

காது குத்துவது, மூக்கு குத்துவது என்பவை அக்குபஞ்சர் வகை தான். அக்குபஞ்சர் என்பது இந்தியாவின், குறிப்பாக பண்டைய ஒருங்கிணைந்த தமிழ்நாட்டின், வர்மக்கலையில் இருந்து தோன்றியது என்பது உண்மை. அதனைப் பற்றி இப்பகுதியில் காண்போம்.
வர்மக்கலை என்பது மர்ம கலையின் ஒரு பகுதி. 'பொன்னூசித் திறவுகோல்' என்ற பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் சுவடியே அதற்கு சான்று. வளையல் போடுவது, மோதிரம் போடுவது என்பதுதான் அக்குபிரஷர்.
அக்குபஞ்சர் என்பது சீனத்து மருத்துவ முறை என்றாலும் அக்குபஞ்சர் என்ற பெயர் சீன மொழிச் சொல் அல்ல. அக்குபஞ்சர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லாகும். அக்குபஞ்சர் முறையை வில்லியம் டென்ரெனி என்ற ஐரோப்பியர் முறையாக செயல்படுத்தினார்.
'அக்கு' என்பது லத்தீன் மொழிச் சொல். அக்கு அல்லது அக்கஸ் என்றால் ஆற்றலான, கூர்மையான, உடனடியான, தீவிரமான என்பது பொருள். 'பங்சுரா' என்ற லத்தின் வார்த்தை உடன் சேர்ந்து பிறந்ததுதான் அக்குபஞ்சர் என்ற சொல்.
இவ்வைத்திய முறை சீனாவில் முழு வைத்திய முறையாக பயன்படுத்தப்பட்டதோடு, ரகசியம் எதுவும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலையில் இருக்கின்றது.
இம்முறையில் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களுக்கு தகுந்தாற் போல் உடம்பின் குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசியை சொருகி உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தும் முறையே அக்குபஞ்சர் சிகிச்சை முறையாகும்.
உடலில் அக்குபிரஷர் புள்ளிகள் எனப்படும் மையங்களில் விரல் நுனிகளை பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துவது அக்கு பிரஷர் முறை ஆகும்.
இந்தப் புள்ளிகளின் தொகுப்பு இந்தியாவில் வர்மம் என்றும், சீனாவில் டாய்ச்சி என்றும் மருத்துவமாக மட்டும் பயன்படும் போது அக்குபஞ்சர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த அக்குபஞ்சர் சிகிச்சை முறையானது 5000 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது.
உடலையும், உயிரையும், நரம்புகளையும், தசைகளையும் இயக்கக்கூடிய ஆற்றல் நம் உடலில் உள்ள பாகங்களில் சில மர்மமான முறையில் புள்ளிகளாக, மையங்களாக, சக்கரங்களாக, இருப்பதை நமது மூதாதையர்கள் அறிந்து இருந்தனர்.
அந்த புள்ளிகளை விரல் மற்றும் ஏதேனும் ஒரு பொருளின் மூலம் தொடுதல், தூண்டுதல், தடவுதல் மூலமாக தசைகள், நரம்புகள், நாளங்கள், நாளமில்லா சுரப்பிகள் மற்றும் உடலின் பாகங்களை மறுத்துப் போக வைக்கவும், ஊக்குவிக்கவும், செயலிழக்க செய்யவும், சரியாக செயல்பட வைக்கவும் செய்தனர்.
அதற்கு உதாரணம் தான் திருமணத்தின் போது கையில் கங்கணம் என்ற நூல் கட்டுதல், தாயத்து என்ற பெயரில் கட்டுதல், அரணாக்கொடி எனப்படும் கயிறு கட்டுதல், பூணூல் போடுதல் முதலியவை. இந்தப் புள்ளியை தொடும் பொழுது கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆற்றல் புள்ளிகளை பொறுத்தவரை ஒவ்வொரு புள்ளியின் ஆற்றலும் பரப்பளவு வித்தியாசப்படும்.
ஒரு சில புள்ளிகள் அளவில் ஒரு எள்ளின் அளவிலேயே இருக்கும். அந்த எள்ளின் அளவு மட்டுமே ஆற்றல் கொண்ட ஒரு புள்ளியை மிகத் தெளிவாக, மிகச் சரியாக அந்த குறிப்பிட்ட புள்ளிகளின் மீது அழுத்தினால் மட்டுமே இயக்கம் பெறும். சிறிதளவு நகர்த்தி அழுத்தினால் கூட அந்தப் புள்ளி இயக்கம் பெறாது.
பல்வேறு சுவிட்சுகள் உள்ள சுவிட்ச் போர்டில் லைட் அல்லது ஃபேன் போன்ற எந்த சாதனத்தை இயக்க வேண்டுமோ அந்த குறிப்பிட்ட சுவிட்ச்சை தட்டினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட சாதனம் இயங்கும். சிறிதளவு நகர்த்தி அழுத்தினால் வேறு சுவிட்ச் இயக்கப்பட்டு வேறு சாதனம் தான் இயங்கும்.
எனவே, அளவுமுறை என்பது அக்குபஞ்சரிலும், அக்குபிரஷரிலும், வர்மத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை முறையாக கற்று அதன் பிறகு நாம் சிகிச்சையை தொடரலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)