
‘மஞ்சணத்தி’ என அழைக்கப்படும் நுணா மரத்தின் வேர் முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவையாக உள்ளன. தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு போன்ற பல பெயர்களும் இம்மரத்துக்கு உண்டு. இதன் தண்டு பகுதியின் தோலை சீவினால் உட்புறத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் கட்டையை வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைக் கொண்டு ஆடைகளுக்கு சாயமேற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன. குயில்கள் இம்மரத்தின் பழங்களை விரும்பி சாப்பிடும். இதன் முதிர்ந்த மஞ்சள் நிறக் கட்டைகள் விவசாயக் கருவிகள் செய்யவும், சிறு மரச் சாமான்கள், பொம்மைகள் செய்யவும் மிகவும் உகந்தவை.
மருத்துவப் பயன்கள்:
* மஞ்சணத்தி தாவரத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், நோயினால் தளர்ந்த உடல் ஆரோக்கியமாக்கும்.
* உடல் வெப்பத்தை இது அதிகரிக்கும்.
* இதன் இலை, காய், பழங்கள் அனைத்துமே வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும்.
* பெண்களுக்கு மாதவிலக்கைத் தூண்டும்.
* குழந்தைகளுக்கு வரும் கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும்.
* ஐந்து மஞ்சணத்தி இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக நசுக்கி அரை லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து தினமும் காலை, மாலை வேளைகளில் 20 மி.லி. வீதம் குழந்தைகளுக்கு கொடுத்தால் மாந்தம், கழிச்சல் ஆகியன குணமாகும்.
* புண்கள், சிரங்குகள் உள்ள இடத்தில் மஞ்சணத்தி இலையை அரைத்துப் பூசினால் எளிதில் குணமாகும்.
* மஞ்சணத்தி காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் பல் துலக்கினால் சொத்தை பல் வராது.
* 10 கிராம் மஞ்சணத்தி வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்தால் பேதி நின்றுவிடும்.
* ஐந்து மஞ்சணத்தி இலையோடு ஒரு கொத்து வேப்பங்கொழுந்தை சேர்த்து வதக்கி, இதனுடன் 2 கிராம் சுக்கு, மிளகு, ஒரு தேக்கரண்டி ஓமத்தை நசுக்கி அரை லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி மூன்று தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.
* ஐந்து மஞ்சணத்தி இலையை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்தோடு வதக்கி இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம், ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை, மாலை இரு வேளையும், வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம் குணமாகும்.
* நொச்சி, உத்தாமணி, பொடுதலை இலை சாற்றுடன் ஒரு அளவு மஞ்சணத்தி இலை சாறு கலந்து தினமும் மூன்று அல்லது நான்கு முறை சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான இரைப்பை பிரச்னைகளும் முற்றிலும் தீரும்.
* சிறிது மிளகுத் தூள், கால் ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து, மஞ்சணத்தி இலை மற்றும் பழத்தின் விழுதுடன் சேர்த்து கொதிக்க வைத்து, 50மி.லி. மற்றும் 100 மி.லி. வீதம் 48 நாட்களுக்கு குடித்து வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதிக இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் தீரும்.