மனித உடலுக்கு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 என இரண்டு முக்கியமான கொழுப்பு அமிலங்களும் தேவையானது தான். மனித உடலால் அவற்றை இயற்கையாக ஒருங்கிணைக்க முடியாது. ஆனால், உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு அவை தேவைப்படுகின்றன. இவை இரண்டில் எது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒமேகா 3: ஒமேகா 3, உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் கொழுப்பு அமிலம். இது உடலில் ஹார்மோன்கள் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும். இதயம் மற்றும் மூளைப் பகுதிகளின் திறமையான செயல்பாட்டிற்கு இது உதவுகிறது. இது முடக்குவாதம், சரும அழற்சி, இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்று நோயை தடுக்கிறது. இந்த கொழுப்பு அமிலம், முட்டை, கீரை, சால்மன் மீன், மத்தி மீன், அக்ரூட் பருப்புகள், சிவப்பு இறைச்சி, ஆளி விதைகள் மற்றும் காலிபிளவரில் உள்ளது.
ஒமேகா 6: இந்த கொழுப்பு அமிலம் பெரும்பாலும் தாவர எண்ணெய்களில் கிடைக்கிறது. இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் பல நோய்களுக்கு வழி வகுக்கிறது. சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் போன்றவற்றில் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இவற்றை குக்கிகள், பாப்கார்ன், மார்கரின், உறைந்த உணவுகள், தின்பண்டங்கள் செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். மேலும். இந்த எண்ணெய்கள் அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும்போது, கொழுப்பை ஆக்சிஜனேற்றம் செய்து உடலில் இரத்த இதய பிரச்னைகள், டிஎன்ஏ மாற்றங்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழி வகுக்கிறது. ஒமேகா 6 கொழுப்பு அமிலமே மூளை மற்றும் இதயத்தில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்பட காரணமாகின்றன.
ஒமேகா 6 அமிலம் சார்ந்த உணவுகளை அதிகப்படியாக சாப்பிடுவது நல்லது அல்ல. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது ஒமேகா 6 உணவுகள் விரைவில் செரிமானம் ஆகிவிடும். எனவே. ஒமேகா 3 உணவுகளில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றுத்தரும் நன்மைகளை பெற முடியாது. எனவே. ஒமேகா 6 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை விட, ஒமேகா 3 உள்ள உணவுகள் உடலுக்கு நன்மை பயக்கும். அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்.