
சிலர் எதற்கெடுத்தாலும் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்கின்றனர். அவர்கள் இவ்வாறு செய்வதால் தங்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கும் படி, மருத்துவர்களுக்கே ஆலோசனை செய்கின்றனர். ஆனால், அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை.
மீண்டும் மீண்டும் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதால் , உங்கள் உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் ஒரு கட்டத்தில் வேலை செய்யும் திறனை இழந்து நிற்கும். இந்த மருந்துகளின் முக்கிய வேலையே உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்வது தான். அதாவது அது உடலுக்கு நன்மை செய்கின்ற பாக்டீரியாக்களையும் சேர்த்து கொன்று விடும். நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா எல்லாம் அதற்கு தெரியாது. அதை பொருத்தவரை பாக்டீரியாவை முழுமையாக அழிக்கும்.
நல்ல பாக்டீரியாக்கள் குடல்களின் இயக்கத்தை பராமரிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்; செரிமான அமைப்புகளிலும் நல்ல பாக்டீரியாக்கள் உதவி புரிகின்றன. இந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிவதால் குடல் ஆரோக்கியமும் நோயெதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படுகிறது. உடல் வைரஸ் தொற்றுகளில் பாதிக்கப்படும் போது ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்ள அவசியமில்லை. ஏனெனில், அவை வைரஸ்களைப் அழிப்பது இல்லை. ஆனால், மக்கள் இது போன்ற விவரங்களை அறியாமலே ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.
ஒருவர் ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி உட்கொள்ளும் போது அவரது உடலின் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் திறன் படிப்படியாகக் குறைகிறது. இது ஆன்டிபயாடிக் எதிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஒருவருக்கு தக்க தருணத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும் போது உடல் அதற்கான திறனை இழந்திருக்கும். அதனால் தொற்று நோயை மிகவும் ஆபத்தானதாக மாற்றும்.
அதிகப்படியான ஆண்டிபயாடிக் மருந்து நுகர்வால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை, வயிற்று வலி மற்றும் பூஞ்சை தொற்று ஆகியவை இதில் அடங்கும். மேலும் இது உடலில் வீக்கம் மற்றும் பலவீனத்தையும் ஏற்படுத்தும். இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாகி சிறிய நோய்கள் கூட கடுமையான அச்சுறுத்தலாக மாறக்கூடும்.
வைரஸ் காய்ச்சல் அல்லது லேசான சளிக்கு சுய மருத்துவம் செய்ய வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, வைட்டமின் சி, துளசி, இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை போன்ற இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை உட்கொள்ளுங்கள். சில நோய் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் அவசியம். அந்த நேரத்தில் மருத்துவர் பரிந்துரையில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)