ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் இறக்கி அதில் அரை கப் கருவேப்பிலையை போட்டு, ஒரு தட்டு கொண்டு மூடி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து கறிவேப்பிலையின் எசன்ஸ் முழுவதும் நீரில் இறங்கி இருக்கும். இதனை வடிகட்டி அதனுடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துப் பருக, உடலுக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். இதுவே கறிவேப்பிலை தேநீர் எனப்படுகிறது. இனி, இந்தக் கறிவேப்பிலை தேநீர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
இதமான நறுமணம் கொண்ட இந்தக் கருவேப்பிலை டீயை அருந்த நம் மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதிப்படுத்த உதவும். கர்ப்பமான பெண்கள் காலையில் இந்த டீயை வெறும் வயிற்றில் அருந்த மார்னிங் சிக்னஸ் மற்றும் குமட்டலை சரி செய்யும்.
ஆயுர்வேதத்தில் மிகவும் சிறப்பித்துக் கூறப்படும் இந்தக் கருவேப்பிலையை கொண்டு டீ தயாரித்து பருக, மலச்சிக்கல், வாய்வு பிரச்னை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். மழைக்காலங்களில் இதனை இரண்டு வேளை பருக, நாம் எந்த விதமான நோய் தொற்றுகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம்.
இந்தக் கறிவேப்பிலை டீ இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், தலைமுடிக்கு ஆரோக்கியத்தை உண்டாக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் புரதச்சத்து உள்ளதால் பொடுகு தொல்லைகளைப் போக்கி தலைமுடி உதிர்வு பிரச்னையையும் சரி செய்யும். ஒற்றைத் தலைவலியை போக்கும். பி.சி.ஓ.எஸ் எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோமை சரி செய்ய உதவும்.
கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ஏ சத்து கறிவேப்பிலை டீயில் உள்ளது. இளநரையை இது தடுக்கும். உடல் எடையையும் குறைக்க உதவும். வாய் துர்நாற்றத்தை போக்கும். ஹார்மோன்களை சம நிலையில் வைக்க உதவும். காலை பொழுதை புத்துணர்ச்சியாக்கும். சிகாகோ பல்கலைக்கழகத்தின் மூலிகை மருத்துவ ஆராய்ச்சிக்கான டாங் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் இரத்த சர்க்கரை அளவை 45 சதவிகிதம் குறைக்க கருவேப்பிலையை பயன்படுத்தினர். கறிவேப்பிலை தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்கும்.
இப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட இந்த கருவேப்பிலை டீயை வெதுவெதுப்பான சூட்டில் அருந்த வாசம் மிக்க இந்த டீ உடலுக்கு மிகவும் நன்மை செய்யும்.