ஆயுட்காலத்தை அதிகரிக்கும் அறுசுவை உணவுகள்!

arusuvai foods
arusuvai foods
Published on

மது முன்னோர்கள் நாம் உண்ணும் உணவுகளை அதன் சுவையை மையப்படுத்தி ஆறு வகைகளாகப் பகுத்து வைத்துள்ளனர். ஒவ்வொரு சுவையும் ஒரு சிறப்பான பணியைச் செய்யும் திறன் படைத்தவை. தங்கள் தினசரி வாழ்க்கையில் அறுசுவை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், தற்கால இளைஞர்கள் நாவின் சுவைக்கு அடிமையாகி இனிப்பும் சுவையும் மிக்க உணவுகளை மிக அதிக அளவில் சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் சீக்கிரமாகவே மூப்புத் தன்மையை அடைந்துவிடுகிறது. இதன் காரணமாகவே தற்கால இளைஞர்கள் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். முப்பது வயதிற்குள்ளாகவே முடி கொட்டத் தொடங்கிவிடுகிறது.

துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு என உணவில் அறுசுவைகள் உள்ளன. இந்த ஆறு வகையான சுவை கொண்ட உணவுகளை சரிசம விகிதத்தில் நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எதையும் நன்மை பயக்கும் என்று கருதி அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

இனிப்புச் சுவையானது கரும்பு, சர்க்கரை, வெல்லம், கற்கண்டு போன்றவற்றில் நிறைந்துள்ளன. மேலும், பல வகையான பழங்கள் இனிப்புச் சத்தைக் கொண்டுள்ளன. இரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி படைத்த கரும்புச் சாறு உடலுக்கு மிகவும் நல்லது. கரும்புச் சாற்றை வாரத்திற்கு ஒரு முறை குடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துப் பயன்படுத்தலாம்.

புளிப்புச் சுவையானது புளி, எலுமிச்சை, தக்காளி, கிச்சிலி, புளிச்ச கீரை போன்றவற்றில் நிறைந்துள்ளது. இவற்றை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும். புளிப்பு இரத்தக் குழாயில் படியும் நச்சுத்தன்மை மிக்க அழுக்குகளை நீக்கும் சக்தி உடையது. கோடைக்காலங்களில் எலுமிச்சை சாற்றை அவ்வப்போது அருந்தலாம். ஆனால், புளிப்புச் சுவையினை அளவோடு சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்.

கசப்புச் சுவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. கசப்பு உடலிலுள்ள தீய கிருமிகளை அழித்து உடல் சக்தியை அதிகரிக்கச் செய்யும். கசப்புச் சுவையானது வெந்தயம், வேம்பு, கடுகு, பெருங்காயம், சீரகம், சுண்டைக்காய், பாகற்காய், அகத்திக்கீரை போன்றவற்றில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் பாகற்காயை சமைத்துச் சாப்பிட வேண்டும். வேப்பம்பூவை கோடைக்காலங்களில் பதப்படுத்தி வைத்துக் கொண்டு ஆண்டு முழுவதும் ரசம் வைத்துச் சாப்பிடலாம். சுண்டைக்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரை பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது.

துவர்ப்புச் சுவையானது வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, அத்திக்காய், மாவடு, விளாம்பழம், மாங்காய் முதலியவற்றில் நிறைந்துள்ளது. வாரத்திற்கொரு நாள் நார்சத்து மிக்க வாழைப்பூவை நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். துவர்ப்பு இரத்தத்தை சரியாக உறைய வைக்கும் தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள்:
பணிபுரியும் இடத்தில் பிறரிடம் பேசக்கூடாத 5 விஷயங்கள்!
arusuvai foods

காரம் உடலுக்குச் சூட்டை அளிக்கும் தன்மை உடையது. காரச் சத்தானது மிளகாய், மிளகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிங்கு போன்றவற்றில் நிறைந்துள்ளது. காரச்சத்தை அளவோடு சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்.

உப்புச் சத்து உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இது வாழைத்தண்டு, கீரைத்தண்டு, புடலங்காய், பூசணிக்காய், முள்ளங்கி, சுரைக்காய் போன்ற உணவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது. உப்புச் சத்தை தேவையான அளவிற்கே நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உப்புச் சத்து குறைந்தாலும் ஆபத்து. அதிகமானாலும் ஆபத்து.

சுவைக்காக நாம் உணவை சாப்பிடுகிறோம். இதில் தவறில்லை. ஆனால், உடல் நலத்திற்காகவும் நாம் பலவிதமான உணவுகளைச் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நாம் சாப்பிடும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் தினந்தோறும் நினைவில் நிறுத்தி அறுசுவை உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகத் திகழும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com