நம்மில் பலருக்கும் கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருக்கும். மேலும் பல இடங்களில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசும் நபர்களை பார்த்திருப்போம். நம் வீட்டில் சாதாரணமாக டிவி பார்க்கும் போது, செய்தித்தாள் படிக்கும் போது, நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது என்று பல நேரங்களில் நாம் கால் மேல் கால் போட்டு தான் உட்காருவோம். அவ்வாறு உட்காரும் போது நமக்கு ஒருவித தன்னம்பிக்கை கிடைப்பதாக உணருவோம்.
சில நேரங்களில் வீட்டில் உள்ள பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் பாட்டியும், அம்மாவும் திட்டுவார்கள். "பெண் பிள்ளை தானே ஏன் இவ்வாறு உட்காருகிறாய்? மற்றவர்கள் முன்பு கால் மேல் கால் போட்டு உட்காராதே" என கூறுவார்கள். ஆனால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் இந்த பதிவில் காண்போம்.
உடலில் ஏற்படும் பாதிப்பு:
கால் மேல் கால் போட்டு உட்காரும் போது நம் உடல் சமநிலையை இழக்கிறது. இதனால் இடுப்பு வலி, முதுகு வலி ஏற்படும். இடுப்புக்கு கீழ் அழுத்தம் ஏற்படும். மேலும் உடல் தசையில் சமநிலையின்மை ஏற்படும். எனவே இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டு வலியை ஏற்படுத்தும்.
ஒரு காலின் மீது மற்றொரு கால் போட்டு உட்காரும் போது இரத்த ஓட்டம் தடைபடும். கால்களுக்கு இரத்தம் ஓட்டம் இல்லாமல் கால் மரத்து போய்விடும். இதனால் இதயம் அதிக அளவு இரத்தத்தை பம்ப் செய்யும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் உண்டாக வாய்ப்புள்ளது.
மேலும் நீண்ட நேரம் கால் மடக்கி அல்லது கால் மேல் கால் போட்டு உட்காரும் போது “பெரோனியல் நரம்பு முடக்கம்” (peroneal nerve) ஏற்படும். காலுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுப்பதால் இந்த கால்பிடிப்பு, உணர்வின்மை ஏற்படுகிறது.
காலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுப்பதால் “வெரிகோஸ் வெயின்” எனப்படும் நோய் ஏற்படுகிறது. கால்களில் இரத்தம் ஓட்டம் சீரற்றதாக இருக்கும் போது கால் நரம்புகள் வீங்கி இந்த வெரிகோஸ் வெயின் ஏற்படுகிறது.
பெண்கள் தொடர்ந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் கர்ப்பப்பைக்கு அதிக அளவு அழுத்தம் கொடுக்கப்படும். இதனால் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனை ஏற்படும்.
கருவுற்ற பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர கூடாது. ஏனெனில் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அழுத்தம் ஏற்படும்.
கால் மேல் கால் போட்டு உட்காரும் போது ஒரு சிலர் நிமிர்ந்து நேராக உட்கார மாட்டார்கள். சாய்ந்தவாறு அமரும் போது முதுகு தண்டில் வலி ஏற்படும். மேலும் நீண்ட நேரம் இவ்வாறு உட்காரும் போது கழுத்து வலி, இடுப்பு வலி ஏற்படும்.
அச்சச்சோ... இதுல இத்தனை விஷயம் இருக்கா? இனி கால் மேல் கால் போட்டு உட்காருவீங்க? வீண் வம்ப விலைக்கு வாங்காதீங்க மக்களே!!