ஏடீஸ் கொசு முட்டை நிறம் கருப்பு! உஷார் மக்களே... உஷார்..!

Aedes mosquito eggs
Aedes mosquito eggs
Published on

- தா. சரவணா

தமிழகம் முழுவதும் இப்போது கன மழை. மிக கன மழை பெய்து வருகிறது. இது அப்போதைக்கு குளிர்ச்சியைக் கொடுத்தாலும், டெங்கு கொசுப்புழு வளர்வதற்கான சூழலை உருவாக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ‛ஏடீஸ்’ வகைக் கொசுக்கள், நல்ல நீரில் மட்டும் வளர்ச்சி அடைபவை. அதாவது ஏடீஸ் பெண் கொசுக்கள், நல்ல நீரில்தான் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இதனால் வீட்டைச் சுற்றி உள்ள இடங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்கி, ‛ஏடீஸ்’ கொசு வளர்ச்சிக்கு உதவும். அதனால்தான் இந்த சூழல், டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான காலமாக கருதி, மருத்துவத்துறையினர் போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள். இவர்கள் வீடு, வீடாகச் சென்று, டெங்கு கொசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். பின்னர் வீடுகளுக்குள் சென்று, நீ்ண்ட நாட்கள் தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பாத்திரங்கள், பிரிட்ஜ் பின்புறம், ஆட்டுக்கல், வீட்டு மாடிப்பகுதி என டெங்கு கொசுப்புழு எங்கெல்லாம் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க வாய்ப்புள்ளதோ, அந்த இடங்களில் ஆய்வு செய்து, கொசுப்புழுக்கள் இருந்தால் அவற்றை அழிப்பர். இந்நிலையில் சில இடங்களில், இவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காத சூழலும் உள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடீஸ் வகை கொசு முட்டைகளை எப்படி கண்டறிவீர்கள்? என உள்ளாட்சி அமைப்பு சுகாதாரப் பணியாளர்கள் சிலரிடம் கேட்ட போது,

"வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாத இடங்களில்தான், டெங்கு கொசுப்புழு இருக்கும். அது எங்களுக்குத் தான் தெரியும். மேலும் பெரிய கேன், அண்டா போன்றவற்றில் நீண்ட நாட்களாக தண்ணீர் பிடித்து வைத்திருந்தால், அதில், பாசி படர்ந்திருக்கும். அதன் உள்ளே பார்த் தால் கருப்பு நிற முட்டைகள் இருக்கும். அது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. நாங்கள் கையோடு கொண்டு செல்லும் நார்களை வைத்து பிளீச்சிங் பவுடர் மூலமாக நன்கு கழுவிக் காண்பிப்போம். மேலும் வாரத்துக்கு ஒரு முறை அவர் களையும் கழுவும்படி அறிவுரை கூறி வருகிறோம்" என்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆட்டுப்பால் அருந்துவதால் ஒவ்வாமை ஏற்படுமா?
Aedes mosquito eggs

முன்னரே கண்டறிதல் எப்படி?

ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் வாயிலாக இயங்கி வருகிறது. இங்குள்ள மாவட்ட பூச்சியியல் வல்லுனர் தலைமையில், அந்த மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இருந்து 25 கொசுப்புழுக்கள் எடுக்கப்படும். பின்னர் அவை சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் இதற்காக பிரத்யேகமாக இருக்கும் பெட்டியில் வைத்து வளர்க்கப்படும். 2 அல்லது 3 நாட்களில் அவை கொசுக்களாக வளர்ந்த பின்னர், அவை சென்னை அல்லது ஓசூருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்குள்ள பரிசோதனைக் கூடங்களில், ஆர்டிபிசிஆர் முறையில் கொசுக்கள் உடலில் டெங்கு வைரஸ் உள்ளதா? என பரிசோதிக்கப்படும். அதில் கொசுக்களுக்கு டெங்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த கொசுக்கள் எந்த வட்டாரத்தில் பிடிக்கப்பட்டதோ, அந்த இடத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com