
பகவான் கிருஷ்ணரும் சுதாமாவும் சிறுவயது நண்பர்கள். இருவரும் ஒரே குருவிடமிருந்து பயிற்சியைப் பெற்றனர். மேலும் குழந்தைப் பருவத்தில் இவர்கள் இருவரும் யாராலும் பிரிக்க முடியாதவர்களாக அத்தனை பாசத்தோடும் நட்போடும் இருந்தனர். பள்ளிப் படிப்பு முடிந்ததும், தங்கள் பந்தத்தை என்றென்றும் போற்றுவதாக இருவருமே ஒருவருக்கொருவர் உறுதியளித்தனர்.
ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணர் துவாரகையின் ராஜாவாகி, செழிப்பின் தெய்வமான ருக்மிணியை மணந்து கொண்டார். அதே சமயத்தில் சுதாமாவோ, ஒரு பண்டிதராகி, தனது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பெண்ணை மணந்தார்.
ஒரு பண்டிதராக இருந்ததால், சுதாமா அவர்களால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. காலப்போக்கில், மிகக் குறைந்த ஊதியத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் தேவைகளை நிர்வகிப்பது அவருக்கு மிகவும் கடினமாகிவிட்டது.
சுதாமாவின் மனைவி, கிருஷ்ணாவை சந்தித்து பண உதவியை கேட்குமாறு பரிந்துரைத்தார். "தங்களின் குழந்தைகளின் நலனுக்காக கிருஷ்ணரிடம் நிதி உதவி கேட்டால் நிச்சயமாக அவர் செய்வார்.
அவர் தான் உங்களுடைய பால்ய மற்றும் நெருங்கிய நண்பராச்சே.. எப்படி செய்யாமல் இருப்பார். ஒரு தரவை போய் பார்த்து விட்டு வாருங்கள்" என்றும் வற்புறுத்தினார்.
ஆனால், சுதாமாவோ தனது பால்ய நண்பரை அணுகி, அவரிடமிருந்து உதவி பெற வெட்கப்பட்டார். ஆனாலும் மனைவியின் வற்புறுத்தலை மறுக்க முடியாமல் அரை மனதோடு கிளம்ப முடிவு செய்து, கிருஷ்ணருக்கு பிடித்த அவலை, ஒரு பிடி ஒரு துணியில் கட்டி கொண்டு கிருஷ்ணருக்காக எடுத்துச் சென்றார். அவர் தன்னுடைய கிழிந்த உடையோடு தான் கிருஷ்ணரை பார்க்க கிளம்பினார்.
அரை மனதோடு கிளம்பினாலும் ஒரு பக்கம் கிருஷ்ணரை பாரக்க போகிறோம் என்கிற மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. ஒரு வழியாக துவாரகையை அடைந்து விட்டார். துவாரகை நகரமோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.
அவர் அரண்மனைக்குள் நுழைந்தார். அது அழகாகவும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காவலாளியிடம், "கிருஷ்ணரை பார்க்க வேண்டும். நான் அவருடைய பால்ய சிநேகிதன் சுதாமா வந்திருக்கிறேன்" என்று கூறுங்கள் என்றார். காவலாளியோ இந்த ஏழை எப்படி மன்னரின் தோழனாக இருக்க முடியும் என்று ஏளனமாக அவரை பார்த்த படியே கிருஷ்ணரிடம் போய்க் கூறினார். அதைக் கேட்ட கிருஷ்ணர் தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி ஓடி வந்தார்.
அவரை உள்ளே அழைத்து சென்றார். அவருடைய கால்களைக் கழுவி, அவருக்குத் தன் சொந்த இருக்கையை வழங்கினார். அவரை அரியணையில் அமர்த்தினார்.
கிருஷணர் சுதாமாவிடம், "நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய்?" என்று கேட்டார். கிருஷ்ணர் எப்போதும் குறும்புக்காரர். அவர் எப்போதும் கேலி செய்வார். ஆனால் சுதாமாவோ கூச்சப் பட்டு கொண்டு எதுவும் கொண்டு வரவில்லை என்று பொய் கூறி விட்டார். அவர் கொண்டு வந்த அவலை மறைக்க முயற்சிக்கிறார் என்று கிருஷ்ணருக்கு நன்றாகவே தெரியும்.
