தூக்கத்தை அலட்சியப்படுத்தும் நபராக நீங்கள் இருந்தால், இந்தப் பதிவு உங்களுக்கு தான். ஒழுங்கற்ற முறையில் தூங்குவது எந்த மாதிரி பாதிப்பை நமக்கு ஏற்படுத்துகிறது தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதன் நிம்மதியாக உயிர் வாழ உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகிய மூன்றும் அத்தியாவசியத் தேவைகளாக உள்ளன. நமது தூக்கத்தை உறுதி செய்ய இருப்பிடம் பெரிதும் பங்காற்றுகிறது. நாள் முழுக்க வேலை செய்யும் ஒருவர், தனது இருப்பிடமான வீட்டிற்கு வந்ததும் ஓய்வெடுப்பார். அனைத்து உயிரினங்களுக்குமே ஓய்வு அவசியம் தேவை. நமது அடுத்தடுத்த இலக்குகளை அடைவதற்கு தினசரி ஓய்வு நிச்சயமாக தேவைப்படுகிறது. ஆனால் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், பலரும் ஓய்வுக்காக செலவிடும் நேரம் வெகுவாக குறைந்துள்ளது.
ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என அறிவியல் சொல்கிறது. அப்படி இல்லையெனில் நமது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு நாள் சரியான தூக்கம் இல்லையெனில் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், இதுவே நீண்ட நாட்களுக்கு நீடித்தால், நிச்சயமாக பாதிப்புகள் நம்மை சூழ்ந்து கொள்ளும்.
சரியாகத் தூங்கவில்லை எனில் நமது கண்களில் அதிக எரிச்சல் இருப்பதோடு, சிவந்தும் காணப்படும். ஒழுங்கான தூக்கம் கூட ஒரு மனிதனின் வாழ்நாளைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.
ஒருவர் தொடர்ச்சியாக ஒழுங்கான தூக்கத்தை மேற்கொள்ளவில்லை எனில், டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்து அதிகம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 80,000-க்கும் மேற்பட்ட மனிதர்களிடம், அவர்களின் தூக்க முறை குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தொடக்கத்தில் நீரிழிவு நோய் இல்லாதவர்கள் மற்றும் சராசரியாக 62 வயதுடையவர்கள் என இரு தரப்பினர் பங்கேற்றனர். சுமார் 7ஆண்டுகளுக்கும் மேல் இந்த ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வில் தூக்கத்திற்கும் நீரிழிவு நோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கான தூக்க முறையைக் கொண்டவர்களை விடவும், ஒழுங்கற்ற முறையில் தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 34% அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக வாழ்க்கை முறை, உடல் பருமன், இணை நோய் மற்றும் பரம்பரையாக வரும் நீரிழிவு நோய் இவற்றைத் தவிர்த்து, ஒழுங்காக தூங்குபவர்களுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
ஆய்வு முடிவுகள் ஒருபுறம் இருக்கட்டும். நிலவி வரும் பொருளாதாரச் சூழலில் வேலை முக்கியம் தான். இருப்பினும், தினசரி தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் வேலை பார்ப்பதைத் தவிருங்கள். தூக்கமின்மையால் பல எதிர்மறை விளைவுகளும் உண்டாகும். முறையான தூக்கம் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதை மனதில் நிறுத்தி, இனியாவது தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.