கோடைக்காலத்தில் சாப்பிட ஏற்ற பேயன் வாழைப்பழத்தின் நன்மைகள் தெரியுமா?

Beyan Banana Fruit
Beyan Banana Fruithttps://kumaribasket.com
Published on

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மனிதர்களின் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் அடங்கியுள்ளன. வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பொதுவானவை பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி போன்றவை. நேந்திரன், செவ்வாழை, ஏலக்கி, பச்சை வாழைப்பழம், மலை வாழைப்பழம், பேயன், நாட்டு வாழைப்பழம், சிங்கன் வாழைப்பழம், மட்டி வாழைப்பழம், கதளி என இன்னும் பல வகைகள் உள்ளன.

தமிழ் நாட்டு வாழைப்பழ வகைகளில் ஒன்றிற்கு மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனின் பெயரை வைத்துள்ளனர். அதுவே பேயன் வாழைப்பழம் எனப்படுகிறது. பரமசிவன் பேய்கள் உலாவும் சுடுகாடுகளில் இருப்பதாகக் கருதப்பட்டதால் அவர் பேயன் எனப்பட்டார். ஆகவே, இந்த வகைப் பழம் பேயன் வாழைப்பழம் எனப்பட்டது.

ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் ஒவ்வொரு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இதில் பேயன் வாழைப்பழம் மிகவும் முக்கியமானது. இதனுடைய தோல் மிகவும் கெட்டியாக இருக்கும். மஞ்சள் கலரில் காணப்படும். நன்கு பழுத்த பழம் மிகவும் இனிப்பு சுவை கொண்டிருக்கும்.

பேயன் வாழைப்பழத்தின் நன்மைகள்: அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது பேயன் பழம். கோடைக்காலத்தில் உடல் அதிகளவில் சூடாகும். பேயன் வாழைப்பழம் உடலில் உள்ள சூட்டை தணிக்கக் கூடியது. பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூடானது குறையும். இந்த பழமானது அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள்:
'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Beyan Banana Fruit

சிலருக்கு வயிற்றுப் புண் மற்றும் குடல் புண் பிரச்னை இருக்கும். அவர்கள் தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் விரைவில் ஆறும்.

பேயன் பழமானது மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுவோர் இந்தப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அந்தப் பிரச்னை தீரும்.

நோஞ்சானாக உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை கொடுத்து வருவதன் மூலம் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் பெறும். வாரத்தில் 2 அல்லது 3 நாள்கள் இந்த பழத்தைக் கொடுக்கலாம். சளி பிரச்னை இருப்பவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிடக் கூடாது. ஏனென்றால். இந்தப் பழமானது அதிக குளிர்ச்சி தன்மை கொண்டதால் சளி இன்னும் அதிகமாகும்.

கோடைக்கால உடல் சூட்டைத் தணிக்கும் பேயன் பழத்தை உண்டு நாமும் நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com