சாப்பிட்ட பின் ஐஸ்கிரீமா? உங்கள் ஜீரண மண்டலத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம்!

Ice cream after food
Ice cream after food
Published on

விருந்தும் மருந்தும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. முக்கால் பங்கு உணவு, கால் பங்கு தண்ணீர் என்பதை மறந்து விட்டு, முழு வயிறு நிறைய விருந்து உணவை உண்டு விட்டு, ஜீரணம் ஆகாமல் மருத்துவரைத் தேடி ஓடுபவர்கள் நிறைய பேர் உண்டு. வாய் கட்டுப்பாடும், மனக்கட்டுப்பாடும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும். அஜீரணம் காரணமாகத் தோன்றும் மலச்சிக்கலே பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உடல் பருமன், உயர் இரத்தஅழுத்தம், இதய பாதிப்பு தொடர்பான அனைத்து உடல் பிரச்னைகளுக்கும் அஜீரணமே காரணமாக உள்ளது. பெரும்பாலும் மலச்சிக்கலுக்குக் காரணம், முறையற்ற உணவுப் பழக்கம் தான்.

சாப்பிடும்போது கவனத்தை உணவின் மீது வைக்காமல் பேசுவதும், சிரிப்பதும் தற்போது சகஜமாகிவிட்டது. இவையெல்லாம் தான் அஜீரணத்துக்குக் காரணமாகின்றன. நாம் உணவு உண்ணும்போது அந்த உணவின் மீதுள்ள கவனமே நமக்கு உமிழ்நீர் சுரக்கக் காரணமாக இருக்கின்றது. அந்த உமிழ்நீர் சுரக்கத் தடை ஏற்படும் போதுதான் அஜீரணம் ஏற்படுகிறது.

அடுத்ததாக, முன்பெல்லாம் ஏதாவது விருந்துக்குப் போனால், விருந்துக்குப் பின்னர் ஜீரணத்துக்கு உதவும் வெற்றிலைப் பாக்கு, சுண்ணாம்பு தட்டங்கள் தருவார்கள். ஆனால், தற்போது விதவிதமான நிறங்களில் ஐஸ்கிரீம்கள் தருகிறார்கள். இது உடலுக்கு ஒவ்வாது என்று தெரிந்தும் உணவுக்குப் பின் பலரும் ஐஸ்கிரீம்(Ice cream) சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கி விட்டனர். “ஐஸ்கிரீமில் உடல் நலனுக்கு ஆபத்தான பல்வேறு வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. உதாரணமாக, சோடியம் பென்சோயேட் எனும் ஒருவித வேதிப்பொருள் நமது நாவுக்கு அதிக ருசி உணர்வை தூண்டி, ஐஸ்கிரீமை அடிக்கடி சாப்பிடத் தூண்டுகிறது. இந்த வேதிப்பொருள், அழகு சாதனங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், ஐஸ்கிரீம்கள் நீண்ட நேரம் உருகாமல் இருக்க சேர்க்கப்படும் வேதிப்பொருளால் புற்றுநோய் அபாயமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பல்வேறு சத்துக்கள் கொண்ட விருந்துக்குப் பின் உடலுக்கு ஒவ்வாத சர்க்கரை, செயற்கை வேதிப்பொருள் மற்றும் கொழுப்பு நிறைந்த  ஐஸ்கிரீம்களை சாப்பிடுவது ஜீரண உறுப்புகளில் எதிர்வினையாற்றி அஜீரணத்தை ஊக்குவிக்க மட்டுமே செய்கிறது’’ என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும், அதிக ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கி, சீரான ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இரத்த அழுத்தம், இருதய பாதிப்பு , உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கிறது. ஏற்கெனவே உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் ஐஸ்கிரீம் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
தேங்காய் எண்ணெய் பாக்கெட்டில் இதைப் பார்த்தால் உடனே தூக்கிப் போடுங்க!
Ice cream after food

இனி, விருந்துக்குப் பின் ஐஸ்க்ரீம் பக்கம் போகாமல், குடல் புண்களை ஆற்றும் பாக்கு, எலும்புகளை உறுதியாக்கும் சுண்ணாம்பு, உமிழ்நீர் சுரப்புக்கு உதவும் வெற்றிலை ஆகியவை இயற்கையான ஜீரணத்துக்கு உதவ இருக்கும்போது, செயற்கையான ஐஸ்க்ரீமை தவிர்ப்போம், உடல் நலனைக் காப்போம்!

- சேலம் சுபா

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com