அருகம்புல் அருமை பெருமை தெரியுமா?

அருகம்புல்
அருகம்புல்https://news.lankasri.com

ருகம்புல் மிகச் சிறந்த மூலிகையாகும். தவிர, இது புனித தாவரமாகவும் மதிக்கப்படுகிறது. இந்த பூமியில் முதன்முதலாக தோன்றிய தாவரம் அருகம்புல் என பல்வேறு புராதன நூல்கள் கூறுகின்றன. தொன்மையான இந்த அருகம்புல் தோன்றிய இடம் இந்தியாதான். பல்வேறு சிறப்பான குணங்களை பெற்று விளங்கும் அருகம்புல்லின் பெருமைகளை இனி காண்போம்.

அருகம்புல் தொடர்ந்து வேர்விட்டுக் கொண்டே வளரும். கூர்மையான நுனிப்பகுதியை கொண்ட இதன் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். தண்ணீர் உள்ள இடங்கள், தோட்டங்கள், ஆற்றோரம், வாய்க்கால் ஓரங்களில் இந்த புல் தாராளமாக வளர்ந்து காணப்படும். இது அழிவதே இல்லை, தொடர்ந்து படர்ந்துகொண்டே செல்லும். எனவேதான், ‘அருகு போல் வாழ்க’ என நமது முன்னோர்கள் வாழ்த்துவதை பார்க்கலாம். ஆன்மிகத்தில் போற்றப்படும் தாவரமான இதை முதல் கடவுளான விநாயகருக்கு நிவேதனமாக அர்ச்சிக்கிறார்கள். அனலாசுரன் என்ற அரக்கனை விநாயகப்பெருமான் விழுங்கியதாகவும், அதனால் ஏற்பட்ட உஷ்ணத்தை குறைப்பதற்கு அருகம்புல்லை தலையில் சூடியதாகவும் புராணங்கள் உரைக்கின்றன. விநாயகருக்கு அர்ச்சிக்கப்பட வேண்டிய அருகம்புல் ஒரே காம்பில் மூன்று முனைகளை உடையதாக இருக்க வேண்டும் என்பதும் வேதங்கள் உரைக்கும் ஒரு குறிப்பாகும்.

அருகம்புல் பல்வேறு முறைகளில் நம் ஆரோக்கியத்தை பெருக்கவும், பல்வேறு நோய்களை தீர்க்கவும் உதவுகின்றன என ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதை பெர்மூடாகிராஸ் என்றும் சமஸ்கிருதத்தில் கிரந்தி என்றும் சொல்வார்கள். தமிழில் இதற்கு பல பெயர்கள் உண்டு. பதவு, சடபம், முதல் புல், புண்ணியப் புல், மூதண்டம், ஆதிபுல் போன்றவை.

அருகம்புல் வளர்ந்துள்ள இடத்தில் நடந்தாலே நன்மை கிடைக்கும். வெறுங்காலோடு நடந்தால் நுரையீரல் உறுதி பெறும், நோய் எதிர்ப்பு சக்தி பெருகும், இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும், மலச்சிக்கலை போக்கும், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை கூட்டும், நீரிழிவை கட்டுப்படுத்தும், அருகம்புல் உணவில் உள்ள அமிலத்தை நீக்கி, ஜீரணத்தை கூட்டும்.

இதையும் படியுங்கள்:
வயதான தோற்றத்தைத் தள்ளிப்போட உதவும் 8 வழிகள்!
அருகம்புல்

அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர் பகுதி இயற்கை மருத்துவத்தில் உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக, மாரடைப்பு, இதய நாளங்களின் அழற்சியை தடுப்பதாகவும் உள்ளது. குறிப்பாக, சர்க்கரையில் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை  குறைக்கும் தன்மை உடையது. அது மட்டுமின்றி, பசியை தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது, வயிற்றில் உள்ள பூச்சி, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலை தணிக்கக் கூடியது, ஞாபக சக்தியை பெருக்க கூடியது. மேலும் அருகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட  உடலில் ஏற்படும் வேண்டாத துர்நாற்றத்தையும் போக்க வல்லது. நெஞ்சு சளியை கரைக்கக்கூடியது, மூலத்தை குணப்படுத்த வல்லது, ஆஸ்துமாவை அகற்ற வல்லது, கட்டிகளை கரைக்க வல்லது, மண்ணீரல் வீக்கத்தையும் குறைக்க வல்லது.

அருகம்புல்லை ஒரு கையளவு எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, படர்தாமரை, அரிப்பு உள்ள இடத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர அந்தப் பிரச்சனை சரியாகும்.

அருகம்புலுடன் மஞ்சள், கிச்சிலி கிழங்கு வெட்டிவேர் ஆகியவற்றை சமமாக எடுத்து இடித்து நீர் விட்டு மை போல அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை தலைக்குத் தேய்த்து குளித்து வர பொடுகு பிரச்னை சரியாகும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, அதிகப்படியான இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் குணமாக அருகம்புல்லை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து ஒரு டம்ளர் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கையளவு அருகம்புல்லை எடுத்து நன்றாக அரைத்து அதனுடன் காய்ச்சாத பசும்பால் கலந்து குடித்து வர, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். நாய், பூனை போன்ற சில பிராணிகள் கூட அவ்வப்போது சாலையோரத்தில் உள்ள அருகம்புல்லை கடித்துத் தின்பது அதன் ஜீரண சக்திக்காகத்தான். இத்தனை சிறப்பு வாய்ந்த அருகம்புல்லை நாமும் பயன்படுத்தி பலன் பெறலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com