பலரும் ஹோட்டலில் உணவுப் பொருட்களை பார்சல் கட்டி வாங்கி வீட்டுக்குக் கொண்டு சென்று உண்கிறார்கள். சாம்பார், ரசம், குருமா, கிரில்டு சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கொள்கலன்களில் அடைத்து, உண்ணுவது பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
ரசாயனக் கசிவு: பிளாஸ்டிக்கில் பிஸ்பெனால், பித்தலேட்டுகள் மற்றும் பாலி எதிலீன் டெரெப்தாலேட் போன்ற இரசாயனங்கள் உள்ளன. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் வைக்கும்போது அதில் உள்ள ரசாயனங்கள் உணவில் கலக்கும். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஏராளம்.
மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாடு: பிளாஸ்டிக், மைக்ரோ பிளாஸ்டிக்குகளாக உடைந்து விடும். இந்த சிறிய துகள்கள் உணவை மாசுபடுத்தி விடும். இது செரிமான அமைப்பு மற்றும் பிற உறுப்புகளில் எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்.
நரம்பியல் பிரச்னைகள்: பிளாஸ்டிக்கில் உள்ள பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தும். அடிக்கடி ஹோட்டல்களில் பார்சல் வாங்கி உண்ணும்போது அவை மூளை வளர்ச்சியை பாதிக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, கவனக் குறைவு மற்றும் நடத்தை சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
பிறப்பு குறைபாடுகள்: கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறப்பு குறைபாடுகள், குறைந்த எடையில் குழந்தை பிறப்பு மற்றும் குழந்தையின் வளர்ச்சி தாமதம் ஆகுதல் போன்ற பிரச்னைகளுக்கு இட்டுச் செல்லும். திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதல் பிரச்னையை உண்டாக்கும்.
செரிமான தொந்தரவு: செரிமான மண்டலத்தை எரிச்சலடைய செய்யும். வயிற்று வலி, வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இது காலப்போக்கில் தீவிரமான செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
தொற்று நோய்கள்: பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதனால் அடிக்கடி உடல் தொற்றுகளுக்கு உள்ளாகி, ஒவ்வாமை மற்றும் தன்னுடன் தாக்க நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
ஆஸ்துமா: பிளாஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்கள் சுவாசக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி ஆஸ்துமா, மூச்சுகுழாய் அழற்சி அல்லது இன்னும் தீவிரமான நுரையீரல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
கல்லீரல் நோய்: அடிக்கடி ஹோட்டலில் பார்சல் வாங்கிச் சென்று உண்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இது நச்சுத்தன்மை மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவதற்கு வழிவகுக்கும். காலப்போக்கில் கல்லீரல் நோய் அல்லது சிறுநீரக செயலிழப்புக்கு பங்களிக்கலாம்.
ஹார்மோன் சீர்குலைவு: ஈஸ்ட்ரோஜனை பாதித்து, இனப்பெருக்க சிக்கல்கள், கரு வளர்ச்சி பிரச்னைகள், கரு உருவாவதில் சிக்கல்கள், ஹார்மோன் தொடர்பான புற்று நோய்கள் போன்றவையும், உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு, கார்டியா வாஸ்குலார் நோய்களான இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பெருந்தமணி தடிப்பு, சரும அலர்ஜி போன்றவையும் அதிகரிக்கலாம்.
அலுமினிய ஃபாயில் கவர்கள் பாதுகாப்பானதா?
சூடான உணவுப் பொருட்களை அலுமினிய ஃபாயில்களில் வைத்து பேக் செய்யும்போது அலுமினியம் உணவில் கசிவதற்கு வழிவகுக்கும். அல்சைமர் போன்ற நரம்பியல் கடத்தி நோய்களை விளைவிக்கும். மேலும். நரம்பு மண்டலம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டையும் பாதிக்கும். அமிலத்தன்மை கொண்ட உணவுகளான தக்காளி வினிகர் பயன்படுத்தி செய்யப்பட்ட இறைச்சி உணவுகள் அலுமினிய ஃபாயிலில் பேக் செய்யப்படும்போது உணவில் உடனே கலந்து விடும்.
எனவே, வீட்டிலிருந்து பாத்திரம் எடுத்து சென்று அவசரத்திற்கு பார்சல் வாங்கி வந்து வீட்டில் உண்ணலாம். ஆனால், அடிக்கடி ஹோட்டலில் வாங்கி உண்பதையும் தவிர்க்க வேண்டும் அதுவும் உடல் நலத்திற்கு கேட்டை உண்டாக்கும்.