அனைவருக்குமே ஏற்படும் தலைக்குனிவு! இது தேவையா மக்களே?
கைப்பேசி பயன்படுத்தும் நம் அனைவருக்குமே தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது என்பது நிதர்சனம். தனிமையில் அல்லது வீட்டில் என்று மட்டுமல்ல, நாம் புழங்கும் எல்லா இடங்களிலும் இந்தத் தலைக்குனிவிலிருந்து நம்மால் மீள முடியவில்லைதான்.
குடும்பத்தார் பேச்சைக் கேட்காமல் (பிடிக்காமல்?) தலை குனிந்து அமர்ந்திருக்கிறோம். எந்தவகை மேடை நிகழ்ச்சிகளிலுமே பார்வையாளர்களாகச் சென்றால் அங்கும் இதே தலைக்குனிவை நாம் கடைபிடிக்கிறோம். ஏன், மேடையில் பேச்சாளர்கள் என்ற தகுதியில் அமர்ந்திருப்பவர்களுக்கும் சிலசமயம் இந்த தலைக்குனிவு ஏற்படத்தான் செய்கிறது.
ஆமாம், நம் கரங்களுக்குள் தவழும் கைப்பேசிதான் நமக்கு எல்லா இடங்களிலும் தலைக்குனிவை உண்டாக்குகிறது. நம்மால் இதிலிருந்து மீண்டு தலை நிமிரவே முடிவதில்லை என்பதும் சோகமான அனுபவம்தான். இதனால் நம் கழுத்து பாதிக்கப்படுவதை நாம் உணர்வதில்லை – கழுத்து எலும்பு தேய்மானமாகி நீங்காத வலி ஏற்படும்வரை.
பொதுவாகவே நாம் அண்ணாந்து பார்ப்பதில்லை. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அதாவது அந்த கோபுரத்தை மேல்நோக்கிப் பார்த்தால் நம் கழுத்துப் பகுதிக்கு அது நாமே அறியாமல் மேற்கொள்ளும் ஆன்மிக உடற்பயிற்சி! சிலர் கோயிலுக்குள் துவஜஸ்தம்பத்தையும், அருகிலுள்ள ராஜகோபுரத்தையும் அண்ணாந்து மாறி மாறி பார்த்து, பிறகு கீழே சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரிப்பதையும் பார்த்திருக்கிறோம். இதுவும் கழுத்துக்கான பயிற்சிதான்! இதேபோல் கருவறை முன்னால் இருகரங்களையும் மேல்நோக்கிக் கூப்பி இறைவனை வணங்குவதும் கழுத்து, தோள்பட்டைகளுக்கான பயிற்சிதான்!
வீட்டுக்குள்ளேயே நாம் எத்தனை முறை விதானத்தை நிமிர்ந்து பார்த்திருக்கிறோம்? அந்த காலத்தில் நாமே (வயதில் பெரியவர்கள்) விதானத்தில் படிந்துள்ள சிலந்தி வலையை, ஒட்டடைக் குச்சியால் தட்டி சுத்தம் செய்வோம். இதனால் கைகள் மேலே நீள்வதோடு, கழுத்தும் மேல் நோக்கி வளைந்து நாமே உணராத நல்ல உடற்பயிற்சியாக அமைந்திருந்தது. இப்போதெல்லாம் வேலைக்காரரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, தலைகுனிந்து மொபைலை நோண்டிக் கொண்டிருக்கிறோம்.
சமையலறையில் பெண்மணிகள், அலமாரியின் மேல் தட்டில் உள்ள பாத்திரம் அல்லது ஏதேனும் சமையல் பொருளை எம்பி, கைநீட்டி, கழுத்தை வளைத்து எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பயிற்சியும் இப்போது இல்லாமல் போய்விட்டது.
கைப்பேசியால் தலைக்குனிவு ஏற்பட்டவர்கள் உறங்கும்போது தலையணை உயரத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ளாததால், கழுத்து உபாதை அதிகரிக்கிறது. இது தவிர, நெடுந்தூரம் வாகனத்தை இயக்குபவர்களுக்கும் கழுத்தில் பிரச்னை ஏற்படலாம். ஒரே நோக்கில் பார்வையைப் பதிப்பதால் மட்டுமல்லாமல், சாலையின் மேடு பள்ளங்களால் ஏற்படும் அதிர்ச்சி ஆசனப் பகுதியிலிருந்து மேலே கழுத்துக்கு செல்வதாலும் உண்டாகிறது.
நம் கழுத்துப் பகுதியில் எலும்புகள், நரம்புகள், தசைகள் என்று பல பகுதிகள் தலையுடன், முதுகு தண்டுவடத்தைப் பிணைக்கும் பாலமாக செயல்படுகின்றன. வலது, இடது, மேலே, கீழே என்று கழுத்தைத் திருப்பிக்கொள்ள இந்த உள் உறுப்புகள் உதவுகின்றன.
பரவாயில்லை, போனால் போகிறது. கைப்பேசியால் தலைக்குனிவு ஏற்படட்டும்; ஆனால் ஒருநாளைக்குப் பத்து முறையாவது கழுத்தை மேலே, கீழே, வலது, இடது பக்கவாட்டில் திருப்பி அதற்கு பலம் கொடுங்கள். அது நம் உடலின் தலைமைச் செயலகமான மூளைக்கும் புத்துணர்வு கொடுக்கும் என்கிறார்கள் ஃபிஸியோதெரபிஸ்டுகள்.