
சில குழந்தைகள் செய்வதையே திரும்பத் திரும்ப செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அதற்குக் காரணம் நாம் புதிது புதிதாக அவர்களுக்கு கற்பிக்காமல் இருப்பதுதான். அவர்களை எப்படி அவர்கள் வழிக்கே சென்று கையாள்வது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
மனக்குழப்பங்களைக் கையாள்வதற்கு பிள்ளைகளுக்கு உதவ வேண்டும். நாமாகவே ஒரு தீர்வு கண்டுபிடித்து, ஒரு வெற்றிப் பரிசுப்பொருள் கொடுக்காமல் பிள்ளைகளின் உணர்வை அறிந்து அவர்களின் மூலமே ஒரு தீர்வை கண்டறியப் பழக்க வேண்டும். அதற்காக, ‘கடந்த சம்பவத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்? நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? என்ன செய்தால் நல்லது என்று நீ நினைக்கிறாய்?’ போன்ற கேள்விகள் மூலம் அவர்களின் உணர்வை அறிந்து அதற்கு ஏற்ற மாதிரியாக அவர்களின் சிந்தனைகளை கிளறிவிட்டு அவர்களையே தீர்வை கண்டறிய வழி வகுக்கலாம்.
குறிப்பாக, பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ற பதிலுக்காக காத்திருக்க வேண்டியது அவசியம். ‘என்ன நினைக்கிறாய்?’ என்ற கேள்வி இந்த சம்பவத்தால் பயப்படுகிறாயா? என்பதை விட நல்ல அணுகுமுறை. தாங்கள் நினைத்ததை சொல்ல அனுமதிக்க வேண்டும். நீங்கள் குறிக்கிடாதீர்கள். எந்தக் குறிக்கீடும் செய்யாதீர்கள். நீங்கள் விரும்பிய பதிலைப் பெறுவதற்காக அதற்கேற்ற கேள்விகளைக் கேட்காமல் குழந்தைகள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது அவர்களைத் திருத்த முற்படுவதை விட மாற்றி சிந்திக்கத் தூண்டுவது நல்ல நேர்மறை சக்தியைக் கொடுக்கும்.
அறிவு, ஆற்றலைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது, அவற்றை அடையும் வழிமுறையை கற்பிக்காது. அவற்றை அடைய பயிற்சி கொடுத்து நல்ல பாதையைக் காண்பித்தால் புதிய வழியைக் கண்டுபிடிப்பார்கள். இப்படி சவால்களை சந்தித்து சமாளிக்க வேண்டும். பிரச்னைகளை எதிர்கொண்டு தீர்க்க வேண்டும். தடைகளை படிக்கட்டுகளாக நினைத்துத் தாண்ட வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தடைகளில் முயல்வதே வெற்றி என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
தங்கள் திறமைகளை சவால்களாக எடுத்து முயலும்போது சுயமதிப்பு வளர்கிறது. பயமுறுத்தல், திட்டுதல், அடித்தல் போன்றவை சுயமதிப்பை இழக்கச் செய்யும். தங்கள் முயற்சியின் பெரும் பேறுகளை உற்சாகமூட்டுவதாக எடுக்கப் பழக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவத்துடன் பிறக்கின்றன. சில பிள்ளைகள் மற்றைய பிள்ளைகளை விட மிகவும் சுறுசுறுப்பாகவும், குறும்பாகவும், துருதுருவென்று எதையாவது செய்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். சில பிள்ளைகள் அரவணைப்பை அதிகம் விரும்புவார்கள். சிலர் அழுவார். சிலர் நேர்மாறாக எந்நேரமும் சிரித்து விளையாடிக் கொண்டு மகிழ்வாக இருப்பார்கள். இந்தத் தனித்துவத்தை சரியாகப் புரிந்து குழந்தைகளை பாதிக்காதபடி பெற்றோர் தங்களைத் தயார் செய்து அறிவுப்பூர்வமாக ஈடு கொடுக்க வேண்டும்.
குறிப்பாக, தோல்வியை எதிர்கொள்ள, ஜீரணிக்கக் கற்றுக் கொடுத்து விட வேண்டும். தோல்வி என்பது ஒருவரை அளப்பதற்கான கருவி அல்ல. அதை எப்படிக் கையாண்டு எந்த வழிமுறைகள் மூலம் தோல்வியை தோல்வியடையச் செய்யலாம் என்பதே ஒருவரை அளக்கும் கருவியாகும்.
தோல்வி என்பது இயலாமை என்பது அல்ல என்பதை தெளிவாக குழந்தைகள் விளையாடும்பொழுதே அவர்களையும் தோல்வியுறுமாறு நீங்கள் செய்து காட்ட வேண்டும். பின்னர் அவர்கள் வெற்றி பெறும்போது நீங்கள் தோல்வியுறுவதாக நடந்துக் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் தோல்வியை சகஜமாக ஏற்கும் பண்பு அவர்களுக்கு வளரும். அத்துடன் தோல்லியை எப்படி வெற்றியாக மாற்ற வேண்டும் என்பதையும் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.