International Coffee Day
International Coffee Day

காபி கண்டுபிடிக்கப்பட்ட கதை மற்றும் காபி நாள் கொண்டாட்டங்கள்!

அக்டோபர் 1: பன்னாட்டு காபி நாள்!
Published on

பரவலாக வழங்கும் கதையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர், ஒரு நாள் சில ஆடுகள் அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். ஆடுகள் காபிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்ததெனக் கண்டு தாங்களும் அவ்வாறே உண்டு காபியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை உணர்ந்தனர். இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். எத்தியோப்பியாவில் இருந்து இக்கண்டுபிடிப்பு எகிப்துக்கும் ஏமன் நாட்டிற்கும் பரவியது.

அதன் பின்னர், ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டளவில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் பரவியது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் பிறநாடுகளுக்கும் பரவியது. குறிப்பாக, நெதர்லாந்துக்காரர்கள் (டச்சு) பெருவாரியாக காபியை இறக்குமதி செய்தார்கள். 1690 ஆம் ஆண்டில் அரபு நாடுகளின் தடையை மீறி டச்சு மக்கள் காபிச் செடியை எடுத்து வந்து வளர்த்தார்கள். பின்னர் டச்சு ஆட்சி செய்த ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள். 1583 ஆம் ஆண்டில் லியோனார்டு ராவுல்வு என்னும் ஜெர்மன் நாட்டவர் 10 ஆண்டுகள் அண்மைக் கிழக்கு நாடுகளில் பயணம் செய்து திரும்பிய பின்பு, கரிய நிறத்தில் உள்ள காபியைக் காலையில் பருகுவது பற்றியும், அதனால் பல்வேறு வயிற்று நோய்களுக்குத் தடுப்பாக இருக்கும் என்றும் எழுதினார்.

காபி அல்லது குளம்பி (Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). காபி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிறக் காபிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காபி ஆகும். இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்க்கரை இல்லாமலும் கசப்பான கரும் காபியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காபி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளர்) (200 மில்லி லிட்டர்) காபி குடித்தாலே அதில் 80 முதல் 140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும். இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காபி குடிப்பவர்கள் ஒரு வகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள்.

உலகிலேயே அதிகமாக விற்று வாங்கக் கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காபிதான். மொத்தமாகக் கடை விலை மதிப்பில் (Retail Value) ஆண்டுக்கு 70 பில்லியன் ஐக்கிய, அமெரிக்க டாலர்கள் ஆகும். காபி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில், சற்றேறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காபிப் பயிரை ஒட்டி நடக்கின்றது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும் காபி?
International Coffee Day

பன்னாட்டு காபி நிறுவனம் (International Coffee Organization - ICO), 2014 ஆம் ஆண்டு மார்ச் 3 முதல் 7 வரை மிலனில் நடைபெற்ற பன்னாட்டுக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, காபியை ஒரு பானமாக ஊக்குவிக்கவும், அதனைக் கொண்டாடவும் அனுசரிக்கப்படும் ஒரு நாளாக, உலகம் முழுவதும் பன்னாட்டு காபி நாள் (International Coffee Day) கொண்டாட முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் முதல் ஆண்டுதோறும் பன்னாட்டு காபி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், பன்னாட்டு காபி நாளின் சரியான தோற்றம் தெரியவில்லை. எனினும், இது தொடர்பான நிகழ்வு ஒன்றினை 1983 ஆம் ஆண்டில் ஜப்பானில் தி ஆல் ஜப்பான் காபி அசோசியேஷன் எனும் அமைப்பு முதன் முதலில் விளம்பரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 'தேசிய காபி நாள்' 2005 ஆம் ஆண்டிலேயேக் கொண்டாடப்பட்டது. 'பன்னாட்டு காபி நாள்' என்ற பெயர் முதன் முதலில் தெற்கு உணவு மற்றும் பானம் அருங்காட்சியகத்தால் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினை அக்டோபர் 3, 2009 அன்று நடத்தியிருக்கிறது. இது பன்னாட்டு காபி நிறுவனத்தினால் 1997-ல் சீனாவில் நடத்தப்பட்டது. மேலும், ஏப்ரல் 2001 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் கொண்டாட்டமாக மாற்றப்பட்டது.

தைவான் முதன் முதலில் பன்னாட்டு காபி நாளை 2009-ல் கொண்டாடியது. பின்னர் நேபாளம் முதன்முதலில் தேசிய காபி நாளை நவம்பர் 17, 2005 அன்று கொண்டாடியது. ஆகஸ்ட் 17, 2006 அன்று முதன் முதலில் தேசிய காபி நாளைக் கொண்டாடிய இந்தோனேசியா, பின்னர் இந்தோனேசியாவின் விடுதலை நாளன்றே காபி நாளினைக் கொண்டாடுகிறது. பல நாடுகள், செப்டம்பர் 29 அல்லது அதனைத் தொடரும் நாட்களில் காபி நாள் அல்லது தேசிய காபி நாள் என்று கொண்டாடி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
காபி பிரியர்களே, உஷார்! உஷார்!
International Coffee Day

ஆண்டுதோறும் நியாயமான வணிக வழியிலான காபி விற்பனையை ஊக்குவிக்கவும், காபி விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாளைப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில், பல காபி வணிக நிறுவனங்கள் இலவசமாக அல்லது தள்ளுபடி விலையில் காபியை வழங்குகின்றன. சில வணிகங்கள் சமூக வலைப்பின்னல் வழியாக தங்களை நம்பிக்கையுடன் பின் தொடர்பவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை அளிக்கின்றன. சில நிறுவனங்கள் வாழ்த்து அட்டைகளை அனுப்பி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com