
ஒரு வழியா வெயில் காலம் முடிந்து, சென்னையில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. கடந்த சில நாட்களாகவே நகரம் முழுவதும் ஒரே குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், இந்த மழைக்காலம் சந்தோஷத்தை மட்டும் கொண்டு வராது; கூடவே சில சிக்குல்களையும் இழுத்து வரும். அதில் முதல் இடம் பிடிப்பது ஜலதோஷம், இருமல், அதிலும் குறிப்பாக நெஞ்சில் கட்டிக்கொள்ளும் சளி.
தொண்டையில் தொடங்கி, மெதுவாக நெஞ்சுக்குள் இறங்கி, அங்கே கட்டிக்கொண்டு நம்மை பாடாய் படுத்தும். மூச்சு விடுவதற்கே சிரமமாக இருக்கும். இதற்கு ஆங்கில மருந்துகளை எடுப்பதற்குப் பதிலாக, நம் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு அருமையான மருந்து தயாரிக்கலாம்.
ஏன் இந்த சளித் தொல்லை?
மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் கிருமிகள் மிக வேகமாகப் பரவும். நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் இந்தக் குளிருக்கு சற்று மந்தமாகிவிடும். இதன் விளைவாக, தொண்டை வலி, மூக்கடைப்பு, இருமல் என வரிசைகட்டி வந்துவிடும்.
இதில் மிகக் கொடுமையானது 'நெஞ்சு சளி'. இது நுரையீரலில் தேங்கி, நமக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும். இதை வெளியேற்றினால்தான் நமக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். இதற்கு, ஆயுர்வேதம் எப்போதுமே கஷாயங்களைத்தான் பரிந்துரை செய்கிறது.
அற்புத கஷாயம்!
இந்த மழைக்கால சளியை, குறிப்பாக நுரையீரலில் தேங்கும் சளியை, இளகச் செய்து வெளியேற்றுவதற்கு ஒரு எளிய கஷாயம் ஒன்று உள்ளது. இதை தயாரிப்பது மிகவும் எளிது. இதற்காக நாம் கடைகளில் அலையத் தேவையில்லை; எல்லாமே நம் சமையல் அறையில் இருக்கும் பொருட்கள்தான்.
கஷாயம் செய்வது எப்படி?
முதலில், ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வையுங்கள். அதில் ஒரு பெரிய டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள். தண்ணீர் லேசாகச் சூடாகும்போதே, அதில் பொருட்களைச் சேர்க்க ஆரம்பிக்கலாம்.
முதலில், ஒரு இரண்டு கிராம்பு மற்றும் இரண்டு முழு மிளகு ஆகியவற்றை லேசாகத் தட்டிப் போடுங்கள். இந்த இரண்டும் கிருமி நாசினியாகச் செயல்பட்டு, தொண்டைப் புண்ணை ஆற்றும்.
அடுத்து, ஒரு சிட்டிகை ஓமம் மற்றும் ஒரு சிட்டிகை சுக்குப் பொடி சேர்க்கவும். ஓமம் செரிமானத்தைச் சரிசெய்வதுடன், மூக்கடைப்பைத் திறக்க உதவும். சுக்கு, சளியின் ஆணிவேரையே அறுக்கும் சக்தி கொண்டது.
இப்போது, ஒரு சிட்டிகை உப்பு சேருங்கள். இதுதான் சளியை இளகச் செய்யும் ஒரு ரகசியப் பொருள்.
கடைசியாக, சுவைக்காகவும், உடலுக்கு சக்தி கொடுக்கவும், ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்தக் கலவை அனைத்தையும் நன்றாகக் கொதிக்க விட வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர், கொதித்து சுண்டி, அரை டம்ளர் அளவுக்கு குறையும் வரை காத்திருங்கள். பிறகு, அடுப்பை அணைத்து, அதை ஒரு கப்பில் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இந்த கஷாயத்தை ஆறிப் போய்க் குடிக்கக் கூடாது. அதே சமயம், கொதிக்கக் கொதிக்கவும் குடிக்கக் கூடாது. மிதமான சூட்டில் இருக்கும்போது, மெதுவாக டீ குடிப்பது போலக் குடியுங்கள்.
மழை பெய்தாலே உடம்பு சரியில்லாமல் போய்விடுமே என்று கவலைப்படுபவர்கள், இந்த கஷாயத்தை தைரியமாக முயற்சி செய்யலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)