கிருஷ்ணர், "கொடுத்து விடு" என்று வற்பறுத்தினார். சுதாமாவோ, "நீ பெரிய ராஜா, நான் எப்படி இந்த அவலை உனக்கு வழங்க முடியும்?" என்று கேட்டார். பின்னர் கிருஷ்ணரே அதை அவரிடமிருந்து பறித்து கொண்டார். பிறகு அதை தனது வாயில் திணித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
பால்ய கதைகளை எல்லாம் பேசிக் கொண்டே இருந்தார். பிறகு சுதாமாவிற்கு தங்க தட்டில் விருந்து படைத்தார். ஆனால் சுதாமாவிற்கோ தன்னுடைய குழந்தைகளின் ஞாபகம் வந்தது. குழந்தைகளுக்கு உண்பதற்கு ஒன்றுமில்லையே என்று யோசித்து கொண்டே.. கிருஷ்ணரை மறுக்க முடியாமல் அந்த உணவை சாப்பிட்டார்.
ஒருவரை ஒருவர் சந்தித்ததில் இருவருக்குமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சுதாமா எதையும் கேட்காமல் அங்கிருந்து விடை பெற்று கொண்டு கிளம்பி விட்டார். வழி முழுவதும் மனைவிக்கு என்ன பதில் கூறுவது என்று யோசித்து கொண்டே வந்தார்.
என்ன ஆச்சரியம்...! அவர் தனது வீட்டை அடைந்ததும், தனது எளிய குடிசைக்கு பதிலாக அங்கு ஒரு பெரிய மாளிகையைக் கண்டார். அவரது குழந்தைகள் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் நகைகளை அணிந்து அவரை நோக்கி ஓடி வந்தனர். அவரது மனைவி ஒரு ராணியைப் போல அலங்கரித்து கொண்டு நின்றிருந்தாள். சுதாமா குழம்பி போய் முழித்து கொண்டிருந்தார். அவரின் மனைவியோ, "நீங்கள் துவாரகையை அடைந்த உடனேயே எல்லாம் மாறிவிட்டது" என்று கூறினாள்.
பின்னர் அவள், "நீங்கள் கிருஷ்ணரிடம் அப்படி என்ன கேட்டீர்கள்? இப்படி ஒரு அருமையான மாளிகையையும் செல்வத்தையும் அள்ளி கொடுத்து விட்டாரே" என்றாள். சுதாமா சிரித்துக்கொண்டே பதிலளித்தார். "நான் கிருஷ்ணரிடம் எதையும் கேட்கவில்லை, ஆனால், அவர் என் எல்லா தேவைகளையும் புரிந்துகொண்டு நிறைவேற்றி விட்டார். அவர் என்னுடைய உண்மையான நண்பர். அவருக்கு எல்லாம் தெரியும்." என்றார்.
இதுதான் கிருஷ்ணர் மற்றும் சுதாமா இருவருக்கும் இடையில் உள்ள நட்பை குறிக்கும் கதையாகும். இருவரும் நட்பிற்கு இலக்கணமாக இருந்தார்கள்.
இந்த கதையின் மூலமாக நமக்கு கிடைக்கும் நீதிகளை பார்க்கலாமா...
உண்மையான நட்பு தோற்றத்தையும், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தையும் பார்க்காது.
தன் நண்பன் ஆபத்தில் இருக்கும் போது அவன் கேட்காமலேயே உதவி புரிபவன்தான் உண்மையான நண்பன்.
சுதாமாவின் மனைவி ஒரு முறை சென்று முயற்சி செய்து பாருங்கள் என்று சுதாமாவை கிருஷ்ணரிடம் அனுப்பியதால் தான் அவர்களின் வாழக்கை செழுமையானது. அதைப் போல நாமும் முயற்சி செய்தால் எந்த வினையும் திருவினை ஆகும்.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்றை இந்த கதையின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். பகவான் கிருஷ்ணர் தம்மை நாடி வந்த சுதாமாவிற்கு அவர் கேட்காமலேயே எல்லாவற்றையும் அறிந்து தானாகவே அவருக்கு வேண்டியதை செய்தார். நாமும் கிருஷ்ணரை நாடினாலேப் போதும். நமக்கு தேவையானதை தக்க சமயத்தில் அவர் தானே நிறைவேற்றி வைப்பார்.