
அக்ரோ ஃபோபியா என்பது உயரம் பற்றிய தீவிர பயம். இது ஹைப்சோ ஃபோபியா என்றும் அழைக்கப்படுகிறது. உயர மருட்சி எனப்படும் உயரத்தினால் ஏற்படும் அதீத பயம் உள்ளவர்கள் குறைந்த அளவு உயரத்திலேயே உயர மருட்சியை உணர்கிறார்கள். பெரும்பாலான மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லும் பொழுது ஒரு வித பய உணர்வை உணர்கிறார்கள். இது 'விழுந்து விடும் பயம்' என்று அழைக்கப்படுகிறது. 2 முதல் 5 சதவிகித மக்கள் உயர மருட்சி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பெண்கள் ஆண்களைப் போல இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
அறிகுறிகள்:
அக்ரோ ஃபோபியாவின் அறிகுறிகள் உயரமான இடங்களில் இருப்பதற்கான பயம். குறிப்பாக உயரமாக இல்லாத போதும்கூட உயரம் பற்றிய பயம், ஸ்பேஸ் மற்றும் மோஷன் அசௌகரியம். உயரமான கட்டிடங்களை பார்க்கும் போது கூட பயம் ஏற்படுவது போன்றவை அறிகுறிகளாகும்.
உயரமான கட்டடங்கள், மாடியில் அல்லது உயரமான இடங்களில் அமைந்த பால்கனி போன்றவற்றில் செல்வதற்கு ஏற்படும் பயம்.
அக்ரோ என்பது 'உயரம்' அல்லது 'மேல்' என்ற பொருள்படும். அக்ரோ ஃபோபியா என்பது மிகவும் பொதுவான பயங்களில் ஒன்றாகும். இந்த சொல் 1888 களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.
உயரங்களைப் பற்றி ஓரளவு பயம் கொள்வது இயல்பானது தான் என்றாலும் அக்ரோ ஃபோபியா உள்ளவர்கள் படிக்கட்டுகளில் ஏறுதல், பால்கனிக்கு அருகில் நிற்பது, உயரமான பாலங்களில் நிற்பது அல்லது கடப்பது, பல தளங்களைக் கொண்ட பார்க்கிங் கேரேஜில் காரை நிறுத்துவது போன்ற அன்றாட பணிகள் உட்பட உயரங்களை எதிர்கொள்ளும் பொழுது பயத்தையும் பதட்டத்தையும் உணர்வார்கள்.
உயரங்களைப் பற்றி நினைக்கும் போதோ அல்லது பார்க்கும்போதோ இதயம் வேகமாக துடிப்பதை அனுபவிப்பது, தலை சுற்றல் மற்றும் லேசான தலைவலி உணர்வு ஏற்படுதல், நடுக்கம், மூச்சு திணறல் போன்றவை அறிகுறிகளாகும். உளவியல் படி உயர்ந்த இடத்தில் நிற்கும் பொழுது கீழே விழுந்து விடுவோமோ அல்லது சிக்கிக் கொள்வோமோ என்ற எதிர்மறையான விஷயம் நடக்கும் என்ற பயம் ஏற்படுவதும், தப்பிக்க வேண்டும் என்ற வலுவான உணர்வை ஏற்படுத்துவதுமாக இருக்கும்.
காரணங்கள்:
அக்ரோ ஃபோபியா எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்களுக்கு காரணங்கள் சரியாக தெரியவில்லை. உயரமான இடத்திலிருந்து விழுந்து காயம் ஏற்படுமோ என்ற இயல்பான கவலையிலிருந்து இது உருவாகி இருக்கலாம் என்று நம்புகிறார்கள். உயரத்தில் இருந்து விழும்போது ஏற்படக்கூடிய வலியை நினைத்து பயப்படுவதும் அக்ரோபோபியாவின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மரபியல் காரணிகள் மற்றும் உயரம் தொடர்பான அதிர்ச்சிகரமான அனுபவங்கள் போன்றவையும் காரணங்களாக கூறப்படுகின்றன.
சிகிச்சை:
அக்ரோ ஃபோபியா போன்ற குறிப்பிட்ட பயங்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை. உளவியல் சிகிச்சை மூலம் குணப்படுத்த சிகிச்சையில் பங்கேற்கும் பொழுது பயம் மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளை தற்காலிகமாக விடுவிக்கும் பொருட்டு மருந்துகள் சில பரிந்துரைக்கப்படுகின்றன.
அக்ரோ ஃபோபியாவுக்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் உளவியல் சிகிச்சையின் ஒரு வடிவமான எக்ஸ்போஷர் தெரபி சிகிச்சை அளிப்பதில் வெற்றிகரமாக உள்ளது.
சிகிச்சையில் அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை(CBT), வெளிப்பாடு சிகிச்சை மற்றும் சில சமயங்களில் அறிகுறிகளை குறைப்பதற்கான கவலை எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை அடங்கும்.
அக்ரோ ஃபோபியா என்ற உயரத்தைப் பற்றிய பயத்தை போக்குவதற்கு போதுமான தூக்கமும், சுவாசப் பயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம். தியானம் போன்ற மன நிறைவு தரும் செயல்பாடுகளை பயிற்சி செய்யலாம். ஆழ்ந்த சுவாசம் எடுப்பதும், யோகா போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்வதும் நல்லது.