எச்சரிக்கை: தினமும் பால் காய்ச்சுகிறீர்கள்தானே?! ஜாக்கிரதை... இந்தத் தப்பை மட்டும் பண்ணாதீங்க...

milk storage tips
How to boil milk safely?Image credit: AI image
Updated on

இந்தியர்கள் பொதுவாகவே உணவுக்காக பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் சார்ந்து உள்ளனர். தினமும் இருவேளையாவது பால் சார்ந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வருகிறார்கள். பாலில் மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவையான கால்சியம், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் என ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவ்வளவு ஊட்டச்சத்து மிக்க பாலில் கெடுதல் சேர்ந்தால் என்ன ஆகும்?

​பாலில் பொதுவாக கோலிஃபார்ம் என்ற பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. மாட்டின் மடியினை சரிவர சுத்தம் செய்யாமல் பால் கறத்தல், சுத்தம் செய்யாத பாத்திரங்களை பயன்படுத்துவது, திறந்தவெளியில் பாலினை சேமித்து வைப்பது, வெப்பமான காலநிலையில் பாலினை குளிர்விக்காமல் நீண்ட நேரம் வைத்திருப்பது போன்ற காரணங்களினால் பாலில் பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கிறது. பொதுவாக பால் கறந்த உடனேயே குளிர்விக்கப்படுவதில்லை. இது பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

இவை தவிர, சால்மோனெல்லா மற்றும் ஈ-கோலி போன்ற ஆபத்தான கிருமிகளும் பாலில் வளர வாய்ப்புள்ளது. பாலில் உள்ள சர்க்கரை, புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
Witch's Milk என்றால் என்ன தெரியுமா? குழந்தைகள் ஜாக்கிரதை! 
milk storage tips

சாதாரணமாக கறந்தபாலின் வெப்பநிலை சுமார் 37°C ஆக இருக்கும். இந்த வெப்பநிலையில் பாக்டீரியாக்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகும். இதனால் பால் கறந்த ஒரு மணி நேரத்திற்குள் 4°C-க்கு வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட வேண்டும். பாலில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான கோளாறுகளுடன் மட்டும் விடுவதில்லை, வேறு சில உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

​1. ஊட்டச்சத்து குறைபாடு: பாலில் உள்ள புரதம், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பாக்டீரியாக்கள் சாப்பிட்டு விடுவதால் நாம் குடிக்கும் பால் வெறும் வெள்ளை திரவமாக மட்டுமே இருக்கும்.

2.​ உணவு நச்சாகுதல்: பாக்டீரியாக்களால் வெளியிடப்படும் நச்சுக்கள் பாலில் கலந்து இருக்கும். அதை நாம் அருந்திய பின்னர் வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவற்றை உண்டாக்கும்.

3.​ குடல் தொற்று: குடலில் தொற்றினை ஏற்படுத்தும் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அளவிற்கு மிகவும் அபாயமானது.

பாலைத் தூய்மைப்படுத்தும் முறைகள் (How to boil milk safely?):

1. பாலை ஒருமுறை நன்கு கொதிக்க வைத்து பின்னர் அதை ஆற வைப்பது, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும். பால் பொங்கி வந்தவுடன் உடனடியாக அடுப்பினை அணைக்க கூடாது. குறைந்த தீயில் 2 முதல் 5 நிமிடங்கள் வரை காய வைக்க வேண்டும். இது பாத்திரத்தின் அடியில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும்.

2. பாலை ஒருமுறை மட்டுமே சூடு படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் அதிலுள்ள பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அழிகின்றன. இதனால் போதுமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது.

3. பாலை தூய்மையான பாத்திரத்தில் காய வைக்க வேண்டும் மற்றும் சேமிக்க வேண்டும்.

4. பால் பாக்கெட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைக்கும் முன்னர், அந்தப் பாக்கெட்டுகளை நன்கு கழுவி விட்டு வைக்க வேண்டும்.

5. பால் வாங்கிய 15-20 நிமிடங்களுக்குள் அதைச் சூடுப்படுத்த வேண்டும் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? மக்கானா மில்க் ட்ரை பண்ணுங்க!
milk storage tips

தரத்தை எவ்வாறு கண்டறிவது?

பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பு இருப்பதை நம்மால் நேரடியாக அறிய முடியாவிட்டாலும், சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

i. பாலைச் சூடுபடுத்தும்போது திரிந்து விட்டால், அதில் அமிலத்தன்மை அதிகமாக இருந்து, பாக்டீரியாக்கள் அதில் வளர்ந்துள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ii. பாலில் லேசான புளிப்பு சுவை அல்லது வித்தியாசமான வாசனை இருந்தால் அந்த பால் கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தம்.

logo
Kalki Online
kalkionline.com