

ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பதால், எடை குறையும் என்று இன்புளுயன்சர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிடுகின்றனர். சிலர் அதை சேலஞ்ச் என்று கூறி தினமும் ஆப்பிள் சீடர் வினிகரை குறித்து, அதன் மூலம் ஆரோக்கியமாக இத்தனை கிலோ எடையை குறைத்துள்ளதாக காட்டுகின்றனர். இப்போது இந்த வகை வினிகர் மாத்திரை வடிவில் வந்துள்ளது. தண்ணீரில் கரைத்து அதைக் குடித்து விட்டு, உடற்பயிற்சி செய்தால் வேகமாக எடையைக் குறைக்கலாம் என்ற கருத்து பரப்படுகிறது.
எடைக் குறைப்பு போன்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களுக்கு, முதலில் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள். தகுந்த ஆலோசனையின்றி வெறும் யூ ட்யூப் வீடியோக்களை நம்பி, எடைக் குறைப்பு செயலில் இறங்க வேண்டாம். சமீபத்தில் ஒரு பெண் எடைக் குறைப்பு முயற்சியில், யூ ட்யூப் வீடியோவை நம்பி வெண்காரம் சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார். இதனால், உடல் ஆரோக்கிய விஷயத்தில் எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர் அதிகமாக பயன்படுத்தினால், அது குடலுக்குள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக ஆப்பிள் சீடர் வினிகரை எடை குறைப்பு பயணத்தில் பலரும் உபயோகிக்கின்றனர். இது அதிகமாக கொழுப்பினை எரிக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக பலராலும் நம்பப்படுகிறது. ஆனால், மருத்துவர்கள் இந்த முறையை ஏற்பதில்லை; இவ்வாறு வினிகரை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்று கூறுகிறார்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர் கொழுப்பை வேகமாக எரித்து எடை இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த வகையில் ஏற்படும் எடை குறைப்பு நிரந்தரமானது அல்ல; இது கடுமையான சில பக்க விளைவுகளுக்கு வழி செய்கிறது. ஆப்பிள் சீடர் வினிகர் எடை இழப்புக்கு ஏன் ஆபத்தானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நன்கு பழுத்த இனிப்பான ஆப்பிள் பழங்களை சாறாக பிழிந்து, அந்த சாறுடன் ஈஸ்ட் சேர்க்கப்படும் போது, ஆப்பிளில் உள்ள சர்க்கரை ஆல்கஹாலாக (எத்தனாலாக) மாறுகிறது. பின்னர் அதில் பாக்டீரியாக்கள் சேர்க்கப்பட்டு, அந்த ஆல்கஹால் அசிட்டிக் அமிலமாக (வினிகர்) மாற்றப்படுகிறது. இந்த முறையில் தான் ஆப்பிள் சீடர் வினிகர் தயாராகிறது.
வினிகரின் சாத்தியமான பக்க விளைவுகள்:
ஆப்பிள் சீடர் வினிகரில் பசியை அடக்கக் கூடிய அசிட்டிக் அமிலம் உள்ளது. இதன் காரணமாக, இது இரத்த சர்க்கரையை ஓரளவு கட்டுப்படுத்த உதவும். ஆனாலும், கொழுப்பை எரித்தல் மற்றும் விரைவான எடை இழப்புக்கு சரியாக அறிவியல் சான்றுகள் இல்லை.
மேலும் இதன் மூலம் கரைவது பெரும்பாலும் கொழுப்பு அல்ல; அவை உடலில் உள்ள நீரை வெளியேற்றி தான் எடையை குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தற்காலிகமானது என்றாலும் குறிப்பிடத்தக்க உடல்நல விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பதால், அதன் அமிலத்தன்மை இரைப்பை மற்றும் குடலை புண்ணாக்கி விடும். இதனால், சிலருக்கு குமட்டல், நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் ஆகியவை ஏற்படும். இதை அப்படியே நேரடியாகக் குடிப்பதால் தொண்டையில் புண் அல்லது எரிச்சல் ஏற்படலாம். இரைப்பை கோளாறு, தொண்டை வலி மற்றும் பல் எனாமல் இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். நீண்ட கால பக்க விளைவுகளில் பொட்டாசியம் அளவைக் குறைப்பதும் உண்டு. மேலும் இது தசை பலவீனம், சோர்வு மற்றும் இதய பாதிப்புக்கு வழிவகுக்கும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வினிகரை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது சிறுநீரக அழுத்தத்தை அதிகரிக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)