அலர்ஜியை விரட்டி ஆயுசைக் கூட்டும் ஆடாதோடை!

ஆடாதோடை
ஆடாதோடை
Published on

டாதோடை செடி எங்கெல்லாம் வளர்கிறதோ, அங்கேயிருக்கும் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கிக்கொண்டு, மனிதனுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடுகிறது. அதனால்தான் இது, ‘ஆயுள் மூலிகை’ என்று போற்றப்படுகிறது. பொதுவாக, எந்த இலைகளையுமே ஆடுகள் சாப்பிட்டுவிடுமாம். ஆனால், இந்த இலையை மட்டும் தொடாமல் விட்டுவிடுமாம். அதனால்தான், இதற்கு ஆடு தொடா இலை என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

‘வாசிசின்’ என்ற வேதிப்பொருள் இதில் இருப்பதால், நுரையீரலுக்கு பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியது இந்த இலைகள். எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதோடையிலிருந்தே தயாராகின்றன என்பதுதான் இதன் சிறப்பு. கசப்புத் தன்மை நிறைந்த ஆடாதோடை இலைகளை நீரில் போட்டு காய்ச்சி குடித்தாலே பூச்சிகள், நச்சுக்கள் வெளியேறி, குடல் சுத்தமாகும்.

சளி, காய்ச்சல் வந்தாலும், இந்த இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மொத்த காய்ச்சலும் நீங்கிவிடும். இந்த சாறு குடித்து வருபவர்களுக்கு, உடலில் எந்த அலர்ஜியும் ஏற்படாது. அவ்வளவு ஏன்? வெறுமனே இந்த இலையை பறித்து, நெருப்பில் போட்டு, அந்த புகையை இழுத்தாலே நெஞ்சிலுள்ள சளி கரைந்துவிடும்.

இரத்தக் கொதிப்பு பிரச்னையை போக்கவும் இந்த இலைகள்தான் துணைபுரிகின்றன. குறிப்பாக, இரத்தம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு பேருதவி புரிகின்றன. அதிலும், பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தின்போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை தடுத்து நிறுத்த இந்த இலைகள் கை கொடுக்கின்றன.

கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல், இந்த செடியின் வேரை கஷாயம் தயாரித்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆவதோடு, கர்ப்பப்பையையும் வலுப்படுத்துகிறது. ஒரு கைப்பிடி அளவுக்கு, ஆடாதோடை இலைகளை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டாலே அதிகமான இரத்தப்போக்கு நின்றுவிடும்.

உடலில் ஏற்படும் காயங்களுக்கு ஆடாதோடை இலையுடன் வெற்றிலையை சேர்த்து, மென்று விழுங்கினால் உடனடி நிவாரணம் கிடைத்துவிடும். அதேபோல, இந்த இலையின் சாறில் தேன் கலந்து சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோயும் குணமாகும்.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து, பிறகு, மெல்லிய வெள்ளை துணியில் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பவுடரை 3 வேளையும் ஒரு ஸ்பூன் வீதம், 6 மாத காலம் சாப்பிட்டு, வெந்நீரை குடித்துவந்தால் இரத்த அழுத்தம் சீராகும். அத்துடன், நுரையீரல், சைனஸ், ஆஸ்துமா பிரச்னை என அனைத்துமே நீங்கிவிடும். 48 நாட்களுக்கு இந்த ஆடாதோடை இலையை சாப்பிட்டு வந்தால் கடுமையான T.B நோயும் விலகிவிடுமாம். ஆடாதோடை இலையில் இருக்கும் ‘வாசினி’ எனும் சத்துப் பொருள் காசநோய்க்கு காரணமான கிருமியின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, மூச்சுக் குழாயில் கட்டியாக அடைத்துக் கொண்டு இருக்கும் சளியை கரைத்து டி.பி. மற்றும் இருமல் வராமல் செய்கிறது.

சித்த மருத்துவத்தில் இந்த இலைகளுக்கு இன்னமும் மவுசு அதிகமாக உள்ளன. கடுமையான காய்ச்சல்களுக்கு தரப்படும் குடிநீர் வகைகளில், இந்த ஆடாதோடையை கட்டாயம் சேர்த்து தயாரிக்கிறார்கள். காரணம் ஆஸ்துமா, இருமல் போன்ற தொந்தரவுகளை நெருங்க விடாது இந்த இலைகள். நுரையீரலில் தேங்கிக் கிடக்கும் சளியை முற்றிலும் போக்கக்கூடியது இந்த ஆடாதோடை இலைகள்.

இதையும் படியுங்கள்:
சண்டை சச்சரவு இல்லாத திருமண வாழ்க்கைக்கு 10 குறிப்புகள்!
ஆடாதோடை

‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழிகூட உண்டு! தினமும் சிறிது ஆடாதோடை இலையை அரைத்து, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து சுவைத்து வர, தொண்டையில் உண்டாகும் கரகரப்பு, சளி போன்றவை நீங்கி இனிமையான குரல் வளம் உண்டாகும். தொண்டைப் பகுதியில் ஏற்படும் கிருமித்தொற்றை சரிசெய்து, பாதிக்கப்பட்ட குரல்  வளத்தை மீட்டெடுக்கும் சக்தி ஆடாதோடைக்கு உள்ளது.

கசப்புத்தன்மை நிறைந்த இந்த இலைகள், இரத்தத்தை சுத்திகரிக்கச் செய்கிறது. வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கி, வயிற்றை சுத்தப்படுத்தும் தன்மை இந்த மூலிகைக்கு நிறையவே உண்டு. இந்த ஆடாதோடை இலைகளை தூள் செய்து, தண்ணீரில் கலந்து குடித்துவந்தால் தசை வலிகள் நீங்கிவிடும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஆடாதோடை இலையுடன் சிறிது துளசி மற்றும் குப்பைமேனியும் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால், உடலிலுள்ள நஞ்சு முறிந்துவிடும்.

இந்த இலை அல்சருக்கு அருமருந்து. கருக்கலைப்புக்கு ஆடாதோடை இலையை வட மாநிலங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இரத்தக் கசிவு உபாதைகளை சரிசெய்யும் ஆற்றல் மிக்கது ஆடாதோடை. அதேபோல, உடலில் புண்கள், தழும்புகள் இருந்தால், இந்த ஆடாதோடை இலையுடன் வேப்பிலை, சிறியா நங்கை இலை சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் நிவாரணம் காணலாம். இவ்வளவு மகத்துவம் நிறைந்த ஆடாதோடை இலைகளை, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று பயன் பெறுவதே சிறந்த ஆரோக்கியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com