
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களின் மீது பூச்சி மருந்துகளின் தாக்கம் அதிகரித்திருப்பதாக விவசாயத் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் உண்டாகும் ஆரோக்கியக் குறைபாடுகள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உற்பத்தி செய்யப்படும் பொருள்களை ஆல்கலைன் உபயோகித்து கழுவிய பின்னும் அல்லது அப்பொருள்கள் மீது 'ஆர்கானிக்' லேபிள் ஒட்டப்பட்டிருந்தாலும், பூச்சி மருந்துகளின் விஷத்தன்மை அதில் முற்றிலும் நீங்காமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
நாம் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களையே உட்கொண்டும், வடிகட்டிய நீரை அருந்தியும் வந்தாலும், கிளைஃபோசேட் உடலின் நரம்பு மண்டலங்களில் பரவுவதை தடுக்க முடியாது. இந்த ந்யூரோடாக்ஸின் (Neurotoxin) லிம்ஃபோமா (Lymphoma), பார்க்கின்சன்ஸ், கேன்சர் மற்றும் மல்டிபிள் க்ளேரோஸிஸ் (Multiple Sclerosis) போன்ற நோய்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றில், நாம் குடிக்கும் நீரில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்ப்பதன் மூலம் உடல் முழுதும் பரவியுள்ள 'கிளைஃபோசேட்' (Glyphosate) என்ற நச்சை நீக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவின் எட்டில் ஒரு பகுதியை (⅛) நாம் குடிக்கும் நீரில் தினசரி சேர்த்து அந்த நீரை அருந்தி வந்தால் இந்த நச்சுக்களை வெளியேற்ற முடியும் என்று நம்பப்படுகிறது.
கிளைஃபோசேட் ஒரு ஹெர்பிசைட் (Herbicide) (அதாவது அதன் விஷம் உணவுப் பொருளின் திசுக்கள் மற்றும் பிற பாகங்களிலும் கலந்துள்ளது என்று அர்த்தம்) என்றும், இது பல நாடுகளில் உபயோகத்தில் உள்ளதென்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீப காலத்தில் கிளைஃபோசேட் கலந்த உணவுப் பொருள்கள் அஜீரணம் மற்றும் கேன்சர் உண்டுபண்ணக் காரணிகளாகின்றன என்பது தெரிந்தபின், இந்த நச்சை நீக்குவதற்கான வழி முறைகளை விரைவில் கண்டறிய விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பேக்கிங் சோடா, கிளைஃபோசேட் நஞ்சை உணவுப் பொருளின் மேற்பரப்பிலிருந்து நீக்க வல்லது என்று கூறப்பட்டாலும், அதற்கான நம்பகமான ஆதாரம் ஏதுமில்லை என்றும் தெரிகிறது.
பின் என்னதான் மாற்று வழி என்ற கேள்வி எழுகிறது.
கிளைஃபோசேட் மிகக் கடினமான கெமிக்கல் என்பதால், பழங்கள் காய்கறிகளின் தோலை நீக்கிவிட்டு உண்ணலாம். மேலும், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்ஃபோரபேன் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அவை கல்லீரலின் செயல்பாடுகளை ஊக்குவித்து நச்சுக்கள் வெளியேற உதவி புரியும்.
நம்பகமான கடைகளிலிருந்து ஆர்கானிக் பொருட்களை மட்டும் வாங்கி உபயோகிக்கலாம். 'கிளைஃபோசேட் ஃபிரீ' லேபிள் ஒட்டிய பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குவதும் ஆரோக்கியம் தரும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.