நாம் சாலையிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ சில முதியவர்களைப் பார்த்திருப்போம். எழுபது அல்லது எண்பது வயதைக் கடந்திருப்பார்கள், ஆனால் அவர்களிடம் இருக்கும் உற்சாகத்தைப் பார்த்தால் இருபது வயது இளைஞர்களுக்கே பொறாமை வரும். அதே சமயம் வேறு சிலர், "எனக்கு வயசாகிவிட்டது, இனி என்ன இருக்கு" என்று முடங்கிப் போய் உட்கார்ந்திருப்பார்கள்.
இந்த இரண்டு வகையினருக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், அது கண்டிப்பாக அதிர்ஷ்டமோ அல்லது பரம்பரை ஜீன்களோ கிடையாது. அந்தத் துடிப்பான முதியவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் சில எளிய பழக்கவழக்கங்களே அவர்களை இளமையாக வைத்திருக்கிறது.
உடலையும் மனதையும் அசை!
மகிழ்ச்சியான முதியவர்கள் செய்யும் முதல் வேலை, காலையில் எழுந்ததும் உடலை அசைப்பது. இதற்காக அவர்கள் மைதானத்தில் ஓட வேண்டிய அவசியமில்லை. வீட்டுத் தோட்டத்தைச் சுத்தம் செய்வது, பால்கனி வரை நடப்பது அல்லது காபி போடும் நேரத்தில் கைகளை நீட்டி மடக்குவது எனச் சிறிய அசைவுகளைச் செய்கிறார்கள். காலையில் இப்படிச் சுறுசுறுப்பாகத் தொடங்குவது நாள் முழுவதும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.
அதேபோல, தினமும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்கிறார்கள். அது ஒரு புதிய மொழியாக இருக்கலாம் அல்லது யூடியூப் பார்த்துச் சமைப்பதாக இருக்கலாம். இதில் பாஸ் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, புதிதாகத் தெரிந்துகொள்கிறோம் என்ற ஆர்வமே அவர்களை மூளைச்சோர்வு அடையாமல் காக்கிறது.
நட்பு மற்றும் தூக்கம்!
இன்றைய காலத்தில் ஃபேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்கள் இருப்பதை விட, நேரில் பேச நான்கு நண்பர்கள் இருப்பதே ஆரோக்கியம். மகிழ்ச்சியான முதியவர்கள் வாட்ஸ்அப் வாழ்த்துக்களோடு நின்றுவிடாமல், நண்பர்களை நேரில் சந்தித்துப் பேசுவதையும், வாரம் ஒருமுறை ஒன்றாகச் சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அடுத்த முக்கியமான விஷயம் தூக்கம். என்ன நடந்தாலும் இரவு குறிப்பிட்ட நேரத்திற்குத் தூங்கச் சென்றுவிடுகிறார்கள். இரவில் கண் விழித்து டிவி பார்ப்பதோ, போன் நோண்டுவதோ கிடையாது.
சிரிப்பு!
தங்களிடம் ஏதாவது குறை இருந்தால் அதை நினைத்து வருந்தாமல், அதை நகைச்சுவையாக மாற்றிக்கொள்கிறார்கள். பெயர் மறந்து போனாலோ அல்லது போனை இயக்கத் தெரியவில்லை என்றாலோ, "எனக்கு வயசாகிடுச்சு பாருங்க" என்று தங்களையே கலாய்த்துச் சிரித்துவிட்டுப் போயிக்கொண்டே இருக்கிறார்கள்.
இறுதியாக, மிக முக்கியமான பழக்கம் 'நோ' சொல்வது. தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை அல்லது தங்களால் முடியாத வேலைகளைச் செய்யச் சொல்லி யாராவது வற்புறுத்தினால், எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் 'முடியாது' என்று சொல்லிவிடுகிறார்கள். இது அவர்களின் மன அமைதியைக் காக்கிறது.
மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் கம்ப சூத்திரம் கிடையாது. இவை அனைத்தும் நாம் நினைத்தால் இன்றே கடைபிடிக்கக்கூடிய எளிய மாற்றங்கள். 70 வயது வரை காத்திருக்காமல், இப்போதே இந்தப் பழக்கங்களைத் தொடங்கினால், முதுமை என்பது பயமுறுத்தும் விஷயமாக இருக்காது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)