எந்த வயதினராக இருந்தாலும் இளமையாக, வயது தெரியாமல் இருப்பதையே விரும்புவர். வயதானாலும் ஒருவர் இளமையாகத் தெரிய மிகவும் உதவுவது அவர்களின் சருமம் மட்டும்தான். நம் உடலின் மிகப்பெரிய உறுப்பான சருமம் பொலிவின்றி, சோர்வாக, சொரசொரப்பாக இருந்தால் வயதான தோற்றத்தைத் தருவதுடன் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
சருமப் பாதுகாப்பிற்காக பலவித கிரீம்கள், லோஷன்கள் இருந்தாலும் போதுமான ஊட்டச்சத்து இல்லையெனில் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்துக்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
செலினியம்: இதன் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணம் உடல் செல்கள் சேதமடைவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தருகிறது. மீன், முட்டை, ஈரல், இறைச்சி, தானியங்கள், பூண்டு போன்றவற்றில் செலினியம் நிறைந்துள்ளது.
வைட்டமின் சி: சருமம் மிருதுவாகவும், எலாஸ்டிக் தன்மையோடும் இருக்க கொலாஜன்கள் தேவை. அந்த கொலாஜன்களை உற்பத்தி செய்துத் தருவது இந்த வைட்டமின்கள்தான். ஆரஞ்சு, நெல்லி, கிவி, மிளகு, எலுமிச்சை, குடைமிளகாய் போன்றவற்றில் வைட்டமின் சி அபரிமிதமாக உள்ளது.
பீட்டா கரோட்டின்: சருமம் புத்துணர்ச்சி பெறுவதை ஊக்குவித்து முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இது. கேரட், பழச்சாறு, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பச்சைக் காய்கறிகள் இந்த பீட்டா கரோட்டின் கொண்டதாக இருக்கிறது.
வைட்டமின் ஈ: சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இந்த வைட்டமின் பாதாம், தாவர எண்ணெய்கள், சூரியகாந்தி விதை போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துத்தநாகம்: உடலின் செல்கள் தங்களை சீரமைத்துக்கொள்ளவும், வளரவும் இது அவசியம். கடல் உணவுகளை, முழு தானியங்களை சாப்பிடுவதன் மூலமும், வெங்காயம் ஆகியவற்றிலும் துத்தநாகம் உள்ளது.
கொழுப்பு: சருமம் மினுமினுப்பாக இருக்கவும், வறண்டு சுருங்குவதைத் தடுக்கவும், சரும செல்கள் தங்கள் பாதிப்புகளை சீரமைத்துக்கொள்ளவும் போதுமான கொழுப்பு தேவை. குறிப்பாக ஒமேகா3 கொழுப்பு அவசியம்.
ஆளி விதை, வால்நட், கடல் உணவுகளில் இது கிடைக்கிறது. முறையாக இவற்றை எடுத்துக்கொண்டு ஆரோக்கிய வாழ்வியலை கடைப்பிடித்தாலே வயதாவது தடுக்கப்பட்டு இளமையை தக்கவைக்க முடியும். சூரிய நமஸ்காரம், சமச்சீரான உணவு, மகிழ்ச்சியான பழக்க வழக்கங்கள், ஆழ்ந்த தூக்கம் போன்றவை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தை சுருக்கங்களிலிருந்து காத்து இளமையான பொலிவைத் தரும்.