
பூமியில் விளையும் கிழங்குங்கள் பல்வேறு மருத்துவ பயன்களை உடையவை. பூமிக்கு அடியில் விளையும் சில கிழங்கு வகைகளை தயக்கத்தின் காரணமாக அதிகமானோர் விரும்பி உண்பதில்லை. ஆனால் அவற்றில் மருத்துவ பயன்கள் ஏராளம் உண்டு. அவை என்னென்ன பயன் என்று இப்பதிவில் காண்போம்.
வெங்காயம்:
இதில் உயிர் சத்துக்களும், அமில சத்தும் நிறைந்து இருக்கின்றது. தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. வெங்காயம் வயிறு ,குடல் போன்ற இடங்களில் புண் ஏற்பட்டிருந்தாலும் அதை ஆற்றும் குணம் உடையது.
விஷ ஜந்துக்களின் கடிக்கு கடிவாயில் அரைத்த வெங்காயத்தை வைத்து கட்டினால் விஷம் இறங்கிவிடும். ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையுடையது. இதை சமையலில் அதிகம் சேர்த்து வர வெப்பம் தணியும். இருமல் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு உதிர சிக்கல் நீங்கும். வெங்காயத்தை தயிருடன் சேர்த்து பச்சடியாக சாப்பிடுபவர்களுக்கு பல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதை தடுக்கலாம். இதற்கு சிறுநீரை அதிகமாக்கும் குணம் உண்டு. வெள்ளை வெங்காயம் மூலச் சூட்டிற்கு நல்ல மருந்து.
மரவள்ளிக்கிழங்கு:
இதை முறைப்படி வேகவைத்து சிறிது சர்க்கரை தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்த்து உண்ண சுவையாக இருக்கும். மூல நோயாளிகளுக்கு உதிரம் நிற்கும். மலம் கட்டும். பசி குறையும். தேங்காய் சேர்த்துக்கொண்டால் இதில் உள்ள தீமைகள் குறையும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு:
இதை பொரியல், கூட்டு, கட்லெட் என்று பல்வேறு வகையாக சமைத்து உண்ணலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
உருளைக்கிழங்கு:
இது மிகுந்த சர்க்கரை சத்தும் புரத சத்தும் கொண்டது. உயிர்ச்சத்து ஏ,பி,சி ஓரளவு உள்ளது. தாது உப்பும் கலந்துள்ளது. இத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து சமைத்து உண்பது நல்லது. தீக்காயங்களுக்கும் கால்களில் ஏற்படும் கரும் படைகளுக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளை தேய்த்து வர விரைவில் குணமாகும்.
சேப்பங்கிழங்கு:
தாது விருத்தி உண்டாகும். அறிவை விருத்தி செய்யும். உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும். இதில் மிகக் குறைந்த அளவு உயிர் சத்துக்களும் இரும்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளது. கட்டிகளுக்கு இக்கிழங்கை அரைத்து வைத்து கட்ட கட்டிகள் உடையும். புண்ணிற்கு வைக்க புண் ஆறும்.
பீட்ரூட் :
உடலில் ரத்தத்தை அதிகரிக்க செய்யும். வாரம் மூன்று நாட்கள் சாப்பிடலாம். கல்லீரலைப் பற்றிய நோய் எதுவாக இருந்தாலும் அதை சரி செய்து கல்லீரலை சரிவர இயங்க வைக்கும். இதில் வெள்ளை ரகம் உண்டு. இது அதிக மருத்துவ பண்புடையது. பீட்ரூட், உள் மற்றும் வெளி மூலங்களை ஆற்ற வல்லது. மலச்சிக்கலை தீர்க்கும். பீட்ரூட் கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து பொரியல் செய்து உண்ண, சுவையாக இருக்கும். இது சிறுநீரையும் மலத்தையும் பெருக்கும். கண் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி தெளிவான பார்வையைத் தரும்.
முள்ளங்கி:
முள்ளங்கி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண் வாய்ப்புண் ஆறும். இருமல் , பல் நோய், வயிற்று எரிச்சல், தொண்டை கமறல், மூலச்சூடு, கல்லீரல் நோய், வீக்கம் உடல் முதலியவற்றை போக்குகிறது. குடலுக்கும் சிறுநீரகங்களுக்கும் பலன் தரும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கி சிறுநீரக கற்களையும் கரைக்கும் வல்லமை பெற்றது வெள்ளை முள்ளங்கி. கண்பார்வையை தெளிவடைய செய்யும் சத்தி சிவப்பு முள்ளங்கிக்கு உள்ளது.
கருணைக்கிழங்கு:
வாதம் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும். உடல் சூட்டை தணிக்கும். சீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கல், வயிற்று இரைச்சல், வயிற்று வலி, மூலம் முதலியவைகளுக்கு நல்ல மருந்து. சொரி, சிரங்கு , கரப்பான் போன்ற சரும உபாதைகளை குணப்படுத்தும். மூலம் சம்பந்தமான எல்லா கோளாறுகளையும் குணப்படுத்தும். மலக்குடல் பகுதியில் வரும் புண், மூல வியாதிக்கு நல்ல மருந்து. இதை வாரம் ஒரு முறை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
கேரட்:
இதில் காரன் என்ற சத்து பொருள் உள்ளது. பற்கள் ஈறுகள் வலுவடையும். ஜீரண மண்டல உறுப்புகளான குடல் கல்லீரல் மண்ணீரல் போன்றவை வலுப்படும். இது ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய மற்றும் மூளை இயக்கத்தின் சுறுசுறுப்படைய செய்கிறது. இதன் சாறுடன் தேன் கலந்து கொடுக்க, குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கண்பார்வை தெளிவடையும். தொற்று நோய் வராமல் காக்கும். தாதுவை விருத்தி செய்யும்.