

குடல்வால் அழற்சி என்பது சிறுகுடல், பெருங்குடல் சந்திக்கும் இடத்தில் உள்ள அப்பெண்டிக்ஸ் பகுதியில் கிருமி தொற்று, புழு தொற்று அல்லது உணவு சிக்கல் காரணமாக ஏற்படும் ஆபத்தான நிலை. திடீர் நடுவயிறு அல்லது வலது பக்க வலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் மருத்துவர் பிரகதீஷ் சுப்ரமணியன் (பொது நல மருத்துவர்) விளக்குகிறார்.
மனித வளர்ச்சியில் பல மாறுதல்கள் வந்து பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதில் குடல்வால் எனப்படும் அப்பெண்டிசைடிஸ் பெரிதாக கண்டு கொள்ளப்பட்டாமல் வலி ஏற்பட்டால் மட்டுமே அதை பற்றி யோசிப்போம் .
சிறுகுடலும், பெருங்குடலும் சேரும் இடத்தில் ஒரு வால் போன்று காணப்படுவது தான் குடல்வால். இது இருப்பதால் எந்த வித நன்மையோ, கெடுதலோ இல்லை. ஆனால் சிறுகுடலில் செரிக்கப் பட்ட உணவுப் பொருள், பெருங்குடலுக்கு செல்லும் போது இந்த குடல்வால் உள்ளே மாட்டிக் கொள்ளும். அங்கு தான் பிரச்னை தொடங்குகிறது.
உள்ளே சிக்கிய பொருளில் கிருமிகள் நன்கு வளர்ச்சியடைந்து , ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டும் போது இந்த குடல்வால் வெடித்து விடும். தவிர குடல்வாலில் புழு, கிருமி தொற்று ஏற்படுவதாலும் பிரச்னைகள் ஏற்படும்.
குடல்வால் பிரச்னை முதலில் நடுவயிற்றில் அல்லது வலது பக்கத்தில் வலியுடன் ஆரம்பிக்கும். சில மணி நேரங்களில் வலி அதிகரித்து , அடிவயிற்றை தொட்டாலே வலி உண்டாகும், அதிகரிக்கும். வாந்தி, குமட்டல், காய்ச்சல், வயிற்று போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படலாம். நடக்கும்போது குனிந்தபடி நடப்பார்கள்.
இந்த பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக குழந்தைகள் மற்றும் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை அதிக அளவில் தோன்றுகிறது. எந்தவித முன் அறிகுறியோ, முன்னெச்சரிக்கை யோ இன்றி திடீர் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாகி விடும்.
வலி ஏற்பட்டதும் உடனடியாக அல்ட்ரா சவுண்ட் மற்றும் அறுவை சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனைக்கு செல்வது அவசியம். ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் குடல்வால் பிரச்னையை கண்டறியலாம்.
ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் , அதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொண்டாலே போதும். ஆனால் வலி முற்றிய நிலையில் தாமதிக்காமல் அறுவை சிகிச்சை செய்வதே நல்லது.
தற்போதெல்லாம் லாப்ராஸ்கோப்பி மூலமாக சில மி மீ அளவில் துளைகள் இட்டு மிக துல்லியமாக குடல்வால் அகற்றப்படுகிறது. இதனால் ரத்த இழப்பு மிகவும் குறைவு. ஒரே நாளில் வீட்டுக்கு திரும்பி விடலாம்.
ஒரு வேளை குடல்வால் வெடித்து விட்டால், கிருமிகள் தொற்றை முழுவதுமாக நீக்க வாஷ் செய்ய வேண்டும். பெரும்பாலும் இதை லாப்ராஸ்கோப்பியில் செய்வார்கள். சில மையங்களில் ஓப்பன் முறையில் செய்கின்றனர்.
பொதுவாக நார்ச் சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்பவர்களுக்கு குடல்வால் பிரச்சனை தோன்றுவது இல்லை. நீர் அதிகம் அருந்துதல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்ளுதல் போன்றவை குடல்வால் பிரச்னையை தடுக்கும்.
உடலுக்கு தீங்கு ஏற்படாத நிலையில் இதை அகற்றுவது தவறானது. வயிறு தொடர்பான அறுவை சிகிச்சையின் போது செரிமான மண்டலத்தில் உள்ள உறுப்புகளை ஆய்வு செய்து அந்த நேரத்தில் குடல்வால் வீக்கம் தென்பட்டால் மட்டுமே, இதை அகற்றலாம்.
உணவில் அதிக அளவில் நார்ச்சத்து சேர்த்து கொள்ள வேண்டும். இது குடல்வால் பிரச்னைக்கான வாய்ப்பை தடுக்கும்.