ஒரே ஒரு புள்ளி போதும்... தீராத நோயும் தீரும்!

Acupuncture for healthy life
Acupuncture
Published on

லக மரபுவழி மருத்துவங்களில் அக்குபங்சர்(Acupuncture) ஒரு தொன்மையான மருத்துவ முறையாகும். உலகம் முழுவதும் பின்பற்றப்படும் 104 மரபு வழி மருத்துவங்களில் மருந்தில்லா மருத்துவங்களின் தலைமை மருத்துவமாக அக்குபங்சர் விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 192 நாடுகளில் 178 நாடுகளும், உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள 129 நாடுகளில் 80 நாடுகளும் இப்போது அக்குபங்சரை அங்கீகரித்துள்ளன. ஒரு மருத்துவ முறை உலகெங்கும் இப்போது மிக வேகமாகப் பரவி வளர்ந்துள்ளதெனில் அது அக்குபங்சரே ஆகும்.

அக்குபங்சர் மருத்துவத்தின் தாய் நாடு எதுவென்ற விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும் கூட, சீனாவில் தான் அக்குபங்சர் தோன்றியிருக்க முடியும் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும், ஆதாரங்களும் நிரூபிக்கின்றன. கிமு.2697- 2596 வரை வாழ்ந்த சீனாவின் மஞ்சள் பேரரசர் ஹூவாங்- டி காலத்தில் தொகுக்கப்பட்ட 'நெய்ஜிங்' நூல் அக்குபங்சர் வரலாற்றின் துவக்க காலத்தை உறுதி செய்கிறது.

'உடலில் ஏற்படும் கழிவுகளின் தேக்கமே நோய்' என்கிறது அக்குபங்க்சர் மருத்துவம். அந்த கழிவுகளின் தேக்கத்தால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளைத்தான் நாம் நோயாக் கருதுகின்றோம். 'உடலின் இயல்பான இயக்கத்தில் உருவாகும் 'ஆற்றல் தடை' தான் நோய்' என்று கூறும் அக்குபங்சர், அந்தத் தடையை எளிமையாக நீக்கும் சிகிச்சையை முன்வைக்கிறது. உடலின் ஆற்றல் தடையையும், தேவையையும் உணர்த்தும் நோயறிதல் முறைகளையும், உடலில் இயற்கையாக அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளைத் தூண்டும் சிகிச்சை முறைகளையும் கொண்டுள்ளது அக்குபங்சர் மருத்துவம்.

இயற்கை விதிகளை மீறுவதே நோய்க்கான முதற்காரணமாகும். பசியேற்படுகையில் சாப்பிடாமல் இருப்பது, பசியின்றி சாப்பிடுவதும், ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் ஓய்வெடுக்காமல் இருப்பதும், அதிகப்படியான தூக்கமும், முறையற்ற உணவும் இயற்கை விதிகளை மீறுவதாகும். இத்துடன் புகை, மது போன்ற தீய பழக்கங்கள் சேர்ந்து கழிவுகளை அதிகப்படுத்துகின்றன. மேற்கண்ட காரணங்களால் உடல் உள்ளுறுப்புகளில் கழிவுகள் தேக்கம் கொள்கின்றன.

இந்நிலையில், தேங்கிய கழிவுகளை உடல் தானாகவே வெளியேற்ற முயலும், உடலின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைக்காமல், இயற்கைக்கு மாறான பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்போமானால் தேங்கிய கழிவுகள் பெருக்கமடைந்து அது சார்ந்துள்ள உறுப்பைக் பாதிக்கத் தொடங்கும். இந்நிலையில் தான் நாம் உடல் ரீதியான தொந்தரவுகளை உணருகிறோம்.

அக்குபங்சர் தத்துவ அடிப்படையில் ஒரே ஒரு புள்ளியைத் தேர்வு செய்து சிகிச்சை அளிக்கும் ஒற்றைப் புள்ளி சிகிச்சை முறை, மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் நோய்களைப் பிரித்து, அதற்கேற்றாற்போல பல புள்ளிகளில் சிகிச்சை அளிக்கும் பல புள்ளி சிகிச்சை முறை என இரு வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அக்குபங்சர் மருத்துவத்தை அறிவிக்க வேண்டும் என்ற சீன அரசின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனெஸ்கோ அங்கீகரித்தது.

அக்குபங்சர் சிகிச்சை முறை ஜப்பானில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜப்பான் அக்குபங்சர் வரலாறு ஏழாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது. பாரம்பரிய அக்குபங்சர் சிகிச்சை முறைகளில் மிக உயந்த முறையாக 'டான்ஷி அக்குபங்சர் முறை' குறிப்பிடப்படுகிறது. 'டான்ஷி' என்றால் ஜப்பான் மொழியில் உயர்ந்த முறை என்று பொருள். டான்ஷி முறையின் சிகிச்சை முறையே ஒரு புள்ளியைத் தேர்வு செய்வதுதான். ஒரே ஒரு புள்ளியை சரியாகத் தேர்வு செய்து, சிகிச்சை அளிக்கும் போது உயிர்ச் சக்தியில் மாற்றத்தை உருவாக்குவதாக டாக்டர்.குய் குவாஹரா குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் அக்குபங்சர் இருபதாம் நூற்றாண்டில் அறிமுகமானது. டாக்டர் ஆண்டன் ஜெயசூர்யா அவர்களின் தமிழக வருகை மூலமாகவும், அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர். பி.கே பாசு மேற்கு வங்கம் வழியாகவும் 1960 – 70 கால கட்டத்தில் அக்குபங்சர் இந்தியாவில் அறிமுகமானது.

இதையும் படியுங்கள்:
‘கிரிக்கெட் ஃபீட்’ : இது விளையாட்டு அல்ல... ஆழ்ந்த உறக்கத்துக்கான டெக்னிக்!
Acupuncture for healthy life

இந்தியாவிற்கு அறிமுகமான அக்குபங்சர் என்பது சீனாவில் பரவலாகப் பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்த பல புள்ளி சிகிச்சை முறைதான். அக்குபங்சர் மருத்துவம் இந்திய அரசால் சிகிச்சை முறையாக 2003 இல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இந்தியா முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் அக்குபங்சர் மருத்துவத்தை பாடமாகக் கற்பிக்கின்றன.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com