Breastfeeding: தாய்ப்பாலை எப்படி தந்தால் குழந்தைக்கும், தாய்க்கும் வசதியாக இருக்கும்?

Breastfeeding tips
Breastfeeding tips
Published on

தெரிந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது பார்க்கலாம் என்று சென்றேன். அந்த பெண்ணும் அவள் தாயும் ஒரு அறைக்குள் நெடு நேரமாக அழும் குழந்தையை வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருந்தார்கள். என்ன விஷயம்? என்று கேட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் தர அந்த இளம் பெண்ணுக்கு தெரியவில்லை என்றும் அது கற்றுத் தரவே எப்பொழுது பால் தந்தாலும் அவரது அம்மாவும் உடன் இருப்பார் என்றும் சொன்னார்கள்.

ஒரு இளம் பெண்ணுக்கு குழந்தை பிறப்பு என்பது பெரும் சவாலான விஷயம். குழந்தையின் முகத்தை பார்த்ததும், அதுவரை அனுபவித்த பிரசவித்த வலியெல்லாம் மறந்து போனாலும் அதன் பின் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது என்பது அடுத்த பெரும் சவாலாகவே அமைந்து விடுகிறது.

தாய்ப்பால் புகட்டுவதில் என்ன சிரமம் இருக்க முடியும்? இருக்கிறதே..

தாய்ப்பாலை (Breastfeeding) எப்படி தந்தால் குழந்தைக்கும், தாய்க்கும் வசதியாக இருக்கும்?

எச்சரிக்கை எதில் தேவை?

என்பது போன்ற சில விஷயங்கள் இங்கு.

தாய்ப்பாலூட்டுவதற்கான(Breastfeeding) சில பாதுகாப்பான முறைகள்

1. பாலூட்டுவதற்கு முன் கைகளைக் கழுவி, மார்பகப் பகுதியையும் சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் முதுகு மற்றும் கைகளுக்கு தகுந்த ஆதரவுடன், பாலூட்டுவதற்கு வசதியான நிலையைக் கண்டறிந்து அதன்படி அமர வேண்டும்.

2. குழந்தை வசதியாக பாலை அருந்தும் வகையில் முலைக்காம்புகள் சரியாக அதன் வாயில் பொருந்தியிருப்பதை உறுதி செய்யவும்.

3. இப்போது பால் தரும் பெண்களுக்காகவே வசதியான மார்பு பகுதிகளில் ஜிப் வைத்த உடைகள் வந்துள்ளது. அதை வசதிக்கேற்ப வாங்கி அணியலாம். இறுக்கமற்ற தளர்ந்த ஆடைகளே நல்லது.

4. ஜாக்கெட் அணிந்து பால் தரும் சூழல் வந்தால் அதிலிருக்கும் ஊக்குகளில் கவனமாக இருங்கள். குழந்தையின் கண்களில் அல்லது கன்னத்தில் ஊக்குகள் படும் வாய்ப்பு உண்டு.

5. பால் நன்கு சுரப்பதை பராமரிக்கவும், பால் கட்டுவதைத் தடுக்கவும் அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

6. சிலருக்கு முலைக்காம்புகள் சிறியதாக வெளிவராமல் இருக்கலாம். அப்போது மருத்துவர்கள் பம்ப் முறையில் பாலை தர சொல்வார்கள். அந்த பம்பிங் உபகரணத்தை உபயோகித்த பின் மிதமான சுடுநீரில் கழுவி வைப்பது கிருமிகள் அண்டாமல் தடுக்கும்.

7. பாலுக்கும் மார்பகங்கள் அளவுக்கும் சம்பந்தமே இல்ல. அதேபோல் காம்புகள் சிறியதாக இருந்தால் பயப்பட வேண்டாம். விடாமல் குழந்தை வாயில் வைத்து சப்ப வைத்தால் காம்புகள் வெளிவரும். அதுவரை ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்.

8. சில வேளைகளில் தாய் சேய் இருவரும் தூங்கி பால் தரும் நேரம் கடந்து விட்டால் மார்பில் பால் கட்டும். மிதமான சூட்டில் நீர் வைத்து மார்புகளை லேசாக அழுத்தம் தந்து அதை பீய்ச்சி வெளியே விட்டு பின் தருவது நல்லது.

9. தற்போது பணிக்குச் செல்லும் பெண்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்து செல்வது பெருகியுள்ளது. இதிலும் எச்சரிக்கை தேவை. தாய்ப்பாலை வெளிப்படுத்தவும், சேமிப்பதற்கும் சுத்தமான உபகரணங்கள் மற்றும் சேமிப்பு கொள்கலன்களைப் பயன்படுத்தவும்.

10. காற்று புகாத கொள்கலன்கள் அல்லது தாய்ப்பால் பைகளில் தாய்ப்பாலை சேமித்து, தேதி மற்றும் நேரத்தைக் குறிக்கவும். மாசுபாடு மற்றும் கெட்டுப்போவதைத் தடுக்க தாய்ப்பாலை பாதுகாப்பாகக் கையாளவும்.

11. பாலூட்டும் பெண்கள் சிலருக்கு இயற்கையிலேயே குறைந்த அளவில் பால் சுரக்கும். அப்போது மாற்று வழியாக பால் பவுடர் மற்றும் பால் பாட்டில்களை உபயோகிக்க வேண்டும். இதிலும் வேண்டும் எச்சரிக்கை.

12. உங்கள் குழந்தைக்கு பொருத்தமான பால் கலவையைத் தேர்வு செய்ய குழந்தை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

13. நலம் பாதிக்கும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க பாட்டில்கள் மற்றும் உபகரணங்களை ஸ்டெரிலைஸ் முறையில் கிருமி நீக்கம் செய்யவும்.

14. பால் பவுடர் உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களின்படி பால் கலவையை சரியான அளவுகளில் தயாரிக்கவும்.

இதையும் படியுங்கள்:
சின்ன பூச்சி பெரிய பிரச்னை: கொசுக்கடிக்கு வைத்தியம்... அறிவியல் தரும் விளக்கம்!
Breastfeeding tips

இவைகள் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் ஒரு குழந்தையின் ஆயுள் வரை ஆரோக்கியம் தரும் மூலகாரணமாக அமையும் தாய்ப்பால் விஷயத்தில் வேண்டும் அதிக கவனம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com