
தற்போது A2 பால் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. பலரும் இதை விரும்பி வாங்கி உபயோகிக்கின்றனர். வழக்கமாக வாங்கும் பாலை விட A2 பாலில் அப்படி என்ன சத்துக்களும் சிறப்புகளும் இருக்கின்றன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வழக்கமான பாலில் உள்ள பிரச்சனைகள்:
அனைத்து பசுக்களின் பாலிலும் கேசீன் என்கிற புரதம் உள்ளது. ஆனால் கேசீனில் A1 மற்றும் A2 என இரண்டு வகைகள் உள்ளன. வழக்கமான பாலில் A1 மற்றும் A2 இரண்டும் கலந்துள்ளன. இதில் உள்ள A1 புரதம் செரிமானத்தில் ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. அழற்சி எதிர்வினைகளும் பல்வேறு பாதகமான உடல்நல விளைவுகளும் ஏற்படுகின்றன. ஜீரணைப்பதில் சிரமம், வீக்கம், வாயு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு வயிற்றுப் பிடிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
A2 பால்:
A2 பாலில் A2 புரதம் மட்டுமே உள்ளது. இது இயற்கையாகவே A2 பீட்டா கேசின் புரதத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் பசுக்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்தத் பாலை தரும் பசுமாடுகள் மிகவும் கவனமான முறையில் வளர்க்கப்படுகின்றன. உலக அளவில் பல்பொருள் அங்காடிகளில் A2 பால் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் வழக்கமான பசும்பாலைப் போலவே சுவை தரும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ளன. முதலில் உலகெங்கும் பசுக்கள் இயற்கையாகவே A2 பாலை மட்டுமே உற்பத்தி செய்தன. காலப்போக்கில் சில ஐரோப்பிய பசு இனங்களில் ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டது. A1, A2 மற்றும் இரண்டையும் கலந்து பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
A 2 பால் அருந்துவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
வழக்கமான பாலுக்கும் A2 பாலுக்கும் இடையே விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளடக்கத்தில் சிறிய வேறுபாடுகள் உள்ளன.
A2 பாலில் உள்ள புரதம், கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகியவை ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சியை ஆதரிக்கும். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். இந்த பாலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
செரிமானம், வயிறு உப்புசம், வயிற்று வலி, வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கும் A2 நல்லது. இதை குடித்த பின்பு விரைவில் ஜீரணம் ஆகிவிடும். இதில் உள்ள கால்சியம், வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் புரதச்சத்து தசை வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளின் ஆற்றலுக்கு உதவுகிறது.
A2 பால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள பி 12, ஏ மற்றும் டி போன்ற வைட்டமின்களால் நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கும். நோய்களை விரைவில் அண்ட விடாமல் தடுக்கும். இந்தப் பாலை தொடர்ந்து அருந்துபவர்களுக்கு இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்த மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
குடல் செயல்பாடு சீராக இருக்கும். குடலில் ஏற்படும் அழற்சி எதிர் வினைகளுடன் செயல்பட்டு குடல் வீக்கத்தை குறைக்கிறது. சிறு குழந்தைகளுக்கு இந்தப் பால் ஏற்றது. தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பசுவின் பாலுக்கு மாறும்போது A2 பால் அவர்களின் மென்மயான ஜீரண உறுப்புகளுக்கு நன்மை செய்கிறது.
ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் அல்லது பால் குடித்தால் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த A2 பாலை குடிக்கும் முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.