விளாம்பழத்தில் உள்ள வியக்கத்தக்க பலன்கள்!

Super Benefits of Vilampazham
Vilampazham
Published on

விளாம்பழம் பெரோனியா எலிபன்டம் என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தியாவை தாயகமாகக் கொண்ட விளாம்பழம் பித்தத்தை தெளியவைக்கும் அரிய மூலிகை என்பதால் அதை கற்பக விருட்சமாக நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உடல் வலிமைக்கு உகந்த விளாம்பழம் பித்தத்தை போக்கிவிடும் மருத்துவ குணம் கொண்டது. பித்தம் சம்பந்தமான வியாதியிருப்போர் விளாம்பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று எனும் வீதத்தில் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணமாகும். இதில் ஒரு நிபந்தனை ஒரு பழத்தை முழுவதும் ஒருவர்தான் சாப்பிட வேண்டும். மற்றவர்களோடு பகிர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஒரு பழத்தில் ஒரு விதையில்தான் பித்தத்தை போக்கும் சத்து இருக்கிறது. அதனால்தான் முழு பழத்தையும் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

நல்ல நினைவாற்றல் மற்றும் கண் பார்வைக்கும் ஏற்றது இந்தப் பழம். சீதபேதி, பேதி போன்றவற்றுக்கு பழுக்காத விளாங்காயை தண்ணீரில் போட்டு அவித்து அதை உடைத்து உள்ளே இருக்கும் சதைப் பகுதியை மட்டும் காலையில் மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட குணமாகும். எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் ஏற்ற பழம். இது இருதய வலிமைக்கு மட்டுமல்ல, அதன் சீரான இயக்கத்திற்கும் உதவும் பழம்.

இப்பழம் புளிப்பு சுவையுடையது. அதனால் அதை ஈடுகட்ட வெல்லத்தூள் சேர்த்து சாப்பிடுகிறோம். இது புளிப்பு சுவை கொண்டது என்பதால் இது சீதளம், குளிர்ச்சி எனக் கருதி பலரும் தவிர்க்கிறார்கள். இதனை வெல்லம் சேர்த்து சாப்பிட, உமிழ் நீர்ச் சுரப்பி நன்கு வேலை செய்து தொண்டைப் புண் நோய் குணமாகிறது. அதோடு, பித்தநீர் சுரப்பியையும் கட்டுப்படுத்தும். விளாம்பழத்தை வெல்லம் சேர்க்காமல் சாப்பிட்டு வர நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.

விளாம்பழத்தை தேனில் கலந்து குழைத்து அதில் வறுத்து பொடி செய்த திப்பிலியை கலந்து சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் சரியாகும். விளாம்பழ ஓட்டை பொடி செய்து விஷக்கடிகளுக்கு பூசலாம். விளாம்பழத்தையும் பூசலாம். விளாம்பழத்தில் உள்ள ‘பெக்டினில்’ இருந்து பிரித்தெடுக்கப்படும் ‘பாலி சாக்ரைடு‘ என்ற மூலப்பொருள் மூளையில் உருவாகும் கட்டிகளை தடுப்பதற்கு பயன்படுகிறது என்கிறார்கள் இந்திய மருத்துவ விஞ்ஞானிகள். இதே மருந்து பாம்புக்கடி சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விளா மரத்திலிருந்து வடியும் பிசினை தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும். விளாமர கொழுந்து இலையை சாறு எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படும. பித்த நீர் கோளாறு சரியாகும்.

இதையும் படியுங்கள்:
மல்லிகைப் பூ ஒரு வாரம் ஃபிரஷாக இருக்க சில யோசனைகள்!
Super Benefits of Vilampazham

விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது. மேலும், இதில் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ‘ஏ’ உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன. விளாம்பழம் மட்டுமின்றி, அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக விளாம்பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதிப் பொருட்களும், பட்டையில் பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளன.

விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும், தலை வலி குறையும், கண்பார்வை மங்கல் குணமாகும், பசியை தூண்ட செய்யும். இதயத்தை பலம் பெற செய்யும். மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும். இதய துடிப்பை சீராக வைத்திருக்கும். வாயுத் தொல்லை நீங்கும். நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். இந்தப் பழம் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் தீரும். இது உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது. வாய்ப்புண், குடல் அல்சர் நன்கு குணமடையும்.வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

விளாம்பழம் பசியை தூண்டக் கூடியது. இரத்தம் சுரக்கும் தன்மை கொண்டது. வாந்தியை கட்டுப்படுத்தும், மலத்தை இறுக்கும், பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றலை போக்கிவிடும். முக்கியமாக, கோழையை அகற்றிவிடும். வாய்ப்புண், ஈறு பிரச்னைக்கு நல்லது. இருமல், சளியை எடுக்கும். குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்தப் பழத்தை கொடுத்தால் உள்ளுறுப்புகளில் புண் ஏதேனும் இருந்தாலும் அது ஆறிவிடும். ஆஸ்துமா, அலர்ஜிக்கு அருமருந்தாக இது அமைகிறது. விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் விளாம்பழமும் முக்கியமான நைவேத்தியமாக வைத்துப் படைத்து இருப்பீர்கள். இந்தப் பழத்தை வீணாக்காமல் உண்டு உடல் நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com