

இடி மின்னல் மீதான அதீத பயத்தை அஸ்ட்ராஃபோபியா (Astraphobia) என்று அழைக்கிறார்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக் கூடியது. சரியான விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்த பயத்தை நம்மால் கடந்து வர முடியும்.
1) அறிகுறிகள்:
நடுக்கம், படபடப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை மூச்சு விடுவதில் சிரமம்.
இடி சத்தம் கேட்காமல் இருக்க காதுகளை இறுக்கமாக மூடிக்கொள்வது.
பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுவது.
மழைக்காலங்களில் அல்லது மேகமூட்டம் இருக்கும்பொழுது வீட்டை விட்டு வெளியேற அஞ்சுவது.
2) காரணங்கள்:
கடந்த கால மனஅதிர்வுகள்:
சிறு வயதில் இடி மின்னலால் ஏற்பட்ட விபத்துகள் அல்லது பயமுறுத்தும் அனுபவங்கள் மனதில் ஆழமாக பதிந்திருப்பது.
மரபியல் மற்றும் குடும்ப சூழல்:
பெற்றோர் இடி மின்னலுக்கு பயந்தால் குழந்தைகளும் அந்த பயத்தை கற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.
இயற்கை ஆபத்து பற்றிய விழிப்புணர்வு:
இடி மின்னல் எதனால் ஏற்படுகிறது என்ற அறிவியல் பூர்வமான புரிதல் இல்லாமல் இருப்பது.
3) தீர்வுகள்:
அறிவியல் புரிதல்:
இடி மின்னல் குறித்த அறிவியலைத் தெரிந்து கொள்வது பயத்தைக் குறைக்க உதவும். மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிக்க கான்கிரீட் கட்டிடங்களுக்குள் அடைக்கலம் அடைவது சிறந்தது.
பாதுகாப்பான இடங்கள்:
இடி மின்னலின் போது மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கவும். கார்கள் மற்றும் முழுமையாக மூடப்பட்ட வாகனங்களுக்குள் இருப்பது பாதுகாப்பானது.
பயத்தை போக்கும் வழிகள்:
இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தாமினி செயலி (Damini App) மூலமாக உங்கள் பகுதிக்கு இடி, மின்னல் வர இருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம்.
கவனத்தை திசை திருப்புதல்:
பயம் தரும் சத்தத்திலிருந்து கவனத்தைத் திருப்ப உங்களுக்கு பிடித்தமான இசையைக் கேட்பது அல்லது புத்தகத்தை படிப்பது அல்லது குடும்பத்தினருடன் பேசுவது போன்ற செயல்களில் கவனத்தை திசை திருப்பலாம்.
மூச்சுப்பயிற்சி:
இடி சத்தம் கேட்கும்போது பதற்றம் அடைந்தால், கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு (deep breathing) எடுத்து பயிற்சி செய்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி பீதியைக் குறைக்கும்.
படிப்படியான பழக்கம் (Exposure):
ஜன்னல் வழியாக மழையை ரசிப்பது அல்லது இடியின் சத்தத்தை குறைந்த ஒலியில் கேட்டு, அந்த சூழலுக்கு உங்கள் மனதை பழக்கப்படுத்தலாம்.
இந்த பயம் உங்களை இயல்பாக வாழ விடாமல் தினசரி வாழ்க்கையை பாதித்தால், ஒரு மனநல மருத்துவரை அணுகி 'அறிவாற்றல் நடத்தை சிகிச்சை' (Cognitive Behavioural Therapy CBT) மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்வது நிரந்தர தீர்வைத் தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)