக பூவை நீர்விட்டு அரைத்து அதை வடிகட்டி 15லிருந்து 60 துளிகள் உட்கொள்ள நீரிழிவு நோய் குணமாகும். அசோக பட்டையை வேக வைத்து கஷாயமாக்கி அதில் கடுகு எண்ணை சேர்த்து மனுவில் தடவ முகப்பரு நீங்கும்.
அசோகமரப் பொருட்கள் உட்கொள்ள அறிவுத்திறன் மேம்படும். இதன் பட்டைபொடி ஒரு டேபிள் ஸ்பூன் பாலில் கலந்து உட்கொள்ள மூளைத் திறன் மேம்படும். இதன் பட்டை தேள்கடிக்குச் சிறந்த மருந்தாகும்.
கருப்பையை வலுப்படுத்த அசோகமரப்பட்டை தினமும் 15 விருந்து 25 மிலி தேனீராக எடுக்க வேண்டும். இதனால் கருப்பையின் தசைகள் பலப்படுத்தப்படும். எண்டோமெட்ரியாசிஸ், நீர்க்கட்டிகள், கீழ் முதுகுவலி, அதிகப்படியான வெப்பம் போன்ற மகளிர் நிலையை தடுப்பதுடன் கருச் சிதைவையும் தடுக்கும்.
இரத்தக் கசிவுடன் ஏற்படும் வயிற்றுப் போக்குக்கு அசோகமரம் பூக்களைத் தண்ணீரில் கலந்து 15 முதல் 20 சொட்டுக்கள் உட்கொள்ள நிவாரணம் கிடைக்கும்.
பெரிய வெற்றிலையில் அசோக விதைகளைப் பொடி செய்து காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வர சுவாசக் கோளாறுகள் நீங்கும்.
அசோகப்பட்டை மற்றும் மாதுளம்பழம் இரண்டையும் நன்றாகக் காய வைத்து பொடி சேர்த்து வைக்கவும். இந்தப் பொடியில் ஒரு தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)