1°C வெப்பநிலை உயர்வு: தொழிலாளர்களின் சிறுநீரகங்களை அச்சுறுத்தும் வெப்ப அழுத்தம்! பாராளுமன்ற அறிக்கை!

இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பத்தால் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் 8% வரை அதிகரிப்பதாக நாடாளுமன்ற குழு எச்சரித்துள்ளது.
kidney Stone
kidney Stone
Updated on

உலகில் உயரும் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு ஏற்ப , வெயிலில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் 8% வரை அதிகரிக்க கூடும் என்று இந்திய நாடாளுமன்ற குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் பலரும், வெயிலில் வெளிப்புறங்களில் வேலை செய்யும் சூழலில் இருக்கின்றனர். நாட்டில் உயரும் வெப்பநிலைக்கு ஏற்ப இவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பும் ஏற்படுகிறது. இவர்கள் சந்திக்கும் நீண்ட கால வெப்ப அழுத்த பிரச்சனைகள், அவர்களின் சிறுநீரக செயல்பாட்டில் பாதகமான தாக்கங்களை விளைவிக்கின்றன. அதிலும் குறிப்பாக விவசாய தொழிலாளர்களுக்கு இந்த அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டிய அறிக்கையின்படி, "நோய் பரவல் உள்ள பகுதிகளில் அதிகரிக்கும் 1°C வெப்பநிலை உயர்வு கூட , நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) அபாயத்தை 8% வரை அதிகரிக்கிறது. இந்த பாதிப்புகள் வெப்பத்தினால் மட்டும் வருவதில்லை. ஆனால், வெப்பம் இதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

வெப்பம் மட்டுமின்றி மதுப்பழக்கம், உயரத்த அழுத்தம், குறிப்பிட்ட வகை அழற்சி எதிர்த்து மருந்துகள், மருத்துவர் பரிந்துரையின்றி பயன்படுத்தப்படும் மூலிகை மருந்துகள் போன்றவை கூட சிறுநீரகத்தை அதிக அளவில் பாதிக்கின்றன. விவசாய தொழிலாளர்களின் சுமார் 16 % பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலை கிராமப்புற மக்களிடம் அதிக அளவில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான நீர் இழப்பு, வயல்வெளிகளுக்கு ஆர்கனோபாஸ்பேட் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் பொழுது ஏற்படும் பாதிப்புகள் , மாசடைந்த மேற்பரப்பு நீரை பயன்படுத்துதல் , ஆர்சனிக், குரோமியம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் உடனான தொடர்புகள் ஆகியவை, சிறுநீரக நோயின் கடுமையான பாதிப்பிற்கு மற்ற முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆயினும் இவை நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய நாள்பட்ட சிறுநீரக நோயிலிருந்து வேறுபடுகிறது. இது தொடர்பாக பதிவேற்றப்பட்ட தரவுகளில் கிட்டத்தட்ட 31% நீரிழிவு சிறுநீரக நோயாகவும், மேலும் 13 % உயர் இரத்த அழுத்த சிறுநீரகத் நோயாகவும் உள்ளன.

Kidney
Kidney

ஆந்திராவை சேர்ந்த காரணம் தெரியாத நாள்பட்ட சிறுநீரக நோயின் மூலத்தை ஆய்வு செய்த பொழுது , விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் செங்கல் சூளைத் தொழிலாளர்கள் மத்தியில் பணியிட வெப்ப சூழல் அதிகமாக இருப்பதாக ஆய்வு குழு கண்டறிந்தது. இவர்களால் அளிக்கப்பட்ட சான்றின்படி நீண்டகால வெப்ப அழுத்தத்திற்கு ஆளான தொழிலாளர்கள், வெப்பம் தொடர்பான அறிகுறிகளை கணிசமாக அதிகமாக அனுபவித்ததோடு, சிறுநீரகச் செயல்பாடு குறைவதற்கான அதிக அபாயத்தையும் பெற்றுள்ளனர்.

அதிக வெப்ப நிலையில் மீண்டும் மீண்டும் பணிபுரிவதால், போதுமான அளவில் நீரேற்றம் கிடைக்காததும், ஓய்வெடுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படாததும் ஆகியவை வெப்ப அழுத்தத்தை அதிகரிக்க செய்துள்ளது. இந்த நோய்களில் முக்கிய பிரச்சினையே, அதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் வெளியில் தெரியாமல், அது தீவிரமடைந்த பின்னரே தெரிவதுதான் ஆபத்தாகிறது. சாதாரண தொழிலாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டாமல், வழக்கமான ரத்த பரிசோதனைகளை முன்வந்து சோதித்து பார்ப்பது இல்லை. இது போன்ற சிக்கல்களினால் அவர்களின் பாதிப்பு அந்த நோயின் இறுதி காலகட்டத்திலேயே தெரிய வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com