Banyan tree Benefits
Banyan tree Benefitshttps://www.siddhamaruthuvam.in

ஆலமரத்தின் ஆச்சரிய மருத்துவ குணங்கள்!

Published on

லமரம் ஒரு புனித மரமாகவே போற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஆலமரத்திற்குக் கீழே பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இம்மரம் ஒரு ஒட்டுயிரி இனம் ஆகும். ‘ஃபைக்ஸ் பெங்ஹாலென்சிஸ்' என்னும் ஆலமரமானது நம் நாட்டின் தேசிய மரமாக விளங்குகிறது. இதன் விதைகள் மற்றும் பழங்களை உண்ணும் பறவைகளால் இம்மரம் பரப்பப்படுகிறது. ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.

ஆலமரத்து பால்: ஆலமரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதை சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், மூலநோய், கட்டிகள், வலிகள் நீக்கப் பயன்படுகிறது. ஆல மரத்து பாலையும், எருக்கம் பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்து பூசுவதனால் புண்கள் விரைவில் ஆறிவிடும்.

பழங்கள்: ஆலம் பழங்களைக் காயவைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபக மறதி நீங்கும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். உலர்த்திய பழங்களை பவுடராக்கி சம அளவு சர்க்கரை கலந்து காலை மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால் மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும். இது தசை வலிகளை நீக்கும். பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளை இது போக்க வல்லது. பல் வலி நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல் வலி போகும். மேலும் குளியல் சோப்பு தயாரிக்கவும் இது பயன்படுகிறது.

குச்சி: ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பது பழமொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களை தேய்த்து வந்தால் பற்களும், ஈறுகளும் வலிமை பெறும். ஆலங்குச்சியில் ஒருவித துவர்ப்புத் தன்மையை கொடுக்கும் பால் இருக்கும். இந்த பால் தேய்க்க தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியை கொடுக்கிறது.

பூக்கள்: ஆலமரத்தின் பூக்காம்புகளை அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கி இத்துடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தினால் இந்திரியத்தில் உயிரணுக்கள் கூடும்.

விழுதுகள்: ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனிசக்தி உண்டு. ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் 6 கிராம் அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடித்து வந்தால் வாந்தி நின்று விடும்.

இதையும் படியுங்கள்:
வாயை திறந்தபடி தூங்குவதன் பாதிப்பும் நிவாரணமும்!
Banyan tree Benefits

இலைகள்: ஆலமர இலைகளை கஷாயமிட்டு அதனை பாகு போல் செய்து சாப்பிடுவதால் ஞாபக மறதி நோய், கிராந்தி நோய்கள் குணமாகிறது.

வேர்பட்டை: ஆலம் வேர் பட்டை 12 கிராம் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் இட்டு குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து குணம் கிடைக்கும். மேலும். காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்த இம்மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்து பவுடராக்கி பாலுடன் கலந்து கொடுக்கலாம். மேலும் மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றை குடிப்பதன் மூலம் சீதபேதிக்கு நிவாரணம் காணலாம். மகப்பேறு காலங்களிலும், பாலூட்டும் தாய்மார்களும் ஆலமரத்தின் சாறை குடிக்கக் கூடாது.

மனிதர்களுக்கு ஒரு நண்பனாக, மனித உடலை பாதுகாக்கும் பாதுகாவலனாக பல பண்புகளையும், பல நன்மைகளையும், அடக்கி வைத்திருக்கும் ஆலமரமானது நமக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது. ஆலமரத்தை வைத்துப் பராமரித்தால் ஆக்ஸிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும். தெருவுக்கு அல்லது ஊருக்கு ஒரு ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மனதிற்கு அமைதி கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com