
சிறிய மற்றும் குறுகிய இடைவெளி அல்லது சிறிய அறைக்குள் செல்ல பயம் ஏற்படுவதை கிளாஸ்ட்ரோ ஃபோபியா என்று அழைக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் லிப்ட், சிறிய அறைகள் அல்லது சுரங்கப் பாதைக்குள் செல்லும்பொழுது மூச்சு விட சிரமப்படுவது போன்று உணர்வார்கள்.
1) கிளாஸ்ட்ரோ ஃபோபியாவின் அறிகுறிகள்:
அதிக வியர்வை, இதயத்துடிப்பு அதிகரிப்பது உயர் ரத்த அழுத்தம் போன்றவை இவற்றின் முக்கியமான அறிகுறிகளாகும். பதட்டத்தின் அறிகுறிகளைப் போலவே தலைசுற்றல், தலைவலி, வாய் வறண்டு போகுதல், சுவாசிப்பதில் சிரமம், உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும்.
2) தூண்டும் காரணிகள்:
கிளாஸ்ட்ரோ ஃபோபியாவை தூண்டக்கூடிய சில சூழ்நிலைகள் ஜன்னல்கள் இல்லாத ஒரு சிறிய அறையில் இருப்பது, விமானம் அல்லது காரில் செல்லும் பொழுது, கூட்டம் மிகுந்த லிப்டில் ஏறும்பொழுது இந்த பயம் அதிகரிக்கிறது. நெரிசலான பகுதியில் இருக்கும் பொழுது பயம் காரணமாக வியர்த்துப் போகுதலும், தலைவலி, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுவதாக உணர்வதும் இதனால் தான்.
3) காரணங்கள்:
கிளாஸ்ட்ரோ ஃபோபியா எதனால் ஏற்படுகிறது என்பதைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இதற்கு சுற்றுச்சூழல் காரணிகள் பெரும் பங்கை வகிக்கலாம் என்று நம்பப்படுகிறது. குழந்தை பருவத்திலோ அல்லது வளரும் பருவத்திலோ இந்த பயம் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த பயம் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாலும் ஏற்படலாம். சிறுவயதில் குளியலறை போன்ற ஒரு சிறிய இடத்தில் பூட்டப்பட்டு தண்டிக்கப்படுவதோ, நெரிசலான போக்குவரத்தில் நீண்ட நேரம் சிக்கிக் கொள்வதோ, மரபு வழியாகவோ இந்த பயம் ஏற்படலாம் என்று அறியப்படுகிறது.
4) தீர்வுகள்:
கிளாஸ்ட்ரோ ஃபோபியா என்பது மிகவும் பொதுவான பயங்களில் ஒன்று. சிலருக்கு இந்த பயம் தானாகவே மறைந்துவிடும். மற்றவர்களுக்கு சிகிச்சை தேவைப்படலாம்.
பொதுவாக உளவியல் சிகிச்சையால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைகள் பயத்தைப் போக்கவும், அதைத் தூண்டும் சூழ்நிலைகளிலிருந்து எழும் எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு நிர்வகிப்பது அல்லது மாற்றுவது என்பதை கற்பிப்பதன் மூலம் அந்த பயத்திலிருந்து வெளிவர முடியும்.
அறிவாற்றல் சிகிச்சை என்பது பயத்தால் ஏற்பட்ட எண்ணங்களையும், பதட்டத்தையும் மாற்றுவதற்காக முயற்சிப்பது. உதாரணத்திற்கு லிஃப்ட் ஆபத்தானது அல்ல. உண்மையில் அவை வேகமாக செல்ல விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்வதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதை நம்பவைக்க முயற்சிக்கும். அறிவாற்றல் சிகிச்சை பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை குறைக்க பயன்படுகிறது.
ஒவ்வொரு மூச்சையும் மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கப் பழகுவது, பாதுகாப்பான ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துவது, பயமும், பதட்டமும் நீங்கும் என்று மீண்டும் மீண்டும் தமக்குள்ளே நினைவூட்டி கொள்வது, பத்திலிருந்து ஒன்று வரை கீழ் வரிசையில் எண்ணுவது, பாதுகாப்பான இடத்தை மனதுக்குள் உருவாக்கிக் கொள்வது போன்ற பயிற்சிகள் நல்ல பலனளிக்கும்.
அமைதியைத் தரும் ஒரு இடத்தின் மீது கவனம் செலுத்துவது, கடிகாரத்தில் நேரம் கடத்துவது போன்ற பாதுகாப்பான ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துவது பதட்டத்தை குறைக்கும். பயம் பகுத்தறிவற்றது என்பதை மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்வது போன்றவை சிறந்த பலனை அளிக்கும்.