அளவுக்கு மிஞ்சினால் ஆன்டிபயாட்டிக்கும் நஞ்சு!

Alavukku Minchinaal Antibiotickkum Nanchu
Alavukku Minchinaal Antibiotickkum Nanchu

‘சளியா, காய்ச்சலா எதுவா இருந்தாலும் ஒரு மாத்திரை சாப்பிடுங்க, சரியாயிடும்’ – இது சாமான்யர்களின் கருத்தாக இருக்க, கொஞ்சம் படித்தவர்களோ, ‘சளி, காய்ச்சலுக்கு ஆன்டி பயாடிக் இன்ஜெக்‌ஷன் போட்டா போதும், கவலைப்பட வேண்டாம்’ என்பார்கள். தலைவலி, ஜலதோஷம் என்றால் நேராக மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று, ‘எனக்குத் தலைவலிக்குது, ஜலதோஷம் பிடிச்சிருக்கு’ என்று பிரச்னையைச் சொல்லி, தமக்குத் தெரிந்த ஆன்டிபயாட்டிக் மருந்தை வாங்கிப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அந்த மருந்தின் அளவு நமது பிரச்னைக்குரிய சரியான அளவா என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஆக, சிறுசிறு பிரச்னைகளுக்குக்கூட ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்தினால் காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி படிப்படியாக குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதேவேளையில், நோயின் பாதிப்பு, அதன் தீவிரம் தெரியாமல் வீரியமான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உடலுக்குள் செலுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவத் துறையில் பெரும் புரட்சியாகக் கருதப்படுவது ஆன்டிபயாட்டிக். ஆனால், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளும் நிலவுகின்றன. உண்மையிலேயே, நாம் பயன்படுத்தும் ஆன்டிபயாட்டிக் மருந்து, மாத்திரைகள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன? அதனை எப்படிப் பயன்படுத்துவது? அதனால் பாதிப்புகள் ஏற்படுமா? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்டிபயாட்டிக்: பாக்டீரியா நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளே, `ஆன்டிபயாட்டிக்’ (Antibiotics) என அழைக்கப்படுகின்றன. அதாவது, இயற்கையாக நம் உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தி செய்யவேண்டிய வேலையை, நாம் எடுத்துக்கொள்ளும் `ஆன்டிபயாட்டிக்’ மருந்து செய்கிறது.

ஆன்டிபயாடிக்கை அதன் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நம்முடைய உடலுக்குள் நுழைந்து நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் பணிகளைச் செய்யும் ஆன்டிபயாடிக், பாக்டீரிசைடல் (Bactericidal) என்று அழைக்கப்படுகிறது. நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை மட்டும் தடுத்து நிறுத்தக்கூடிய ஆன்டிபயாட்டிக் பாக்டீரியோஸ்டேட்டிக் (Bacteriostatic) என்று அழைக்கப்படுகிறது.

என்ன பரிசோதனை?: ஆன்டிபயாட்டிக் மருந்து ஒருவருக்குத் தேவையா? இல்லையா என்பதை அறிய நோயாளியின் இரத்தம், சிறுநீர், புண் சீழ் போன்றவற்றில் உள்ள கிருமிகளை வைத்து, அவை எந்த மருந்துக்குக் கட்டுப்படுகின்றன என்று பரிசோதிக்கப்படும். இந்தப் பரிசோதனைக்கு கல்ச்சர் அண்டு சென்சிட்டிவிட்டி சோதனை (Culture and Sensitivity Test) என்று பெயர். இதன் முடிவுகள் தெரிய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகும். பரிசோதனையின் அடிப்படையில் வயது, உடல் எடை, நோய் பாதிப்பின் தன்மை ஆகியவற்றுக்கேற்றாற்போல மருந்துகளின் அளவு பரிந்துரைக்கப்படுகிறது.

