meta property="og:ttl" content="2419200" />
டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூத்துக் குலுங்கும் மலர் ஆவாரை. மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுக்கு மாலை கட்டி போடுவதற்கு இதைப் பயன்படுத்துவார்கள். அப்படியே அந்த பூவை உலர்த்தி டீ, கசாயம், குளியல் என்று பல்வேறு வகையான மருத்துவத்திற்கு அதை தக்கபடி பயன்படுத்திக்கொள்வது கிராமத்து மக்களின் வழக்கம்.
ஆவாரை, ஆவிரை அல்லது மேகாரி என்பது ஒரு மருத்துவ மூலிகை பயன்பாடு உடைய ஒரு தாவரமாகும். இது சங்ககால மலர் ஆகும். ஆவாரம் பூ ‘பேஃபேசியே’ என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. ஆவாரம் பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆவாரம்பூ மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகையாகும். ‘ஆவாரை பூத்திருக்க நோவாரைக் கண்டதுண்டோ’ என்னும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ மகிமையை குறிக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமான ஒன்று தலைமுடி. அதை பராமரிப்பதும், சுத்தம் செய்வதும் அவசியமாகும். ஆவாரையால் முடி கொட்டுவதை குறைக்க முடியும். மேலும் இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே அடக்கி உள்ளது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்!
ஆவாரம் பூவின் பயன்கள்:
ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் உடம்பின் பளபளப்பு கூடும்.
தண்ணீரில் ஒன்று, இரண்டு ஆவாரம் பூக்களை ஊறவைத்து அந்தத் தண்ணீரை குடித்தால், அது தாகத்தைப் போக்கும். சிறுநீரை பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்தத் தண்ணீரை ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.
ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுக்க வேண்டும். இதனால் சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கசாயம் வைத்து வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
சர்க்கரை நோய்க்கு ஆவாரம்பூ சிறந்த மருந்து. ஆவாரம் பூ, அதன் பட்டை, பனங்கற்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரப்பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, உள்மூலம் குணமாகும்.
இதுபோன்ற பல்வேறு நோய்களை குணமாக்கும் ஆவாரம் பூ கிடைக்கும் நேரங்களில், அவற்றை வாங்கி சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொண்டால், தேவையானபொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.