தூக்கத்திலும் கொழுப்பை சேர்க்கும் கெட்ட பழக்கங்கள்… ப்ளீஸ் வேண்டாமே!
நாம் தூங்கும்போதும் கூட உடல் எடை அதிகரிக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒரு உண்மை. போதுமான தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகள் தூக்கத்தில் கூட நமது உடலில் கொழுப்பை சேர்த்து உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். இந்தப் பதிவில் தூக்கத்தின்போது உடல் எடை அதிகரிக்கக் காரணங்களான சில கெட்ட பழக்கங்களைப் பற்றியும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும் பார்க்கலாம்.
தூக்கத்தின்போது கொழுப்பு சேர காரணமாகும் கெட்ட பழக்கங்கள்:
போதுமான அளவு தூக்கம் இல்லாதபோது உடலில் Leptin என்ற பசியைத் தணிக்கும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இது Ghrelin என்று பசி உணர்வை தூண்டும் ஹார்மோனின் அளவை அதிகரித்து அதிகமாக சாப்பிட தூண்டுவதால், உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
தூங்குவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பாக சாப்பிடுவது செரிமானத்தை பாதித்து இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். எனவே, போதுமான தூக்கம் இல்லாததால் மேலே குறிப்பிட்ட ஹார்மோன் சமநிலையின்மையால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
அதேபோல தூங்குவதற்கு முன் அதிக அளவான கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் மது அருந்துவது தூக்கத்தை வெகுவாக பாதித்து, மதுவிலுள்ள அதிகப்படியான கலோரி உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கும்.
மன அழுத்தமானது காட்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். ஹார்மோன் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கும் என்பதால், மன அழுத்தமும் இரவு நேரங்களில் நமது உடலில் கொழுப்பு சேருவதற்கு முக்கிய காரணமாகும்.
இரவில் தூங்கும்போது மல்லாக்க படுத்து தூங்குவது செரிமானத்தை பாதித்து இரவில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
தீர்வுகள்:
ஒவ்வொரு இரவும் 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். தூங்குவதற்கு குறைந்தது இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்துங்கள். தூங்குவதற்கு முன் எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள்.
தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களை கற்றுக்கொண்டு பயிற்சி செய்யவும். தூங்கும்போது சரியான தோரணையை பின்பற்றவும். படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஸ்மார்ட்போன் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
இவற்றை நீங்கள் முறையாக கடைப்பிடித்து வந்தாலே இரவில் உங்கள் உடலில் கொழுப்பு சேர்வது முற்றிலுமாக தவிர்க்கப்படும். நீங்கள் ஒழுங்காக தூங்கினாலே உடலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்பதால், தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

