
நம் உடலின் இரைப்பை-குடல் இயக்கப் பாதை, கல்லீரல், ஹார்மோன் சுரப்பு மற்றும் நோயெதிர்ப்பு மண்டல ஆரோக்கியத்தில் குறைபாடு உண்டாக்கக் கூடிய எட்டு வகைப் பொருட்கள் நம் வீட்டில் உள்ளன. அவை எவை எனக் கண்டுபிடித்து, அவற்றை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேன்மையடையும். அந்த 8 வகைப் பொருட்களின் பட்டியல் இதோ..
1. நான்-ஸ்டிக் சமையல் சாதனைங்கள் சிறந்த முறையில் உபயோகப்படக் கூடியதாக இருந்த போதும் அவற்றில் கீறல்கள் விழும் போது அதிலிருந்து வெளிப்படும் பெர் அண்ட் பாலி ஃபுளோரோ ஆல்கி (per-and polyfluoroalky) என்ற இரசாயனப் பொருள் உண்ணும் உணவுடன் கலந்துவிட வாய்ப்பாகும். அது கல்லீரல் பாதிப்பு, சம நிலையற்ற தைராய்ட் சுரப்பு, குழந்தையின்மை போன்ற ஆரோக்கியக் குறைபாடுகளை உண்டு பண்ணும்.
2. ஆஸ்பர்டேம் (aspartame), சக்ரலோஸ் (Sucralose) மற்றும் சாக்கரின் (Saccharin) போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் வயிற்றுக்குள்ளிருக்கும் மைக்ரோபியோம்களை எதிர்மறையாக வினையாற்றச் செய்து இரத்த சர்க்கரை அளவை நிலையற்றதாக்கி விடும். எனவே, எப்பொழுதும் ஸ்டீவியா, தேன் மற்றும் வெல்லம் போன்ற இயற்கை முறையில் உருவான பொருட்களை அளவோடு உபயோகிப்பது நலம் தரும்.
3. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மீது உஷ்ணம் அல்லது வெயில் படும்போது மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் BPA கசிந்து நீரில் கலந்துவிடும். அது நிலையற்ற ஹார்மோன் சுரப்பை உண்டுபண்ணி குடல் இயக்கம், மெட்டபாலிசம், கருத்தரித்தல் போன்ற செயல்பாடுகளில் குறை ஏற்படச் செய்யும்.
4. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், செயற்கை சுவையூட்டி, பாதுகாப்பான் (Preservative) போன்றவை சேர்த்து தயாரித்து, பாக்கெட்டில் அடைத்த உணவுகள் நாள்பட்ட வீக்கம், சமநிலையற்ற மைக்ரோபியோம் அளவு மற்றும் லீக்கி கட் சிண்ட்ரோம் போன்ற உடல்நலக் குறைபாடுகளை உண்டு பண்ணும்.
5. காற்று சுத்தப்படுத்தி மற்றும் மணமுள்ள மெழுகுவர்த்திகள், வொலாடைல் ஆர்கானிக் கூட்டுப் பொருள் மற்றும் ப்தாலேட்ஸ் (Phthalates) களை வெளியேற்றக் கூடியவை. இவை மூச்சு விடுவதில் சிரமம், கல்லீரல் பாதிப்பு, குழந்தையின்மை போன்ற ஆரோக்கியக் குறைபாடுகளை உண்டுபண்ணும்.
6. சலாமி, பேகான், ஹேம் போன்ற குளிரூட்டப்பட்ட இறைச்சி வகைகளில் நைட்ரேட்ஸ், நைட்ரைட்ஸ், அதிகளவு சோடியம் மற்றும் பாதுகாப்பான்கள் உள்ளன. இவை வயிறு வீக்கம், கோலோ ரெக்டல் கேன்சர், மற்றும் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகளை உண்டாக்கக் கூடியவை.
7. ட்ரெய்க்ளோஸன் என்ற கூட்டுப்பொருள் சேர்க்கப்பட்ட ஆன்டி பாக்ட்டீரியல் சோப்பானது சருமத்தின் இயற்கை மைக்ரோபியோம்களை பாதிப்படையச் செய்வதுடன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினைகளை உண்டு பண்ணவும் செய்யும்.
8. அதிகளவு நறுமணம் கொண்ட லாண்ட்ரி டிட்டர்ஜென்ட்ஸ் மற்றும் ட்ரையர் ஷீட்ஸ் உபயோகிக்கும் போது அதிலுள்ள நறுமணம் துணிகளில் தங்கி நாளடைவில் சருமத்தில் எரிச்சல், குறைந்த அளவில் வீக்கம் மற்றும் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினைகளை உண்டுபண்ணக் காரணிகளாகவும் ஆகக் கூடும்.
மேலே கூறப்பட்ட பொருட்களை உபயோகிப்பதிலிருந்து உடனடியாக விடுபட இயலாதபோது, படிப்படியாக அவற்றைக் குறைத்துக் கொண்டு வருவது ஆரோக்கியம் மேம்பட உதவி புரியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)