விஷச் செடி என ஒதுக்கும் எருக்கன் செடியில் இத்தனை நன்மைகளா?

Erukkan Plant
Erukkan Plant

குப்பை மேடு, தரிசு நிலங்களில் காணப்படும் எருக்கன் செடிகளை விஷச் செடி என ஒதுக்கி விடுகிறோம். இந்தச் செடி 12 ஆண்டுகள் வரை கூட மழை இல்லாமல் இருந்தாலும் வளரும் தன்மை கொண்டது. எருக்கன் செடியின் இலை, பூ, காய், வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை. எருக்கன் செடியில் 2 வகை (நீல எருக்கு, வெள்ளெருக்கு) உள்ளது. அதில் வெள்ளருக்கு நிறைய மருத்துவ குணம் நிறைந்தது.

சித்த மருத்துவத்தில் எருக்கம் பூவின் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு சளி, இருமலுக்கு மருந்தாகத் தரப்படுகிறது. காலில் முள் குத்தினால் வலி ஏற்படுவதுடன் நடக்கவும் சிரமமாக இருக்கும். இதற்கு எருக்கஞ்செடியின் இலையை உடைக்க பால் வரும். அதனை முள் இருக்கும் பகுதியில் தடவ வலி குறைவதுடன் முள் குத்திய இடம் பழுத்து முட் உள்ளே இருந்தால் வெளியே வந்து விடும்.

எருக்கன் இலைகளை நெருப்பில் போட்டு எரிக்க புகை வரும். அதனை சுவாசிக்க மார்புச் சளி, ஆஸ்துமா போன்றவை கட்டுப்படும். சுவாச பிரச்னைகளை போக்கக்கூடியது இந்தப் புகை. உடலில் கட்டிகள் வந்தால் இந்தச் செடியின் இலைகளை நெருப்பில் வாட்டி, கட்டி உள்ள இடத்தில் வைத்து கட்ட கட்டிகள் பழுத்து உடைந்து விடும். வீக்கமும் வலியும் குறையும். கிராமப்புறங்களில் இன்னும் இந்தப் பழக்கம் உள்ளது.

குதிகால் வலிக்கு புதிதாக உள்ள செங்கல் ஒன்றை எடுத்து சுட வைத்து அதன் மேல் இந்த இலைகள் இரண்டை போட்டு சூடு பொறுக்கும் அளவுக்கு அந்தக் கல்லில் இலையின் மேல் காலை வைத்து எடுக்க குதிகால் வலி காணாமல் போகும். மூட்டு வலிக்கு இந்த இலைகளை சிறிது விளக்கெண்ணெய் தடவி சூடு பண்ணி மூட்டுப் பகுதியில் பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் போல் போட்டு எடுக்க வலி குறைவதுடன் முட்டி வீக்கமும் குறையும். சொறி, சிரங்குகளுக்கு இந்த எருக்கன் இலையின் சாறில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கடுகெண்ணெய் விட்டு காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்குகள் மீது தடவ நல்ல குணம் தெரியும்.

எலி கடிக்குக் கூட இந்த இலையை மருந்தாகத் தருவார்கள். இந்தச் செடியின் பட்டைகளை உலர்த்தி யானைக்கால் வியாதிக்கு மருத்துவர்கள் தருகிறார்கள். எருக்கம் பூக்களுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்து வெயிலில் காய விட்டு அந்த சாம்பலில் பல் தேய்க்க பல் வலி போகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டு சுவற்றில் பெயின்ட் பண்ணி போர் அடிச்சிட்டா? அப்போ வால்பேப்பர் ஒட்டுங்க...
Erukkan Plant

வெள்ளெருக்கு வேரும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட விநாயகரை வீட்டில் வைத்து பூஜிப்பது நல்லது. அதுவும் ரத சப்தமியன்று வெள்ளெருக்கு விநாயகரை பூஜிக்க செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருத்தல கோயில்களில் எருக்கம் செடியே தல விருட்சமாக உள்ளது. சூரியனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வெள்ளருக்கு, ரத சப்தமி அன்று சூரியனின் தலையில் வெள்ளருக்கு இலைகளை வைத்து அவற்றில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்கள் வைத்து அவரது பூவுலகக் கடமைகளை ஆற்றி வரும்படி ஈஸ்வரனால் அனுகிரகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இன்றும் ரத சப்தமி அன்று சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி தலையில் எருக்க இலைகளை வைத்துக்கொண்டு ஆற்றில், குளங்களில் நீராடும் வழக்கம் மக்களிடையே உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று எருக்கம் பூமாலையை விநாயகருக்கு அணிவிக்கும் பழக்கம் உண்டு. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பயன்படுத்துகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com