ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும். இது சுவாசப் பாதைகளில் ஏற்படும் வீக்கத்தினால் ஏற்படுவதுடன், சுவாசிப்பதையும் கடினமாக்குகின்றது.15ம் நூற்றாண்டில் வாழ்ந்த வால்ஹெல்மாண்ட் என்ற மருத்துவர்தான் ஆஸ்துமா என்பது சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் என்று முதன்முதலாகத் தெரிவித்தார். அதன் பிறகு 1698ம் ஆண்டு புளோரோ என்ற ஆங்கில மருத்துவர் மூச்சுக் குழாயின் சுருக்கமும், தடிப்பும்தான் ஆஸ்துமாவுக்குக் காரணம் என்று எடுத்துரைத்தார்.
இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஆஸ்துமா, எந்த வயதினருக்கும் வரக்கூடிய பிரச்னையாகும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகமாக இது காணப்படுகின்றது.
உடற்பயிற்சியின்போது அல்லது இரவு வேளையில் இருமல் அதிகமாக இருக்கும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மார்பு பகுதியில் இறுக்கம் மற்றும் அழுத்தம் ஏற்பட்டு, அது மூச்சு இறுக்கமாக இருக்கும். நுரையீரலில் அதிகமான சளி மற்றும் இருமும்போது அதிகமான மார்பு வலி, வேகமான இதயத்துடிப்பு ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகள்.
இதைத் தடுக்க சில வழிகளும் உள்ளன. அதிக சூட்டில் இருந்து விட்டு திடீரென அதிக குளிர் உள்ள இடத்திற்கு செல்லக் கூடாது. வெயில் அதிகமாக அடிக்கும் நண்பகல் நேரங்களில் வெளியில் உலாவுவதைத் தவிர்க்க வேண்டும். வாகனப்புகையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தூசி, துப்படை இருக்கும் இடத்தில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கம்பளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டில் தலையணை உறை, போர்வைகளை வாரம் ஒருமுறை துவைத்து மாற்ற வேண்டும்.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் டிவி பார்ப்பதில் நேரம் செலவிடுகிறவர்களுக்கு ஆஸ்துமா நோய் வரும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள். இதனால் ஒரு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து உங்களை ரிலாக்ஸ் செய்து கொண்டு பிறகு டிவி பாருங்கள் என்கிறார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.
உணவுகளுக்கும் ஆஸ்துமாவிற்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு வருவதன் மூலம் 30 சதவீதம் ஆஸ்துமா தொந்தரவு குறையும் என்கிறார்கள். (ஒமேகா 3 உள்ள மீன் போன்ற உணவுகள், கேரட், அவகோடா, பெர்ரி பழங்கள் ). அலர்ஜி உணவுகளை அறிந்து அவற்றைத் தவிர்ப்பது ஆஸ்துமா தீவிரத்தைக் குறைக்கும். ஆஸ்துமா நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும் உணவுகள் என துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உலர் பழங்கள், சூப்புகள், உருளைக்கிழங்கு சேர்த்த உணவுகள், பாலாடைக்கட்டி, காளான், சோயா சாஸ் ,கத்திரிக்காய்,சேப்பங்கிழங்கு,முட்டை போன்றவை உள்ளன.
ஆஸ்துமா குணமாக அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக காற்று செல்வதற்கு இடமிருக்க வேண்டும். கருவுற்ற காலத்தில் தாய்மார்கள் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள். தொடர்ந்து திராட்சை சாப்பிட நுரையீரல் அழற்சி நோயான ஆஸ்துமா மற்றும் பிசி ஓடி நோய் தாக்கம் குறையும் என்கிறார்கள் ஜார்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஆரோக்கியமான உணவை உண்ணுதல் பிரெஷ்ஷான காய்கறிகள், பழங்கள், வீட்டில் ஃபிரெஷ்ஷாக சமைத்த உணவுகள், ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகள், நட்ஸ், வைட்டமின் D, மெக்னீசியம் நிறைந்த கீரை வகைகள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை, தேன் போன்றவை சாப்பிடுவது ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க உதவும்.
ஆஸ்துமா நோயை குறைக்கும் ஆற்றல் பீட்டா கரோட்டினுக்கு உண்டு என்கிறார்கள் இஸ்ரேல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். தினமும் 64 மில்லி கிராம் பீட்டா கரோட்டின் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமாவால் வரும் மூச்சுத் திணறல் சிரமம் குறையும் என்கிறார்கள். இது நுரையீரல் திசு சிதைவடைவதையும் தடுக்கும் என்கிறார்கள்.
மூச்சுத் திணறல் என்பது ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறி. இதனை தவிர்க்க கிவி பழங்கள் உதவுவதாகக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து கிவி பழங்கள் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் செயல்பாடு மேம்படுவதாக ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது. அதேபோல, ஆப்ரிகாட் பழத்தில் உள்ள சத்துகளும் ஆஸ்துமா மற்றும் காச நோயை குணப்படுத்தும் என்கிறார்கள். மூச்சு விடுவதை எளிதாக்கும் ஆற்றல் வைட்டமின் டிக்கு உள்ளது என்கிறார்கள் நியூசிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
மூச்சுப்பயிற்சி, இலகுவான தேக பயிற்சிகள் ஆகியவை ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கும். வழக்கமான உடற்பயிற்சி தினமும் காலை அல்லது மாலையில் செய்ய, மன அழுத்தத்தை போக்கவும், தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கவும் உதவும். யோகா செய்ய அது ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும். உடற்பயிற்சி நுரையீரல் அளவை அதிகரித்து, சுவாசத்தை சீராக்கி ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய்கள் வராமல் தடுக்கிறது.