கிராமங்களின் சாலை ஓங்களில் வளர்ந்து இருக்கும் தாவரம் ஆனைகற்றாழை. இதை உயிர் வேலியாக விவசாய நிலங்களில் வைத்து இருப்பார்கள். 1970ல் ஏற்பட்ட பஞ்ச காலத்தில் இந்த கற்றாழை செடியின் நடுப்பகுதியில் ஒரு கிழங்கு இருக்கும். அதை சாப்பிட்டுத்தான் பசி ஆற்றினார்கள் சில ஏழை மக்கள். அந்தக் கிழங்கு சாதாரணமான கிழங்கு அல்ல, மருத்துவத் தன்மை கொண்டது. அதை சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் இன்றும் சில இடங்களில் இருக்கிறார்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன்.
இன்றும் சித்த மருத்துவம் செய்பவர்கள் இதன் கிழங்கை எடுத்து பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்தக் கற்றாழை முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.
இதன் வேரை தட்டி போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சிறுநீரகப் பிரச்னை, கல்லீரல் கொழுப்பு பிரச்னை, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை போன்றவற்றுக்கு மருந்தாகும்.
இதன் மடல்களை மேல் பகுதியை சீவி எடுத்து உள் பகுதியில் நல்லெண்ணெய் தடவி தீயின் அனலில் வாட்டி மடல்களை முறுக்கினால் சாறு வரும். அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து அதில் கேழ்வரகு மாவு கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்து அந்த கலவையை மூட்டு வலி, கால் வலி ஜவ்வு தேய்மானம், உட்கார்ந்து எழ முடியாமல் அவதிப்படுபவர்கள் வலி உள்ள இடத்தில் தடவி வர சீக்கிரம் குணமாகும்.
மரக் கட்டிலில் இதன் நார் கொண்டு பின்னி வந்தனர். இதன் நாரில் இப்போது பல்வேறு கைவினை பொருட்கள் செய்யப்படுகின்றன.
இதன் மடல்களைத் தட்டி தண்ணீரீல் ஊற வைத்து நார் எடுத்து அதில் கோரைபாய் செய்யும்போது அதில் இணைப்பு நூலாக பயன்படுத்தி வந்தனர். அதில் படுத்து உறங்கினால் உடலில் பல நோய்கள் குணமாகும்.
தியானம் செய்பவர்கள் அந்த நாரை ஆசனம் போல செய்து அதில் உட்கார்ந்து தியானம் செய்ய, உடல் சூடு தணியும். வலி மண்டலத்தில் உள்ள நல்ல கதிர்வீச்சு அவர் உடலில் தங்கும் என்று சொல்லப்படுகிறது.
இதன் நாரில் கயிறு செய்து ஆடு, மாடுகள் கட்ட பயன்படுத்தி வந்தனர். இதனால் கால்நடையை எந்த நோயும் தாக்காது இருந்தது. இதன் நாரில் இருந்து மெல்லிய நூல்கள் எடுத்து சேலைகள் நெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் நாரில்தான் மூலிகை எடுக்கும்போது காப்பு கட்டுவார்கள்.
இந்தக் கற்றாழையில் இருந்து பயோ டீசல், வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக வேறு சர்க்கரை என எடுக்கலாம் என்று வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அழிந்து வரும் மர பட்டியலில் உள்ள இந்த ஆனைகற்றாழையை முடிந்தவரை பாதுகாப்போம்.