உதாரணமாக, 10 கிலோ வரை உள்ள ஒரு வயதுக் குழந்தைக்கு டிராப்ஸ் வடிவில் சிறிதளவு ஆன்டிபயாட்டிக் கொடுக்கப்பட வேண்டும். 20 கிலோவுக்கு மேல் 5 – 7 வயது உள்ளவர்களுக்கு பாதியளவும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரை, கேப்சூல், ஊசி, மருந்துகள் வடிவில் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், நோயாளிகளோ உடனடியாக குணமாக வேண்டும் என்ற நோக்கத்தில் உடனடி தீர்வையே விரும்புகிறார்கள். இதனால் மருத்துவர்கள் வீரியம் நிறைந்த (Heavy Doses) ஆன்டிபயாட்டிக் மாத்திரை மற்றும் ஊசிகள் மூலம் குணப்படுத்த முயல்கிறார்கள். அது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

என்னென்ன பாதிப்புகள்?: ஆ‌ன்டிபயாட்டி‌க் மரு‌ந்துகளை அடிக்கடி பயன்படுத்துவதாலும், தேவையில்லாமல் பயன்படுத்துவதாலும் காலப்போக்கில் உடலி‌ன் நோ‌ய் எதி‌ர்‌ப்புச் ச‌க்‌தி பா‌தி‌க்கப்படுகிறது. மேலும், அடிக்கடி இந்த மருந்துகளைச் சாப்பிடுவதால் உடலி‌ன் ஜீரண உறுப்புகள் கெட்டு, உடம்பிலுள்ள பி காம்ப்ளெக்ஸ் சக்தியில் இழப்பு ஏற்படுகிறது. மேலும், நாவறட்சி, வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் புண் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. மருந்து அலர்ஜி இருந்தால் சருமம் சிவந்துபோதல் மற்றும் தடிப்புகள் ஏற்படுகின்றன.

ஆன்டிபயாட்டிக் ரெஸிஸ்டன்ஸ்: ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிடக் கொடுத்த ஆன்டிபயாட்டிக் மருந்தை பாதியிலேயே சிலர் நிறுத்திவிடுவார்கள். சிலர் இடைவெளி விட்டுச் சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் தேவையான அளவுக்குச் சாப்பிடாமல் இருப்பார்கள். சிலர் குறைந்த அளவிலோ, அதிகளவிலோ சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். இதுபோன்ற காரணங்களால் உடலில் அந்த நோயை உண்டாக்கிய கிருமிகள் முற்றிலும் அழியாமல் போகலாம். அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க மீதமுள்ள கிருமிகள், தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிக்கொள்ளும். அதாவது, கிருமிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியானது ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிராக வலுப்பெறத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில், அவை ஆன்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ஆற்றலைப் பெற்றுவிடும். இதையே, ஆன்டிபயாட்டிக் ரெஸிஸ்டன்ஸ் (Antibiotic Resistance) என்கிறோம்.

இதையும் படியுங்கள்:
இதயத்துக்கு இதமளிக்கும் இயற்கை உணவுகள் ஏழு!
Alavukku Minchinaal Antibiotickkum Nanchu

தவிர்ப்பது எப்படி?

1. நோய்க்கான காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம் கூடாது. முக்கியமாக, ஆன்டிபயாட்டிக் மருந்து தேவையா என்று தெரிந்த பிறகே, அதைச் சாப்பிட வேண்டும். ஏனெனில், ஆன்டிபயாட்டிக் எல்லாவிதமான நோய்களுக்கும் அவசியமில்லை. சில நோய்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அத்தகைய நோய்களுக்கு உண்டான மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தினால் அது சரியாகிவிடும்.

2. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எத்தனை நாட்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதோ அத்தனை நாள் மட்டுமே உட்கொள்வது சிறந்தது. நோயின் தீவிரம் குறைந்துவிட்டதென இடையில் நிறுத்துவதோ, அதைவிடக் கூடுதலாக உட்கொள்ளவோ கூடாது.

3. பெரியவர்களுக்கு மட்டுமே கொடுக்கக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஒருபோதும் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

4. சரிவிகித உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுதல், உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம் போன்ற ஆரோக்கிய பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்வதால் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

5. கொசுத் தடுப்பு, சுகாதாரமான குடிநீர், பொதுச் சுகாதாரத்தைப் பின்பற்றுவதன் மூலம் நோய் தொற்றுக்கான காரணிகளைத் தவிர்க்க முடியும்.

கவனமாக இருங்கள், நாம் சாப்பிடும் மருந்தே நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவும், கெடுக்கவும் வல்லவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com